7,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெருப்புக் கோழி முட்டைகள் கண்டுபிடிப்பு!
16 தை 2023 திங்கள் 11:11 | பார்வைகள் : 9096
இஸ்ரேலில் 4,000இலிருந்து 7,500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் 8 நெருப்புக் கோழி முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை இஸ்ரேலின் தெற்கே உள்ள பாலைவனப் பகுதியான நெகேவில் (Negev) பழங்காலத் தீக்குழிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பீர் மில்காவின் (Be’er Milka) விவசாய நிலங்களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது அவை கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலியத் தொல்பொருள் ஆணையம் (IAA) கடந்த வியாழக்கிழமை (12 ஜனவரி) அறிவித்தது.
அந்த முட்டைகள் அப்போதைய பாலைவன நாடோடிகளால் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அந்த முட்டைகள் ஆய்வுக்கூடத்தில் சோதிக்கப்படவுள்ளன. அந்த முட்டைகளின் பயன்பாட்டையும் அவற்றின் உண்மை வயதையும் கண்டறிய அது உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் நாடோடிகள் நிரந்தரக் கட்டமைப்புகளை உருவாக்கவில்லை என்றபோதிலும் பாலைவனத்தில் அவர்கள் இருந்ததை முட்டைகளின் கண்டுபிடிப்புகள் உணர்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். முட்டைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் கருகிய கற்களும் மண்பாண்ட ஓடுகளும் காணப்பட்டன.
நெருப்புக் கோழி முட்டைகள் அலங்காரப் பொருளாகவும் இறுதிச் சடங்குகளின்போது தண்ணீர் சுமக்கும் பொருளாகவும், உணவுக்கான ஆதாரமாகவும் இருந்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஒரு நெருப்புக் கோழியின் முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்து, சுமார் 25 சாதாரணக் கோழி முட்டைகளில் கிடைப்பதற்குச் சமமானது என்று ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.