ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டால் 13,000 வெளியேற்றம்!
8 ஆவணி 2023 செவ்வாய் 13:38 | பார்வைகள் : 5701
ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சுமார் 13,000 பேர் தமது வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
டுசெல்டோர்வ் நகரிலுள்ள மக்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று (07) தெரிவித்தனர்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு தொன் எடையுள்ள குண்டு ஒன்று டுசெல்டோர்வ் நகரிலுள்ள மிருகக் காட்சி சாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அதேவேளை 2 ஆம் உலக யுத்தம் முடிவடைந்து 78 வருடங்கள் முடிவடைந்துள்ளது.
ஜேர்மனிய நகரங்கள் பலவற்றில் வெடிக்காத குண்டுகள் அடிக்கடி மீட்கப்படுகின்றன.
2017 ஆம் ஆண்டு பிராங்பர்ட் நகரில் 1.4 தொன் எடையுள்ள குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 65,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் கடந்த வருடம் மியூனிக் நகரில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று வெடித்ததால் நால்வர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.