இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 'மம்மி' குறித்த ரகசியங்கள் வெளியானது!
25 பங்குனி 2018 ஞாயிறு 11:19 | பார்வைகள் : 8945
நூறாண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் திறக்கப்படாமல் இருக்கும் ஒரு எகிப்து மம்மியை, நவீன எக்ஸ்ரே மூலம் அமெரிக்காவின் முன்னணி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்துள்ளனர்.
இதுபோன்ற உயர் தன்மை கொண்ட சின்க்ரோட்ரோன் எக்ஸ்ரேவை பயன்படுத்தி மம்மியை ஸ்கேன் செய்வது இதுவே முதல் முறை.
ஒரு உடலைப் பற்றிய அதிக விவரங்கள் கொண்ட முப்பரிமாண பகுப்பாய்வை தயாரிப்பதும், மம்மியின் மேலே சுற்றப்பட்டிருக்கும் துணிக்கு கீழே ஒளிந்திருக்கும் வேறு எந்தப் பொருட்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இது ஒரு வழக்கமான மம்மி இல்லை. ஏனெனில் உடல் மட்டும் பாதுகாக்கப்படவில்லை. இதில் ஒரு குழந்தையின் படமும் உள்ளது.
சிகாகோவில் உள்ள நார்ச்வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த மம்மியில், 1,900 ஆண்டுக்கு முன்பு இறந்த ஐந்து வயது சிறுமியின் உடல் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிறுமியின் உடல் மட்டும் பதப்படுத்தப்படவில்லை. அவளின் முகம் வரையப்பட்டு, அவள் மீது இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கும் துணியின் மேலே வைக்கப்பட்டுள்ளது.
படங்களைக் கொண்ட 100 மம்மிகளில் இதுவும் ஒன்று.
அச்சிறுமி அப்போது எப்படி இருந்தாள் என்பதை, வழக்கத்துக்கு மாறான இந்த புகைப்படம் காட்டுகிறது. அத்துடன் இந்த ஸ்கேனிங் திட்டத்தின் மூலம், சிறுமியின் உடல் மீது சுற்றப்பட்டிருக்கும் துணியைத் தொந்தரவு செய்யாமல், அச்சிறுமியின் வாழ்க்கை பற்றியும் இறப்பு பற்றியும் அதிகளவு வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்.
''இந்த குழந்தை இறக்கும் போது எவ்வளவு இளம் வயதில் இருந்தது என்பதை உணரும் போது மிகவும் உணர்ச்சிவசமாக இருந்தது'' என நார்த்வேஸ்டனில் உள்ள மெக்கார்மிக் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்கின் பொருட்களுக்கான ஆராய்ச்சி பேராசிரியர் மார்க் வால்டன் கூறுகிறார்.
மலேரியா அல்லது தட்டம்மை போன்ற நோய்கள் தான் மரணத்திற்கான காரணங்களாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் அறிஞர், சர் வில்லியம் ஃபிளெண்டர்ஸ் பெட்ரியால் 1911-ம் ஆண்டு இந்த மம்மி எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்டது. அடுத்த வருடமே சிகாகோவில் உள்ள ஒரு கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.
அப்போது முதல் கண்காட்சிகளில் இந்த மம்மி வைக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட மற்ற மம்மிகளை போல இல்லாமல், இது அப்படியே வைக்கப்பட்டது.
ஆனால், இந்த வருடம் இதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் பார்க்க தொடங்கியுள்ளனர்.
முதல்கட்ட சி.டி ஸ்கேனுக்காக, சிகாகோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மம்மி கொண்டு செல்லப்பட்டது.
பிறகு கடந்த வாரம் ஆர்கான் தேசிய ஆய்வகத்திற்கு இந்த மம்மி கொண்டுவரப்பட்டது. முதலில் சின்க்ரோடான் எக்ஸ்ரே மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் எலும்பு திசு மற்றும் பற்கள் ஆராய வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். உடலைப் பதப்படுத்தலின் ஒரு பகுதியாக மூளை எடுக்கப்படும் நிலையில், மண்டை ஓடுக்கு உள்ளே இருப்பது என்ன என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
தலையிலும், காலிலும் கயிறு சுற்றியிருப்பதற்கான அடையாளங்கள் தெரிகிறது.
''மருத்துவ கண்ணொட்டத்தில் இருந்து பார்த்தால், எலும்பின் தரத்தில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். காலம் கடந்தாலும் இந்த எலும்புகள் மாறியுள்ளதா? பண்டைய எலும்புடன் நவீன எலும்பு ஒப்பிடுவது எப்படி என்பது குறித்த தகவல்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளோம்'' என நார்த்வேஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்வியின் பேராசிரியர் ஸ்டுவர்ட் ஸ்டாக் கூறுகிறார்.
'என்ன பொருட்கள் உள்ளது என்பதை அறிய நினைக்கிறோம். மம்மி தயாரிப்பதற்கு மற்றும் ஸ்திரப்படுத்துவதற்கான செயல்முறைகள் சிலவற்றை இது நமக்குக் கூறலாம்'' என அவர் கூறுகிறார்.
இந்த வரலாற்றுக்கு கீழே இருக்கும் குழந்தையை பற்றியும் இவர்கள் அறிய முற்படுகின்றனர்.
''அந்த காலத்தில் பாதி குழந்தைகள் 10 வயதைத் தாண்டி வாழவில்லை'' என நார்த்வேஸ்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பிரிவின் துணை பேராசிரியர் டகோ டெர்பஸ்ட்ரா கூறுகிறார்.
தற்போது இந்த இளைய, பண்டைய நாகரிகத்தில் வாழ்ந்த சிறுமி நவீன தொழில்நுட்பம் மூலம் ஆராயப்படுகிறார்.