Paristamil Navigation Paristamil advert login

தங்க நாக்குகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு

தங்க நாக்குகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு

20 பங்குனி 2021 சனி 11:40 | பார்வைகள் : 9077


அலெக்ஸாண்ட்ரியா பிராந்தியத்தில் பணிபுரியும் எகிப்திய-டொமினிகன் தொல்பொருள் குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தங்க நாக்குகள் கொண்ட மம்மிகள் கண்டறியப்பட்டன. இந்த குழு பல ஆண்டுகளாக அலெக்ஸாண்ட்ரியா பிராந்தியத்தில் பணியாற்றி வருகிறது.

 
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மம்மிகளின் வாயில் தங்க நாக்குகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
 
இந்த குழு பல ஆண்டுகளாக அலெக்ஸாண்ட்ரியா பிராந்தியத்தில் புகழ்பெற்ற ராணி கிளியோபாட்ராவின் மம்மியை தேடி வந்தனர்.
 
டோலமிக் வம்சம் கிமு 323 முதல் கிமு 30 வரை எகிப்தை ஆண்டது. டோலமிக் வம்சத்தினருக்கு பிறகு,  ரோமானியர்கள் எகிப்தை ஆட்சி செய்தனர். கிளியோபாட்ரா பாரோனிக் வம்சத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்தார்.
 
"அலெக்ஸாண்ட்ரியாவுக்கு மேற்கே உள்ள தபோசிரிஸ் மேக்னா கோவிலில் (Taposiris Magna) பாறையில் வெட்டப்பட்ட 16 கல்லறைகளை ஆய்வாளர்களின் குழு கண்டுபிடித்தது" என்று அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய மற்றும் கிரேக்க ஆட்சிக்காலத்தில் இந்த நடைமுறை இருந்தது என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
 
பல மம்மிகளைக் கொண்ட கல்லறைகள் மோசமான நிலையில் இருந்தன. இந்த மம்மிகளின் வாயில் தங்க தாயத்துக்கள் வைக்கப்பட்டிருந்தது என்பது இந்த கண்டுபிடிப்பின் ஒரு தனித்துவமான அம்சம் ஆகும். இந்த தங்க தாயத்துக்கள் இறந்தவர்களின் வாயில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.   
 
கண்டறியப்பட்ட இரண்டு மம்மிகளும் ஆராய்ச்சியாளர்களின் தேடுதல் ஆர்வத்தை அதிகரிப்பதாக ஆய்வுப் பணியின் தலைவர் கேத்லீன் மார்டினெஸ் (Kathleen Martinez) தெரிவித்தார். மம்மிகளில் ஒன்றில், எகிப்திய மரண கடவுளான ஒசிரிஸின் (Osiris) உருவத்தை ஒத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மம்மியில் அட்டைப் பகுதிகள், பசை அடுக்குகளைக் கொண்ட கட்டுகள் உள்ளன.
 
இப்பகுதியில் எஞ்சியுள்ள வேறு இடங்களிலும், பல்வேறு வரலாற்றுப் பதிவுகள் பொதிந்திருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்