Paristamil Navigation Paristamil advert login

மனித இனம் தோன்றிய வரலாற்றில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

மனித இனம் தோன்றிய வரலாற்றில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

10 வைகாசி 2017 புதன் 14:31 | பார்வைகள் : 9848


 மனிதரைப் போன்ற உயிரினம் ஒன்று முற்கால மனிதர்களுடன் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து வாழ்ந்தது என்பதை புதிய கண்டுபிடிப்பு ஒன்று வெளிக்காட்டியுள்ளது.

 
இதற்கு முன் அறிவியலர் இந்த சிறு மூளையுடைய மனித உயிரினம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன என்று நம்பி வந்தனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு குறித்து ஆங்கில அறிவியல் இதழில் மூன்று கட்டுரைகள் வெளி வந்துள்ளன.
 
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இரு இடங்களிலிருந்து இந்த மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். 
 
அதில் பற்களின் புதைப்படிமங்கள் இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரியவருகிறது. 
இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பிவந்தனர்.
 
ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் தெரியவந்துள்ளது.
 
இந்த இனத்திலிருந்து தற்போதைய மனித இனம் வெகுவாக மாறுபட்டது. ஆனால் மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. 
 
இவை வாழ்ந்ததாக இப்போது அறியப்பட்டுள்ள காலக்கட்டத்தில் தற்போதைய மனித இனத்தின் மூதாதையர்கள் வாழத் துவங்கி விட்டதாக அறிவியலர் தெரிவிக்கின்றனர். 
 
மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 
 
நீத்தோரை புதைக்கும் வழக்கம் தற்போதைய மனித இனத்திற்கு மட்டுமே உடையது என்று அறிவியலர் கருதி வந்தனர்.
 
இந்தச் சிறு மூளையுடைய மனித இனத்தின் அழிவிற்கு தற்போதைய மனித இனம் காரணமாக இருந்திருக்குமா என்ற கேள்விக்கு அறிவியலர் ஆம் என்றே பதில் உரைக்கின்றனர். 
 
மேலும் அக்காலகட்டத்தில் இந்த மனித இனத்திற்கும் பிற மனித இனங்களுக்கும் மரபணு பரிமாற்றங்கள் நடந்திருக்குமா என்று கேட்டால் நிபுணர்கள் அதற்கான சாத்தியமுண்டு என்றே கூறுகின்றனர்.
 
ஆயினும் இதுவரை இந்த இனத்தின் மரபணு மட்டும் கிடைத்தபாடில்லை. அது கிடைத்தால் மனித குல வரலாற்றின் பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும் மட்டுமின்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் அறியும் வாய்ப்பு கிட்டும் என்கின்றனர் அறிவியலர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்