ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்!
19 புரட்டாசி 2017 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 9728
20 தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று சொல்வார்கள். எப்போதோ படித்த இங்கிலீஷ் எஸ்ஸையை வரிமாறாமல் ஓப்பிப்பார்கள்.
எல்லாம் ஒரு காலம். இன்று சொந்த செல்போன் எண்ணையே சிலர் மறந்துவிடுகிறார்கள். பிறந்தநாள், திருமண நாள் கூட நினைவில் நிற்பதில்லை. காரணம் மூளையின் நினைவுத் திறனுக்கான வேலைகளை செல்போனிடம் கொடுத்துவிட்டோம்.
அடுத்து ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றால் கூகுள் செய்து பெற்றுவிடுகிறோம். பெரியவர்களின் நிலையே இதுவென்றால் …. மாணவர்கள்……? பாவம்….. பெரும்பாலான மாணவர்களை வதைப்பது இந்த ஞாபக மறதிதான். ராத்திரி, பகல் விழிதிறந்து படித்தாலும், அடுத்த அரைமணி நேரத்தில் படித்ததெல்லாம் மறந்துவிடும்.
சோர்வு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை என இந்த ஞாபக மறதி ஏற்படுத்தும் துணை விளைவுகள் இன்னும் கொடுமையானவை. நினைவாற்றலை மேம்படுத்த என்னதான் செய்வது? கொஞ்சம் முயற்சி செய்தால் அது ரொம்ப ஈஸி என்கிறார்கள் நிபுணர்கள்.
ஐம்புலன்களாலும் நாம் உள்வாங்கும் விஷயங்கள் வெவ்வேறு கட்டங்களைத் தாண்டி மெமரியில் பதிவு செய்யப்படுகிறது. மெமரியில் பதிவு செய்யப்பட்ட விஷயத்தை தேவைப்படும் இடத்தில் திரும்ப எடுப்பதைத்தான் நினைவாற்றல் என்கிறோம்.
விஷயங்களை பதிவு செய்வதில் பலவிதமான யுத்திகள் ஒவ்வொருவருக்குள் நிகழ்கிறது. படங்களாக, கதைகளாக, சம்பவங்களாக யோசிக்கவே முடியாத கற்பனையாக… இப்படி தான் உள்வாங்கும் விஷயத்தை ஒரு குழந்தை தனக்கு சுலபமான வழியில் மெமரிக்கு கொண்டு செல்கிறது. எனவே நினைவுத் திறனில் பிரச்சனை என்றால் முதலில் அவர்கள் அந்த விஷயத்தை கவனிப்பதில் தான் பிரச்சனை இருக்கும்.
கவனச் சிதறலுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வது முதல்படி. அதன் பின்னர் உள்வாங்கும் விஷயம் மெமரிக்கு கொண்டு செல்லப்படுகிறதா?.... அது எந்த மெமரியில் ஸ்டோர் ஆகிறது என்பது அடுத்த கட்டம். முழுமையாக கவனித்து மெமரிக்கே கொண்டு செல்லாத விஷயங்கள் காணாமல் போய்விடும்.
கவனிக்கப்பட்டு ஷார்ட் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லும் விஷயங்கள், லாங்டேர்ம் மெமரிக்கு சரியாக வகை பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அவ்வாறு லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லப்படாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். எங்கோ கேட்டது மாதிரி இருக்கும். ஆனால் அந்த விஷயத்தை முழுமையாக நினைவுக்கு கொண்டு வரமுடியாது.
அப்போது தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும்.
கவனிக்கும்போதும், உள்வாங்கும் போதும் நன்றாக புரிந்துக் கொள்ளும் சில மாணவர்கள் அந்த விஷயத்தை உடனே கேட்டால் சொல்வார்கள். அடுத்த நாள் கேட்கும் போது மறந்து விடுவார்கள். இவர்களுக்கு விஷயங்களை லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்ல திரும்பத்திரும்ப அதை படிக்க வேண்டியுள்ளது.
அதை அர்த்தமுள்ள புரிதலுக்கு உட்படுத்தி கதை,படங்கள், உருவங்கள் என லிங்க் செய்து லாங் டேர்ம் மெமரிக்கு கொண்டு செல்லும்போது நினைவாற்றலை மேம்படுத்த முடியும். கண்களுக்கு விழிகளை சுழற்றும் பயிற்சி கொடுக்கும்போது மாணவர்களின் கவனம் ஒரு நிலைப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மூச்சுப் பயிற்சியும் கவனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும். எந்த ஒரு விஷயத்தையும் கவனச்சிதறல் இன்றி உள்வாங்கினால் எக்காலமும் அது நினைவில் இருந்து அகலாது…
மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
1. நினைவாற்றலில் சேமித்த விஷயங்களை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ள, உணவால் கிடைக்கும் சத்துக்கள் மூளைக்கு உதவுகின்றன. முழு தானியங்களை சுண்டல் வகைகளாக அப்படியே சாப்பிடவேண்டும்.
2. சிவப்பு பரங்கிக்காயில் உள்ள விதையில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஜின்க் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
3. நல்ல கொழுப்பு உள்ள உணவுகளும், வைட்டமின் சி உள்ள ஆரஞ்ச், எலுமிச்சை, சாத்துக்குடி நெல்லிக்காய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கூடவே பச்சைக் கீரைகள், தக்காளியை சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாகும்.
4. நினைவாற்றல் மேம்படும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவை தவிர்க்கவே கூடாது…