காற்றுக்கேது வேலி..!
11 ஐப்பசி 2014 சனி 18:30 | பார்வைகள் : 10233
மலைமுகடுகளிலும்
வனங்களின் கூரைகளிலும்
மேகங்களோடும்
ரகசியம் பேசிச் செல்கிறது
கட்டிட வெளிகளிலும்
முற்றவெளிகளிலும்
இரைச்சலின்றி
ஊர்ந்து செல்கின்றது
பறவைகள் விமானங்கள்
காற்றை கிளித்துப் பறக்கையிலும்
ஓய்வின்றி திரியும்
அலைச்சல்களினூடே
தனது எல்லை எதுவென்றறியாது
யாவையும் மனவுளைச்சலின்றி
தாங்கிக் கொள்கிறது
தான் தனிமைப்பட்டதையுணர்ந்து
தெளிந்த நீர் சல சலக்கும்
ஆற்றங்கரையில்
ஓங்கி வளர்ந்திருக்கும்
மூங்கில் மரங்களுக்கிடையே
தனக்கு இசைவான சங்கீதத்தை
இசைமீட்டி சந்தோசப்படுகின்றது
கோபம் கொண்டுவிட்டால்
சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
கீழிறங்கி வந்தால்
தன் கண்ணில் தெரியும்
வெட்டவெளி சமுத்திரம்
நதி வயல் வனமென
சுழன்றடித்து சு றாவழியாகி
இயற்கையை சீண்டிப் பார்க்கும்
இந்தக் கோபக் காற்றால்
அழிவைக் கண்ட
ஒவ்வொரு மனிதரின் உதடுகளும்
ஒப்பாரி வைத்தே திட்டித் தீர்க்கும்
பார்வைக்கு புலப்படாத
பாதங்களைக் கொண்டு
எல்லாத் திசைகளிலும்
அனைவரின் செவிக்கு இன்பமாக
காற்றலைகளில் மிதக்க வைத்து
வானெலிக்கு கொண்டு செல்லும்
உன் ஆற்றலினால் எமக்கு இன்பமே..