இஸ்ரேலிய குகையில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோட்டின் பின்னணி
7 மாசி 2015 சனி 09:14 | பார்வைகள் : 10225
இஸ்ரேலிய குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மண்டையோட்டின் ஒரு பகுதி, தற்கால மனிதர்கள் ஆப்ரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த விதம் குறித்து புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது.
சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பிராந்தியம் வழியாக மனிதர்கள் இடம்பெயர்ந்து சென்று ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் வாழத்தொடங்கினார்கள் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த மண்டை ஓட்டின் பகுதியும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மண்டை ஓடு ஆரம்பகால ஐரோப்பியர்களை ஒத்திருந்தாலும், ஆப்ரிக்கர்களின் சில குணாம்சங்களையும் அது கொண்டிருப்பதாக இந்த மண்டையோட்டை கண்டறிந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திய இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த புரிதலுக்கு இந்த மண்டை ஓட்டின் பகுதி ஒரு முக்கிய சான்று என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் நியாந்தெர்தல் மனிதர்கள் எனப்படும் ஆதிமனிதர்களுடன் தற்போதைய மனித இனம் ஒன்றாக வாழ்ந்தனர் என்பதாகவும், இருதரப்பாரும் இணைந்து வாரிசுகளை உருவாக்கினார்கள் என்பதாகவும் முன்வைக்கப்படும் கருதுகோளை இந்த மண்டை ஒட்டின் ஒரு பகுதி ஆதரிப்பதாகவும் இருக்கிறது.