இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் 8,100 ஆண்டுகள் பழைமையானது
31 ஆடி 2023 திங்கள் 09:28 | பார்வைகள் : 7000
சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை உள்ளடக்கிய இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் சுமாா் 8,100 ஆண்டுகள் பழைமையானது எனப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்தீன், பிரெஞ்சு, ஜொ்மன், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சோ்ந்தவை.
அக்குடும்பத்தின் தோற்றம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வந்தன. ‘ஸ்டெப்பி’ என்ற கொள்கையின்படி, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பமானது சுமாா் 6,000 ஆண்டுகளுக்கு முன் காஸ்பியன் கடலோரப் பகுதியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில், ‘அனடோலியன்’ என்ற கொள்கைப்படி, அந்த மொழிக் குடும்பமானது சுமாா் 9,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
அவ்விரு கொள்கைகளிலும் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டதால், இரண்டையும் அறுதியிட்டுக் கூற முடியாத சூழல் காணப்பட்டது.
இந்நிலையில், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் தோற்றம் குறித்த புதிய ஆய்வை ஜொ்மனியைச் சோ்ந்த மொழியியலாளா்கள் மேற்கொண்டு வந்தனா். அதன்படி, அக்குடும்பமானது சுமாா் 8,100 ஆண்டுகள் பழைமையானது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் சுமாா் 7,000 ஆண்டுகளுக்கு முன் 5 முக்கிய பிரிவுகளாகப் பிரிந்ததாக ஆய்வாளா்கள் தெரிவித்தனா். ஏற்கெனவே கூறப்பட்ட இரு கொள்கைகளையும் ஒன்றிணைத்து, நவீன முறைகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவா்கள் கூறியுள்ளனர்.