152 மில்லியன் ஆண்டுகள் பழமையான இக்தியோசாரின் படிமங்கள் கண்டுபிடிப்பு!
29 ஐப்பசி 2017 ஞாயிறு 07:39 | பார்வைகள் : 9642
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 152 மில்லியண் ஆண்டுகள் பழமையான அழிந்து போன கடல் ஊர்வன இக்தியோசாரின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இக்தியோசாரின் படிமங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
கட்ச் பாலைவனத்தில், 252 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய மெஸொசாயிக் காலத்தை சேர்ந்த பாறைகளுக்குளிருந்து இக்தியோசாரின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட முழுமையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இப்படிமம் சுமார் 5.5 மீட்டர் நீளம் இருந்ததாக ஆய்வை தலைமையேற்று நடத்திய பேராசிரியர் குண்டுபல்லி வி ஆர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மண்டை ஓடு மற்றும் வால் எலும்பு ஆகியவற்றில் சில பகுதிகள் காணாமல் போயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு குறித்து பிளோஸ் ஒன் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
''இது ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். இந்தியாவிலிருந்து கிடைத்திருக்கும் முதல் ஜுராசிக் இக்தியோசர் படிமங்கள் என்பதால் மட்டுமல்ல. இந்தியா - மடகாஸ்கர் பகுதியில் இக்தியோசாரின் பரிணாமம் மற்றும் பன்முகத்தன்மை குறித்தும், ஜுராசிக் காலத்தில் பிற கண்டங்களுடனான இந்தியாவின் உயிரியல் இணைப்பு குறித்தும் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்,'' என்கிறார் பிரசாத்.
இந்தியா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட படிமம் ஆப்தெல்மோசாரிடே உடன் ஒப்பிட்டு அடையாளம் காணமுடியும்.
இக்தியோசாரின் குடும்பத்தை சேர்ந்த ஆப்தெல்மோசாரிடே 165 முதல் 90 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் கடல் ஊர்வன விலங்குகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் தென் அமெரிக்கா இடையே 150 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு கடல் சார்ந்த தொடர்புகள் எதேணும் இருந்ததா என்பது குறித்தும் இந்த புதிய படிவங்களை ஆராய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
படிமத்தின் பற்களை விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்ததில், அதன் உயிரியல் சூழலில் வேட்டையாடும் கடல் உயிரினங்களில் உயர்மட்ட அடுக்கில் இருப்பவை எனத் தெரியவந்துள்ளது.