விமான ஜன்னல்கள் வட்டவடிவமாக இருப்பது ஏன்?
9 பங்குனி 2017 வியாழன் 09:04 | பார்வைகள் : 9548
விமானத்தில் உள்ள ஜன்னல்கள் எப்போதும் வட்ட வடிவமாக வடிவமைக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா ?
விமானத்தின் ஜன்னல்கள் எப்போதும் வட்டவடிவமாகவோ அல்லது நீள்வட்ட வடிவமாகவோதான் வடிவமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.ஆனால் ஏன் விமானத்தின் ஜன்னல்கள் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ வடிவமைக்கப்படவில்லையென தெரியுமா?
1949-ஆம் ஆண்டு “de Havilland Comet” என்ற பயணிகள் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் ஒரு ஆண்டுக்குள் இந்த விமான சேவையின் இரு விமானங்கள் நடு வானிலேயே வெடித்துச் சிதறின.இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது விமானத்தின் ஜன்னல்கள் சதுர வடிவமாக வடிவமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.
பயணிகள் விமானங்கள் தரையிலிருந்து 30,000 அடி உயரத்தில் வானில் பறக்கும் போது,அந்த உயரத்தில் காற்றின் அடர்த்தியானது மிகவும் குறைவாக இருக்கும்.இதன் காரணமாக காற்று நிலைப்புத் தன்மையானது குறைந்துவிடும்.இதனால் விமானத்திற்குள் பயணிகள் சுவாசிப்பதற்காக காற்றின் அழுத்தமானது அதிகமாக இருக்கும் வகையிலான சூழல் ஏற்படுத்தப்படுகிறது.இதனால் விமானத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் காற்றழுத்தத்தில் மிகப்பெரிய வேறுபாடு ஏற்படுகிறது.
சதுர வடிவிலான ஜன்னலில் நான்கு முனைகளும் பலவீனமாக இருக்கும் என்பதால்,காற்றழுத்த வேறுபாடுகள் காரணமாக இவை உடையக் கூடியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.இதே போன்ற பிரச்சனையில் காமெட் விமானங்களின் ஜன்னல்கள் உடைந்ததால்தான்,அவை விபத்துக்குள்ளாகின.
எனவேதான் எந்த பலவீனமான முனைகளும் இல்லாத அளவிற்கு விமானங்களின் ஜன்னல்கள் வட்ட வடிவமாகவோ,நீள்வட்ட வடிவமாகவோ வடிவமைக்கப்படுகின்றன.