தேகம் துறத்தல்...!
20 வைகாசி 2018 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 10377
பின்னிரவின் உறக்கம் கலைக்கும் மழை
இப்போதெல்லாம் புலன்களைக் கிளர்த்துவதில்லை
உனது வலுத்த கரங்களுக்குள் சிறைப்படத் துடித்த
வேட்கை நிரம்பிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்
சுரக்காத காம்புகளை வலிந்து உறிஞ்சும்
பலனற்ற எத்தனமாய் தோன்றுகிறது
இதே அறையின் சாளரத்தில், கட்டில் விளிம்பில்
குளியலறையின் நிலைப் படிகளில் என
உன் பாதம் படும் இடங்களிலெல்லாம்
தனிமையை கிடத்தி வைத்திருந்தேன்
பறவைகள் கூடடையும் அந்திக் கருக்கலில்
அதற்கு புதிய சிறகுகள் முளைக்கும்
அதன் ஓசைகளற்ற படபடப்பில்
அடிவயிற்றில் உருண்டையென உருளும்
காமத்தின் தீச்சுவடு
நீயோ என் தனிமையை அனாதையாக்கி விட்டு
உன் இருப்பை மட்டுமே நிர்வகிக்கும்
உடல் நாடகம் அரங்கேற்ற முனைகிறாய்.
காய்ந்த நிலங்களில் ஈரம் பாய்ச்சாத
மழையை ஒத்த சாரமற்ற முத்தங்கள்
கலவியின் கணங்களைத் தாங்கொணாச் சுமையாக்குகிறது
நீ எப்போதுதான் அறிந்து கொள்வாய்?
இன்பத்தைப் பேணுவதென்பது
கடும் வெப்ப நாளொன்றில்
நதியில் கால் மட்டும் நனைத்துப் போவதல்ல
நிலவறையின் பேழையில்
பூட்டிப் பாதுகாத்த பொக்கிஷத்தை எடுத்து
ஆன்மாவை அணி செய்வதற்கு ஒப்பானது..
கைப்பிடிக் காதலும் கைப்பிடிக் காமமும்
கலந்துண்ணாத உன் பசியைச் சபித்தவாறு
ஒவ்வொரு இரவிலும்
என் தேகம் துறந்து வெளியேறுகிறேன்
உன்னைக் கூடிக் கொண்டிருக்கும்
என்னைக் கொலை செய்து விட்டு
குருதிக் கறைகள் மணக்கும் கரங்களோடு உறங்குகிறேன்..