பிணவாடை அடிக்கிறது
15 ஆனி 2012 வெள்ளி 17:01 | பார்வைகள் : 10393
ஒரு நைல் நதியாய்
வடிந்து கொண்டு
ஓடியது குருதி
கொலைக் களத்திலிருந்து
கறுப்பு மனிதர்களால்
அரைப் பிணங்களாய்
தெருவெங்கும் விரவி
பிச்சை கேட்கின்றது
எம் உயிர்கள்!
ஒவ்வொரு நாளும்
மலர்களுக்கு பதிலாக
மரணம் மலர்ந்தது !
மரணம் மரணம்
மரணமென்றானது - என்
மண்ணின் தேசிய கீதம்
அதிகாலையிலும்
ஐயோ ஐயோ ஐயோவென
சுப்ரவாதம் ஒலிக்கவே
ஊரடங்கு போட்டன
ஓல ஒப்பாரிகள்!
பிறந்த நாளுக்கு
இனிப்பு வழங்கி
சிரித்து சென்ற
என் பள்ளித் தோழி
பாவடையின்றி
செத்துக் கிடந்தாள்!
பாவம் அவள்
குருதி தோய்ந்த
வெள்ளை ரோஜாவாய்
உதிர்ந்து கிடந்தாள்.
அவள் குறிகளில்
பரிசோதனை
செய்யப்பட்டிருந்தது
சப்பாத்துக்காரனின் ஆண்மை !
அத்தனையும் யாரோ ஒரு
நடிகையின் எண்ணத்தில்
பார்த்தும் ரசித்தும்
கொடி பிடித்தும்
உண்ணாநிலையிருந்தும்
பேசிய கர கர குரல்கள்
பழரசம் அருந்திய நாடகம்
அறிந்தோம் !
எங்கள் கண்ணீரின் கனத்திலே
கதிரைகள் செய்யப்படுகின்றன
அரசியல் அரங்கில் !
நரிகளின் நாடகத்தில்
தமிழனின்
சாவு மூலக் கதை!
முள்ளிவாய்க்கால் தமிழனின்
சவப்பெட்டிகளை
வாக்குபெட்டியாய்
மாற்றுகிறீர்கள்
மானம் கெட்டவரே !
பிணவாடை அடிக்கிறது
என் கவிதைகளிலும்
முள்ளிவாய்க்கால் இருப்பதனால்!
முகருங்கள்
மானம் கெட்டவரே
இனியேனும்
பழரசம் அருந்த ரத்தம் கேட்காதீர்!
- கவிஞர் அகரமுதல்வன்