10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!
6 மாசி 2023 திங்கள் 12:02 | பார்வைகள் : 6913
மதுரை-மேலூர் ரோட்டில், சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து மாங்குளம் செல்லும் சாலையில் பூசாரிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இவ்வூரில் பாதி உடைந்தநிலையில், ஒரு பெரியபாறை ஒன்று உள்ளது. இதை அவ்வூர் மக்கள் ‘பாறைப் பள்ளம்’ என்கின்றனர். இப்பெரிய பாறையில் இயற்கையாகவே அமைந்த குகை போன்ற புடவு ஒன்று உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் அக்கால மக்களின் வாழ்விடமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். இப்புடவின் பக்கவாட்டுப் பாறைகளிலும், தலைக்கு மேலேயுள்ள பாறைகளிலும், பாறைஓவியங்கள் காணப்படுகின்றன.
வெள்ளை, சிவப்பு நிறத்தில் நிறைய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மனித, விலங்கின உருவங்கள், வேட்டை காட்சிகளுடன் காணப்படும் ஓவியத் தொகுதிகளுள் ஒன்றில், யானையின் உருவம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்கள் பல அடுக்குகளாக வரையப்பட்டுள்ளதை பார்க்கும்போது, நீண்ட காலமாக இங்கு மக்கள் வாழ்ந்து ஓவியங்களைத் தீட்டியிருப்பதும் அறியப்படுகிறது. இங்குள்ள ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டவைகளாகத் தெரிகின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் நிறம், அடர்த்தியைப் பார்க்கும்போது வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு மனிதர்களால் வரையப்பட்டவை எனலாம். பெருமளவு ஓவியங்கள் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்டிருக்கின்றன.
மதுரை மாவட்டத்தில் கொங்கர் புளியங்குளம், கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, அணைப்பட்டி, கிடாரிப்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு, நடுமுதலைகுளம், புலிப்பொடவு, புதூர்மலை, திருவாதவூர், வாசிமலை ஆகிய 12 இடங்களில் பாறைஓவியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது பூசாரிப்பட்டி 13வது இடமாக கண்டறியபப்பட்டிருக்கிறது. இந்த ஓவியங்கள் குறித்து மாங்குளம் வரலாற்று ஆர்வலர் பாண்டித்துரை கொடுத்த தகவலின் பேரில், திருச்சி பாறைஓவியங்கள் ஆய்வாளர் பாலா பாரதி, மதுரை தொன்மை ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் ஆராய்ந்து வருகின்றனர்.
இவர்கள் கூறுயைில், இந்த பாறை முன்பு பெரிதாக இருந்துள்ளது. தற்போது கல்குவாரிக்காகப் பாதி உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. கல்குவாரி தடை செய்யப்பட்டு இருப்பதால், இவ்ஓவியங்கள் தப்பி இருக்கின்றன. ஏற்கனவே உடைக்கப்பட்ட பாறையில் ஏதேனும் ஓவியங்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. பாறைஓவியங்கள் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வரலாற்று பதிவாகும். இத்தகைய வரலாற்று பதிவுகள் அழிக்கப்படுவது நமக்குப் பேரிழப்பாகும், மேலும் இவற்றைக் காக்க வேண்டியது நம் கடமையாகும்’’ என்றனர்.