160 கோடி ஆண்டு பழமையான தாவரபடிமம் கண்டுபிடிப்பு!
20 பங்குனி 2017 திங்கள் 11:50 | பார்வைகள் : 9812
பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப் படிமம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் கிடைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற படிமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள பாறையில் உலகின் மிகப் பழைமையான தாவர படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 160 கோடி ஆண்டுகள் பழமையான செந்நிறப் பாசி வகையை சேர்ந்த தாவர படிமமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழமையான செந்நிறப் பாசி தாவரம், 120 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது.
இதுகுறித்து ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்டெபான் பெங்ஸ்டன் தெரிவித்தபோது, “இப்போது கண்டுபிடிக்கப்பட்ட தாவர படிமம் குறித்து 100 சதவீதம் சரியாக எதுவும் சொல்ல முடியாது. இதில் டி.என்.ஏ இல்லை. ஆனால் படிமத்தின் பல அம்சங்கள் செந்நிறப் பாசியோடு ஒத்து போகிறது,” எனக் கூறினார். மேலும், பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதை கண்டறிய இந்த படிமம் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.