Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச யானைகள் தினம்

சர்வதேச யானைகள் தினம்

12 ஆவணி 2023 சனி 11:52 | பார்வைகள் : 5790


உலகம் முழுவதும் ஒகஸ்ட் 12 இன்று சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. முற்காலத்தில் 24 வகை யானைகள் ஆடி அசைந்து பூமியில் வலம் வந்து கொண்டிருந்தன.
 
ஆனால் காடழிப்பு, தந்தத்திற்காக வேட்டையாடுதல் என மனிதனின் மனிதத் தன்மையற்ற செயல்களால் 22 வகையான யானை இனங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.
 
தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இதில் இந்தியா, தாய்லாந்து, இலங்கை, மியான்மர், சீனா என பல்வேறு நாடுகளில் பரவிக் கிடக்கும் ஆசிய யானைகள் எண்ணிக்கை 55 ஆயிரம் வரை இருக்கலாம் என்கிறது ஒரு புள்ளி விபரம்.
 
தும்பிக்கை வடிவில் நீண்ட மூக்கைப் பெற்றுள்ள ஒரே உயிரினமான யானை, சமூக வாழ்க்கை முறை கொண்ட விலங்கு. ஏனைய உயிரினத்தில் ஆண் தான் குடும்பத் தலைவர் என்றால் யானைகள் கூட்டத்தில் நிலைமை தலைகீழாக இருக்கும்.
 
யானைகள் தண்ணீரும், உணவும் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்டதால் யானைகள் வாழ வனம் பசுமையாகவும், செழுமையாகவும் இருப்பது அவசியம்.
 
அதேசமயம் யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படும். எனவே, யானைகள் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன.
 
யானையின் மூளையின் அளவு பெரியது என்பதால் அவைகளுக்கு நினைவாற்றல் அதிகம். இதன் மூலமே யானைகள், பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன.
 
தனது வழித்தடத்தில் இடையூறு ஏற்பட்டால் அவற்றின் கோபம் மனிதர்கள் மீது திரும்புகிறது. இதனால் யானைக்கும் மனிதனுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளில் முடிகின்றன.
 
வரைமுறையின்றி காடுகள் அழிக்கப்பட்டது, தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுதல் போன்ற காரணிகளால் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து போனது. உலகம் முழுவதும் அழிவின் விளிம்பில் உள்ள முதல் நிலை உயிரினமாக யானை உள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்