வேதனையை வெல்வதற்கு உன் வேர்களைத் தேடு, அவலங்களை நிறுத்த புது அத்திபாரம் போடு
18 வைகாசி 2014 ஞாயிறு 08:10 | பார்வைகள் : 9822
குந்தியிருந்த நிலமும்
குடி புகுந்த வீடும்
உருக்குலைந்ததனால்,
வாடிய உடலோடு வனாந்தரங்கள் தாண்டி
நந்திகடலே தஞ்சமென வந்த போது
கூடிநிற்கச் சொல்லிவிட்டு
கொத்துக் கொத்தாய் கொன்றழித்தவன்,
நினைவிற்காய் கொழுத்திய தீபத்தையும்
உதைத்ததணைத்த போதும் – நீ
ஊமையாய் இருந்தால்
ஊனம் உன் உடலில்லல்ல
மனதில்.
கண்ணீரில் மூழ்கி
குருதியில் குளித்த மண்ணுக்கு
காணிக்கையென்னவெனில்
சொல்லப் போகும் பதிலென்ன?
இனத்தையே அழித்தவன்
எதுவுமே நடக்கவில்லையென
இருட்டடிப்பு செய்கையில்,
இனத்தை இழப்பவனே
நீதிக்காய் நீயென்ன செய்கின்றாய்?
முள்ளிவாய்க்கால் மண்ணில்
புதைக்கப்பட்டது
வெற்றுடலங்கள் மட்டுமல்ல.
எழுவதற்கான விதையும் தான்.
நிலையான வாழ்வு வரும் வரை
நிற்கக்கூடாது சுதந்திரத்திற்கான சுவாசம்.
திசையற்று போவதற்கு
எம் போராட்டமொன்றும்
நீர்க்குமிழியோ தீச்சுவாலையோ அல்ல.
திடமிருந்தாலே முளைப்பாய் நிமிர்வாய்
இல்லையேல்
முடமாகவே முடியப்போவது
உன் வாழ்க்கை மட்டுமல்ல
ஒரு வம்சத்தின் வரலாறும் கூடவே.
போரொன்றின் தோல்வி
போராட்டமொன்றின் அஸ்தமனமல்ல.
வேதனையை வெல்வதற்கு
உன் வேர்களைத் தேடு
அவலங்களை நிறுத்த
புது அத்திபாரம் போடு.
நாங்கள் படுகொலையால் பதறி நிற்க,
காந்திகளாய் காட்டிக் கொண்டோர்
பழிவாங்க பதினெட்டு வருடங்கள்
காத்திருந்தோம் என்றார்.
பதிலுக்கு எங்களிடம்
அன்று
சாபமும் நிசப்தமும் மட்டுமே
நிறைந்திருந்தது.
இன்று, கண்ணகி எரித்த தேசத்தில்
கட்டுப்பணத்தைகூட காப்பாற்ற வழியின்றி
காணமல் போயினர் எம் கண்முன்னே.
வங்கக் கடல் தாண்டி
வரும் கப்பலென பார்த்திருந்தவர்
சாபம் பலித்தது.
ஏனெனில், தர்மத்துக்கான போரில்
சாபங்களும் சபதங்களும் ஆயுதங்களே.
பூகோள அரசியலில் ஓயாத அலையாகு
நிலையான வாழ்வுக்காய்
சிலையானவர் நினைவோடு போராடு.
பலமாகு
விளக்கேற்ற மறுத்தவனை
மின்சாரக் கதிரையில் ஏற்ற.
பலமாகு
நிலம் மீட்க குறுக்கே நிற்பவனை வீழ்த்த.
பாலமாகு
பிரிக்கப்பட்ட மாகாணங்களை இணைப்பதற்காய்
பாலமாகு
உறவுகளை இழந்த சிறார்களை அணைப்பதற்காய்
அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை
அடங்கிப் போகதே.
இறமையை மீட்கும் போரில்
இறங்கிப் போகதே.
உரிமையை அடையும் வரை
தடைகளை உடைக்க தயங்காதே.
விடைகள் தெரியும் வரை
விட்டுக்கொடுக்காதே.
படைகள் அகலும் வரை
ஆக்கிரமிப்பை எதிர்.
தலைகள் உயரும் வரை
தளர்ந்து போகதே.
இத்தனையும் இனியும் இழந்துபோனவருக்கல்ல.
குரலற்றவரின் குரலென்று கூவிடும்
புலம்பெயர் உறவுக்கே.
கூடிழந்த குருவிகள் வீடு திரும்பும் வரை
நாடற்று வாழும் நாம்
பாரிடம் கேட்போம் நீதி.
பதிலில்லையெனில்
மீதிப் பயணம்
எம் மண்ணில் நம் தலைகள்
நிமிரும் வரை
நகரட்டும்.
- ச.பா.நிர்மானுசன்