Paristamil Navigation Paristamil advert login

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பானை ஓடு கண்டுபிடிப்பு ...

 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பானை ஓடு  கண்டுபிடிப்பு ...

1 சித்திரை 2023 சனி 09:36 | பார்வைகள் : 6847


விழுப்புரம் அருகே, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
விழுப்புரம், பேரணி அடுத்த செ.கொத்தமங்கலம் கிராமத்தில், சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி கலிங்கல் பகுதியில், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால வரலாற்று தடயங்கள் உள்ளன.
 
இப்பகுதியில், விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட குழுவினர், 2 தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழைய குறியீடுகளுடன் கூடிய பானை ஓடை கண்டெடுத்தனர்.
 
இது குறித்து செங்குட்டுவன் கூறியதாவது:
 
செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி கலிங்கல் பகுதியானது, கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் புதைவிடமாக இருந்திருக்கிறது. நுாற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இங்கு காணப்படுகின்றன.
 
தற்போது கண்டறியப்பட்டுள்ள கருப்பு, சிவப்பு பானை ஓட்டில் பழைய குறியீடுகள் காணப்படுகின்றன.
 
இதனை ஆய்வு செய்த மூத்த தொல்லியலாளர் துளசிராமன், இக்குறியீடுகள் மலை அல்லது வாழ்விட கூடாரங்களைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. இவை சங்ககால காசுகளிலும் காணப்படுகின்றன. இந்த பானை ஓடும் சங்ககாலத்தைச் சேர்ந்தது என தெரிவித்துள்ளார்.
 
இந்த பகுதியில், கடந்த 2020 ஜனவரியில் ஆய்வு செய்த தொல்லியல் அதிகாரி பாஸ்கர், அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ஆனால், இப்பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செ.கொத்தமங்கலம் தொல்லியல் தடயங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்