ஏகாந்த ஏக்கம்
6 பங்குனி 2015 வெள்ளி 23:38 | பார்வைகள் : 10506
என் விழிப் பாவைக்குள்
நீயே முழுதும் வியாபித்திருக்கிறாய்
வாய்மொழி கடந்து மூச்சுக்காற்றாய்
என்னுள் நீயே நிறைந்திருக்கிறாய்....
சுழியனாக நான் இருந்தவரை
இல்லா மதிப்பை நீ என்னுடன்
இருப்பதாலே நான் அடைகிறேன்
என் அகத்தினில் வாசம் செய்பவனே...
பொறுக்கி எடுத்த கிழிஞ்சல்களின்
சங்கு மாலையை போலவே
நீ தொடுத்த சில வார்த்தைப்பூக்கள்
மாலையாக கோர்த்து வைத்திருக்கிறேன்.....
மணவறை வாசம் கண்டு நாம்
பிணவறை வரை பிரியாதிருக்க
பிரியமான சொற்களை பிரித்து
எடுத்து உன்மீது தொடுக்கிறேன்....
கடல்நுரை போல மணலில்
தங்கிப் படிந்து பாசியாக
உன்னுள் உறைந்து உனக்குள்
கரைந்து உலகம் மறக்க நினைக்கிறேன்...
வீரம் செறிந்த உந்தன் நெஞ்சுக்கூட்டில்
வித்தகி இவள் இடும் முத்தம்
உந்தன் சிந்தை முழுதும் என்னை
நிறுத்தி சிறிதேனும் நினைக்க வைக்குமா?
பொற்தாமரை குளத்தில் சேறு படிய
தாமரையோ தண்ணீரோடு ஒட்டாமல்
சேறு படிந்த நீரிலும் காதலோடு
ஒன்றிக் கலந்தது போல் கலந்திருப்போமா?
உந்தன் தாழ் பணிந்து கிடக்கவே
நான் தவம் கிடக்கிறேன்
கடவுச் சீட்டு கேட்பாயோ
கடவுளாக உனை நான் நினைக்கையில்...
விதிக்கும் மதிக்கும் இடையில்
வித்தை பல செய்பவன் நீ
விந்தைகள் செய்து எந்தன்
சிந்தையில் குடி கொண்டவனே....
உன்னை நோக்கியே எழுதி தீர்க்கும்
எந்தன் வண்ணக் காகிதம் எடுத்து
நீ படிக்க நேரம் இல்லையென்றால்
கசக்கியாவது எரிந்து விட்டு போ ......
உந்தன் கைதொட்டேனும் மடியட்டும் என் கவிக்குழந்தைகள்.....