Paristamil Navigation Paristamil advert login

சைபீரியாவில் பாரிய மர்மக் குழிகள்

சைபீரியாவில் பாரிய மர்மக் குழிகள்

3 பங்குனி 2015 செவ்வாய் 14:54 | பார்வைகள் : 10492


 ரஷ்யாவின் வடபிராந்தியத்தில், சைபீரியாவில் 4 பாரிய மர்மக் குழிகள் தோன்றியுள்ளன. உலக வெப்பநிலை அதிகரிப்பால் நிலத்தின் கீழிருந்து வாயு (Gas) வெளியேறுவதற்கான வழியாக இது அமைந்திருக்கக்கூடுமென்ற அச்சம் எழுந்திருக்கிறது. 

 
பல்வேறு சிறிய நிலக்குழிகளுடன் புதிய பாரிய குழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரே பிராந்தியத்தில் இக்குழிகள் காணப்படுகின்றன. அதேவேளை கடந்த வருடம் யாமலி வளைகுடாவிலும் 3 பாரிய நிலக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெப்பநிலை அதிகரிப்பால் உறைந்து திண்மமாகியிருந்த மண்படை இழகியதால் அங்கிருந்து மீதேன் வாயு வெளியேறியதால் இக்குழிகள் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. 
 
காலநிலை மாற்றம் தொடரும் நிலையில் குழிகள் ஏற்படுவது பொதுவான விடயமாகிவிடும். நிலைமை தோன்றுமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தற்போது குழிகள் தோன்றியுள்ள பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படலாமென எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
பிரதான வாயு உற்பத்தி உலையிலிருந்து சுமார் 6 மைல் தூரத்தில் புதிய நிலக்குழிகள் தோன்றியுள்ளன. இவற்றைச் சூழ சுமார் 20 சிறிய குழிகளும் காணப்படுகின்றன. மேலும் 30 குழிகள் ஏற்படலாமென விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். 
 
அதேசமயம் இக்குழிகள் ஏற்படுவதற்கான செயற்பாடுகள் தொடர்பாக சரியான முறையில் விஞ்ஞானிகள் இன்னமும் தீர்மானத்திற்கு வரவில்லையென பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் தொடர்பான பீதி ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவசரமான விசாரணைக்கு மொஸ்கோவைத்தளமாகக் கொண்ட எண்ணெய், வாயு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பேராசிரியர் வசிலி போகோயாவ் லென்ஸ்கி அழைப்பு விடுத்திருகிறார். 
 
ஆர்டிக் பிராந்தியத்தில் இப்போது 7 நிலக்குழிகள் இருப்பதாக அவர் சைபீரியன் ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். யாமலி வளைகுடாவில் 5 குழிகளும் யாமல் சுயாட்சி மாவட்டத்தில் ஒன்றும் கிராஸ் நொயாஸ்கி பிராந்தியத்தின் வடக்கே தைமிர் வளைகுடாவுக்கு பக்கத்தில் ஒன்று இருப்பதாகவும் அவற்றில் நான்கு குழிகள் இருக்கும் இடங்களை மட்டுமே சரியாக அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
சிறிய பல குழிகள் இருப்பது பற்றிக் குறிப்பிட்ட அவர் அவற்றை காளான்களுடன் ஒப்பிட்டுள்ளார். ஆட்கள் அச்சப்படக்கூடாது. ஆனால் இது மிகவும் பாரதூரமான பிரச்சினை என்றும் பேராசிரியர் கூறியுள்ளார். ஆர்ட்டிக் பிராந்தியத்திலிருந்து வாயு வெளியேற்றம் தொடர்பான எதிர்வு கூறலையும் நிராகரிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 
 
குழிகளின் சுற்றுப்புறத்தைக் கொண்டு நிலத்தின்கீழ் உள்ள தேக்கத்திலிருந்தும் வாயு வெடித்து மேலெழுந்திருப்பதாக தோன்றுவதாகவும் போகோயாவ் லென்ஸ்கி கூறியுள்ளார். 
 
2013 இல் முதலாவது குழி ஹெலிகொப்டர் விமானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யாமலி வளைகுடாவில் போவாநென் சோவாவிலுள்ள வாயு உற்பத்தி உலைக்கு 20 மைல்  தூரத்தில் அக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. இக் குழிகளின் வெடிக்கும் சக்தியானது 11 தொன் ரிஎன்ரிக்கு சமனானது என்று நிபுணர் ஒருவர் கணிப்பிட்டுள்ளார். 
 
அதேவேளை நிலக்குழியொன்றுக்கு அருகாமையில் பிரகாசமான ஒளிப்பிழம்பு காணப்பட்டமை மண்ணுக்கு கீழ் உள்ள வாயுப் படலங்கள் அதிகளவுக்கு உஷ்ணமடைந்திருப்பதால் என்றும் கருதப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்