உலகில் மிகவும் உயரமான மரம்
19 தை 2016 செவ்வாய் 18:08 | பார்வைகள் : 11832
உலகிலேயே மிகப் பெரிய மரமாக ஹைபெரியன் (Hyperion) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் உயரம் 379.1 அடிகளாகும்.
இதுவரை மிக உயரமான மரமாக இருந்த கலிபோர்னியா ஸ்ட்ராடோஸ்பியர் ஜெயண்ட் (Stratosphere Giant) செம்மரத்தின் உயரம் 369 அடிகள். கிறிஸ் அட்கின்ஸ், மைக்கேல் டெய்லர் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் கலிபோர்னியாவில் உள்ள செம்மர தேசியப் பூங்காவில் மரங்களை ஆய்வு செய்தனர். அப்போதுதான் இதுவரை உயரமாக இருந்த Stratosphere Giant மரத்தை விட Hyperion உயரமாக இருந்ததைக் கண்டறிந்தனர்.
சூழலியலாளர் ஸ்டீவ் சில்லெட் ஹைபெரியனை அளந்து பார்த்தார். ஆனால் துல்லியமாக அளக்க முடியவில்லை. தற்போது மிக நவீனமான கருவிகளுடன் மரத்தின் உயரத்தை அளக்க முடிந்திருக்கிறது. அத்துடன் ஹைபெரியன் பற்றிய ஆவணப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹைபெரியனின் உயரம் குறைவான கிளையே 25 மாடி உயரத்துக்கு இருக்கிறது. அதனால் ஹைபெரியனை அளப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. அட்கின்ஸ், டெய்லரின் கண்டுபிடிப்பு உண்மை என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் உலகிலேயே மிக உயரமான மரம் ஹைபெரியன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் ஹைபெரியனின் உயரம் மிகப் பெரிய சாதனை என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான செம்மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. 1970-ம் ஆண்டு 15 சதவீதமாக எஞ்சியிருந்த செம்மரங்கள், இன்று 4 சதவீதமாகக் குறைந்துவிட்டன. இதில் ஹைபெரியன் பிழைத்திருப்பதே ஆச்சரியமானது என்கிறார்கள். இன்றும் இளைமையோடு வேகமாக வளர்ந்து வரும் ஹைபெரியனுக்கு வயது 600. இன்னும் 600 ஆண்டுகள் கூட வாழ முடியும். ஹைபெரியனைப் பாதுகாப்பதற்காக, அது எங்கே இருக்கிறது என்பதை இதுவரை துல்லியமாகச் சொல்லவில்லை.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து, மரத்தில் ஏறினால் மரம் பாதிப்படையும் என்பதால் இந்த ரகசியத்தைப் பாதுகாக்கிறார்கள்.