உடல்நலனைப் பற்றிய 3 கட்டுக்கதைகளை அறிந்து கொள்வோம்!
24 ஆனி 2018 ஞாயிறு 17:42 | பார்வைகள் : 9429
உடல்நலனைப் பற்றி நாம் அன்றாடம் பல தகவல்களைக் கேட்ட வண்ணம் இருக்கிறோம். அவற்றில் சிலவற்றை உண்மை என்றே நம்பிவிடுகிறோம். ஆனால் அப்படியிருக்கத் தேவையில்லை என்கின்றன அண்மை ஆய்வுகள் சில. அப்படி நம்மில் பலர் நம்பிக்கொண்டிருந்த 3 கட்டுக்கதைகள் இதோ...
1. மாரடைப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் வரலாம்.
மாரடைப்பு, ஆண்களுக்கே அதிகம் வரும் ஒரு பிரச்சினை என நாம் நினைப்பதுண்டு. ஆனால் மாரடைப்பு, இருபாலருக்கும் மரணத்தை விளைவிக்கக்கூடும் என அமெரிக்க இதயநலச் சங்கம் அண்மையில் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பெண்கள் தங்களுக்கு இதய நோய் வராது என்று நினைப்பதாக ஆய்வு சுட்டியது. ஆனால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 400,000 பெண்கள் இதய நோய்க்குப் பலியாவதாகக் குறிப்பிட்டது அந்த ஆய்வு.
2. குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்
உடல் எடை குறைவது, நாம் என்ன உண்கிறோம் என்பதைப் பொறுத்துத்தானே தவிர எவ்வளவு உண்கிறோம் என்பதைப் பொறுத்தல்ல. ஹார்வட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, ஆரோக்கியமற்ற உணவைக் குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று அர்த்தமல்ல. ஒருவேளை அதில் கலோரிகள் அதிகம் இருக்கலாம். அப்படியிருந்தால் எடை கூடவே செய்யும். தாவரம் சார்ந்த உணவு, நார்ச்சத்து, புரதச் சத்து போன்றவற்றை உட்கொள்ளும்போது உணவு அளவைக் குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இவற்றைச் சரியான அளவில் சாப்பிடும்போது கலோரிகள் குறைவதுடன் உடல் எடையும் குறையும்.
3. முட்டை சாப்பிடுவது கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்
முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு, கொழுப்புச் சத்தை அதிகருக்கும் எனப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உண்மையல்ல. முட்டை சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் பக்கவாதம் வரும் ஆபத்து 12 விழுக்காடு குறையும் என ஆய்வொன்று கூறுகிறது.