கரும்புலிகள்..
5 ஆடி 2012 வியாழன் 19:26 | பார்வைகள் : 10249
2.8.1994 அன்று,
என்றும் போல் அன்றும்,
கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான்.
படுவான் கரையில் விழுந்தான்.
இரவு நகர்ந்தது.
தாயகத்தை தலைமுதல் கால்வரை
போர்த்திவிட அதிகாலை ஆரம்பமானது.
'பலாலி"
நீண்டகாலம் தமிழனின் பாதம் படியாத நிலம்
சிங்களப்பாட்டுக் கேட்டு சினந்திருக்கும் மரங்கள்.
வீசும் காற்றில் கூட அந்நியச் நெடி
செம்பாட்டு மண்.
பூமிபுத்திரர்களின் வருகைக்காக காத்திருந்தது.
பகைவனின் படைத்தளத்தில்
பாட்டும் கூத்தும் பரவிக் கிடந்தது.
முன்னனிக் காவலரணில்......
அவர்களுக்கு முழு நம்பிக்கை
எவன் நுளைவான் என்ற இறுமாப்பு
நாளை............
வசாவிளானுக்கு மாடு தேடி வருபவனையும்
கட்டுவனுக்கு வீடு பார்க்க வருபவனையும்
எப்படிக் கொல்லலாம்
எங்கு எறிகணை வீசலாம்.
எவ்விடத்தில் குண்டு போடலாம்.......
பியர் அடிக்கும் உயர்மட்டப் பேச்சுகள் முடிந்து
அதிகாரிகள் நுழம்பு வலைக்குள் நுழைய
விளக்குகள் நூருகின்றன....
யாரங்கே.......
விமான ஓடு பாதைக்கு அருகிலும்
கட்டளைப் பணியகத்துப் பக்கமாகவும்
மெல்ல, மெல்ல நகரும் இவர்கள் யார்.
'கரும்புலிகள்;"
காற்று புன்னகைத்தபடி பெயர்கள் உச்சரித்தது
மேஜர் நிலவன்
மேஜர் ஜெயம்
மேஜர் திலகன்
கப்டன் திரு
கப்டன் நவரத்தினம்
லெப்டினன்ட் ரங்கன்
விரல் மடித்து எண்ணிவிட்டு
காற்று விசிலடித்தபடி நகர்கிறது.
இருண்ட வானத்தில் வெள்ளியொன்று
இப்படிக் குரல் கொடுத்து
'வீரத்தின் வேர்களே! வெல்லுங்கள்
வழியனுப்பி வைத்த வரலாறு காத்திருக்கும்
புகுந்து விளையாடுங்கள்.
கட்டளைக்காக கரும்புலிகள் காத்திருந்தனர்.
'வோக்கிரோக்கி" உயிர்த்தது.
முதல் வெடி விழுந்தது.
கொல்லும் எமன் வாகனம்
'பெல்" உலங்குவானூர்தி எரிந்தது.
'பவள்" கவச வாகனம் சிதறியது.
எவர் என்னாலும் எமக்கென்ன
குண்டு விமானம் குடல் தெறிக்க ஓடியது.
ஆணவத்துக்கு அடி விழுந்தது.
கரும்புலிகளுக்கு
எட்ட முடியாத சிகரங்கள் எதுவும் இல்லை.
தொட்டசைக்க முடியாத சுமைகள் இல்லை.
கரும் புலிகள்
வேர்களை வெட்ட மட்டுமல்ல...
ஆணிவேர்களையும் அறுக்கக் கூடியவர்கள்.
கரும்புலிகளே,
சாவுக்குமட்டும் ஓப்பாரி வைக்கும் உலகம்
உங்களை எப்படி உணர்ந்து கொள்ளும்
முரடர்கள் என்றே முடிவெடுக்கும்.
உங்களுக்கு இளகிய இதயம் என்று
உலகம் எப்போது உணர்ந்து கொள்ளும்
'என் இனியவளுக்கு"
என்றொர் கடிதம் எழுதி வைத்துவிட்டு
பலாலிக்குள் புகுந்த பச்சைத் தளிரே!
உன்னிதயம் கள்ளிச் செடியல்ல........
முல்லைக் கொடி..
மெல்லிய ஊற்றின் தோற்றுவாய் நீதான்.
உன் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில்
காதல் கட்டவிழ்ந்திருந்தது.
ஆனால்,
தலைவனின் பெயரையல்லவா
உன் இதயம் உச்சரித்தக் கொண்டது.
உங்களை உலகம் எப்படி உணர்ந்து கொள்ளும்
அன்று போகிறோம் என்றீர்கள்.
எங்கே என்றனர் தோழர்கள்,
'கிட்டண்ணாவிடம்" என்று சிரித்தீர்கள்
எத்தனை உறுதியிருந்தது உங்களிடம்.
ஆழமாக அல்லவா தாயகத்தைக் காதலித்தீர்கள்.
உள்ளே புகுந்த ஒருவனுக்கு
இரு காலும் இல்லாமல் போனது
என்ன செய்தான் தெரியுமா.
'புலிகளின் தாகம். தமிழீழத் தாயகம்"
சொல்லியபடியே தன்னைச் சிதற வைத்தான்.
உங்களை எப்படி உலகம் உணர்ந்து கொள்ளும் ?
அண்டகோள்களையும் அளக்கும் விஞ்ஞானிகளே !
இந்த வேங்கைகளை எப்படி அளப்பீர்கள்
உலக அதிசயங்கள் ஏழு என்றவர்களே
இந்த அதிசயங்களை எதிலே...... சேர்ப்பீர்கள்
இந்த 'உண்மை மனிதர்களின்" கதைகளை
எந்த எழுத்தாளன் எழுதத் தொடங்குவான்.
கரும்புலிகள் காற்றைப் போன்றவர்கள்
உணரமுடியுமே தவிர, உற்றுப்பார்க்க முடியாது
கரும்புலிகள் கடலைப் போன்று
அளக்க முடியாத வியாபகங்கள்
எதிரியே
ஓடி ஓடி உலகெங்கும் ஆயுதம் வாங்கினாலும்
இந்த 'உயிராயுதங்களை" எப்படி இல்லாதழிப்பாய்
பகைவனே !
படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு
கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்....
- தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை