3000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த நகரம் கண்டெடுப்பு..!
10 சித்திரை 2021 சனி 08:58 | பார்வைகள் : 10284
எகிப்தில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்த மூன்றாம் மன்னர் அமென்ஹோதெப் (Amenhotep III) ஆட்சி செய்த பழமையான நகரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரமாண்ட பிரமிடுகளும், மர்மங்களையும் கொண்ட மம்மிகளும் எகிப்து தொல்லியல் ஆய்வாளர்களின் தீராத ஆராய்ச்சியாக உள்ளது. இந்தியாவை போன்று பழமையான நாகரீகத்தையும், இறை நம்பிக்கையையும் கொண்ட எகிப்தை ஆட்சிபுரிந்த மன்னர்களின் கல்லறை கோவில் கண்டறிந்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரகசியங்களையும், பழமையான கலாச்சாரத்தையும் கொண்ட எகிப்து மன்னர்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து வரும் தொல்லியல் வல்லுநர்கள் வெளி உலகிற்கு பல தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் 1922ம் ஆண்டு எகிப்தின் நைல் நதி அருகே கண்டறியப்பட்ட மன்னர் துதன்காமென் (Tutankhamen) கல்லறை கோவிலில் நூற்றாண்டை கடந்தும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கல்லறை கோவிலில் துதன்காமெனின் பதப்படுத்தப்பட்ட மம்மியும், தங்க முககவசமும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் மன்னர் துதன்காமென் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை குறித்தும், மூன்றாம் பேரரசர்கள் ராம்செஸ் மற்றும் அமென்ஹோதெப் குறித்தும் செப்டம்பர் மாதம் முதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மன்னர் துதன்காமெனின் மூதாதையாரான மூன்றாம் பேரரசர் அமென்ஹோதெப் ஆட்சி செய்த காலத்தில் இருந்த நகரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
செங்கற்களால் ஆன 10 அடி உயர சுவர்களையும், அறைகளையும் கொண்ட நகரத்தை மன்னர் அமென்ஹோதெப் கி.மு.1391ம் ஆண்டில் இருந்து 1353ம் ஆண்டு வரை ஆட்சி செய்துள்ளார் என்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். மேலும், இந்த அமென்ஹோதெப் மன்னர் துதகாமெனின் மூன்றாம் தலைமுறை தாத்தாவாகும் என்பதும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள லக்சர் (Luxor) எனுமிடத்தில் கண்டறியப்பட்ட இந்த பழங்கால நகரம் அக்கால மக்கள் ஆடைத் தயாரிக்கும் தொழிலில் முன்னேற்றம் அடைந்திருந்ததை காட்டுவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மது குடிக்க பயன்படுத்தப்பட்ட குவளை, மோதிரம் மற்றும் உணவுகளை சேகரித்து வைக்க பயன்படுத்தப்பட்ட மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டன.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வில் அறை ஒன்றில் ஒருவரின் எலும்புக்கூடும் அவரது காலில் கயிறு ஒன்றும் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எகிப்தை ஆண்ட பேரரசாரான துதன்காமெனின் கல்லறை கோவிலில் கண்டறியப்பட்ட அவரின் மூதாதையர்களின் நகரம் வரலாற்றில் மிக முக்கியமானதொரு தொல்லியல் கண்டுப்பிடிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பண்டைய எகிப்தின் நாகரீகத்தை மேலும் அறியலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.0