உயிர் பிரிந்த பிறகும் அழுகிறது என் ஆத்மா...
27 புரட்டாசி 2012 வியாழன் 16:06 | பார்வைகள் : 10357
உயிரற்ற என்னுடல் மரணப்பெட்டியில்
மூடப்படாமல் கிடக்கிறது அஞ்சலிக்காக,
கூடவே என்னை விட்டுப்பிரிந்த ஆத்மா
நோட்டமிடுகிறது என்னைச்சூழ்ந்து
நிற்பவர்களைப் பார்த்து............
வெள்ளைத்துணித்துண்டால் கட்டப்படுகின்றன
என் இரு காற்பெருவிரல்களும்,
கைவிரல்கள் பிணைக்கப்படுகிறது,
மூக்கின் இரு ஓட்டைகள் பஞ்சினால் அடைக்கப்படுகிறது,
நெற்றியிலே நாணயக்குற்றி,
செத்த பிறகும் எத்தனை சித்திரவதை......
நான் மனமுவந்து கட்டியவளின் ஓர் இதயம் அழுகிறது,
அழகிய மும்மக்களைத் தந்தவர் என்ற நன்றிக்காக,
மறு இதயம் மகிழ்கிறது,
அடுத்த தெரு வீட்டில் இருந்தவனுடன் இருந்த
அந்தரங்க வாழ்வுக்கு முழு விடுதலை வந்ததென்று......
இதுகண்டு முகத்தில் அவ்வளவு சோகத்தோடு,
வாழையிலை முழுதும் உதிரமாய்
மாறினாலும் உண்டாக வேண்டும்
என்பதை முன் தீர்மானித்தவள் போல,
அவன் மனைவியும் புலம்புகிறாள்.........
பலர் அறியாமல் கடன் பெற்றவன்
கெட்டியான மாலையிட்டு
கண் கலங்குகிறான்,
அவன் அகத்திலும் பூரிப்பு,
இனியென் தொல்லை இருக்காதல்லவா.......
சொத்துக்களை அனுபவிப்பதில்
தடையாக இருந்தவன் சரிந்ததில்,
சகோதரன் கண்ணில் கொள்ளை மகிழ்ச்சி,
ஆனாலும் யாவரும் அறிய
முதலைக்கண்ணீர் வடிக்கிறான்.......
நேர்மையாய் நான் உழைத்த சேமிப்புப் பணத்தில்,
உரித்துடையவர் யாரென்பதில்,
சட்ட ஆலோசனை பெறுகிறார்கள்,
என்னை அப்பா என்றழைத்த முச்செல்வங்கள்........
உயர் பதவிகளைக் காண கனாக்கண்டிருந்த
அலுவலக சகபாடிகளுக்கு என் இழப்பு
ஓர் வரப்பிரசாதம்,
ஒரு விழாவாக கொண்டாடுகிறார்கள்........
கட்டியவளின் சொல்லையும் கடந்து
தெருவில் அனாதையாய்க் கிடந்த
நாய்க்குட்டியை என் அரவணைப்பில் வளர்த்தேன்,
அது ஒன்றுதான் மூலையில் கிடந்து
கலக்கத்தில் அழுகிறது உண்மையாக.....
மேகம் குவியும்போது யானை போலவும்
சிங்கம் போலவும் சித்திரங்கள் தோன்றுகின்றன,
காற்றடித்ததும் அவை கலைந்துவிடுகின்றன,
மனிதர்களின் மனப்போக்கிலும்
அத்தகைய சித்திரங்கள் உண்டு,
அந்த சித்திரங்களை நம்பி
ஏமாறுகிற கோமாளிகளுமுண்டு,
நானும் இன்று அந்த கோமாளியாகிவிட்டேனே,
என் விதி அதுவென்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.......
இன்னொரு பிறப்பிருந்தால் இறைவனே !,
என்னை ஐந்தறிவு ஜீவனாக பிறக்கவிடு,
இந்த மானிட ஜென்மங்களின் பொய் முகங்களுடன்
வாழ்ந்த வாழ்க்கை போதும்............