உலகின் மிக பெரிய தொலைநோக்கியை இந்தியாவில் அமைக்க திட்டம்
4 வைகாசி 2016 புதன் 13:18 | பார்வைகள் : 10334
பல நாடுகள் இணைந்து தயாரிக்கவுள்ள உலகின் மிக பெரிய தொலைநோக்கி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் உள்ள ஹான்லே என்னும் இடத்தில் அமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டொலர்ககள் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை நிறுவும் பணிகளை அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது.
எனினும் அதற்கு எதிராக ஹவாயில் எழுந்த போராட்டங்களுக்கு பின், ஹவாய் உச்ச நீதி மன்றம் குறித்த தொலைநோக்கியை அங்கே நிறுவ தடை விதித்தது. இதனை அடுத்து, வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அது இந்தியாவில் அமைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
30 மீட்டர் விட்டம் கொண்ட குறித்த தொலைநோக்கியானது, 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயம் போன்ற பொருட்களையும் மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு திறன் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் முதட்கட்டமாக லடாக்கில் தொலைநோக்கி அமைப்பதற்கான இடம் மற்றும் அதன் சாத்தியக் கூறுகள் குறித்து, சர்வதேச குழுவொன்று ஆய்வு செய்யவதற்காக இன்னும் 2 மாதங்களில் குறித்த இடத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.