Paristamil Navigation Paristamil advert login

அந்த நாட்கள் எங்கே தொலைந்தன?

அந்த நாட்கள் எங்கே தொலைந்தன?

23 ஆடி 2013 செவ்வாய் 13:02 | பார்வைகள் : 9390


 

உயிரோட்டமுள்ள 

அந்த நாட்கள் எங்கே 

தொலைந்தன?
 
ஒவ்வொரு நாளின் 
விடியலில் உண்டாகும் 
புத்தம் புதிய காலைத் தென்றல்!
 
காலை விடியலைச் சொல்லும் 
கொண்டைச் சேவலின் 
’கொக்கரக்கோ’!
 
’கொக்கரக்கோ’வுடன் இணைந்து 
மரக்கிளைகளில் பூபாளம் பாடும் 
பறவைகளின் கீச் கீச் ஒலி!
 
கீச் கீச் ஒலி கேட்கும் வேளையில் 
காளைகள் பூட்டிய மாட்டுவண்டிகளின் 
லயம் தப்பாத ’கட கட லொட லொட’ சப்தம்!
 
’கட கட’ சப்தத்துடன் 
வண்டிக்காரனின் ’ஹய் ஹய்’ என்னும் 
அதட்டி ஓட்டும் இனிய நாதம்!
 
இனிய நாதமுடன் ஒத்து ஒலிக்கும் 
வண்டிக் குதிரையின் தாளம் மாறாத 
’டப் டுப் டப் டுப்’ என்ற குளம்பொலி!
 
குளம்பொலி கேட்கும் ஒலியின் பின்னால்.. 
வீடுகளின் கட்டுத்தறியில் கட்டியுள்ள 
பசுக்களின் ’அம்மே’ என்ற அன்புக் குரல்!
 
பசுக்களின் அன்புக் குரலை அடுத்து 
மேய்ச்சலுக்குச் செல்லும்போதும், வரும்போதும் 
ஏற்படும் புழுதிப் படலத்துடனான மண்வாசனை!
 
மண்வாசனை நிறைந்த 
தெருக்களில் இசை நயத்தோடு 
கூவி விற்கும் வியாபாரிகளின் இனிய குரல்!
 
இனிய குரலையும் விழுங்கும் 
கூட்டுக் குடும்பத்தின் குழந்தைகளின் 
பல்வேறு கூக்குரல்!
 
கூக்குரலின் ஓசையையும் மிஞ்சி 
கிராமத்தின் பழைய தெருக்களில் மாலையில் 
விளையாடும் பிள்ளைகளின் கூச்சல்!
 
இத்தகைய கூச்சலும், 
இனிய நாதமும் கீதமும் ஆன 
இவைகளெல்லாம் எங்கே போயிற்று?

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்