பூமிக்குள் புதைந்திருக்கும் மர்ம ரகசியம்!
16 புரட்டாசி 2014 செவ்வாய் 15:58 | பார்வைகள் : 10751
பூமியின் மையப்பகுதி அருகே அதிகளவு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவன் ஜாகப்ஸென் தலைமையில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இருந்து சென்ற புவியியலாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தண்ணீரின் அளவு புவியின் மேற்பரப்பிலுள்ள எந்தவொரு கடலை விடவும் மூன்று மடங்கு அதிகம்.
புவியியலாளர்கள் நிலஅதிர்வு தொடர்பான அலைகளின் வேகத்தினைக் கொண்டு, புவிக்கடியில் இருப்பதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அலைகள் “ரிங்க்வுட்டைட்” எனப்படும் நீலநிற பாறைகளில் பட்டவுடன் அதன் வேகம் குறைந்ததைக் கவனித்தனர். இதன் அர்த்தம் அந்தப்பகுதி நீர் மற்றும் பாறையால் இருப்பதைக் குறிக்கிறது.
புவியின் மெல்லிய அடுக்கிற்குக் கீழ் சுமார் 700 கிலோ மீட்டர் வரை இந்தத் தண்ணீர் பரவியுள்ளது. இந்த மெல்லிய அடுக்கு, புவியின் மேற்பரப்பிற்குக் கீழே வெப்பமான பாறையிலான அடுக்கினால் ஆனது. புவியின் மேற்பரப்பிலுள்ள தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம் என ஜாகப்ஸென் கூறினார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நீரின் இடம் சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் உள்ளதாகவும், அந்தத் தண்ணீர் புவியின் மேற்பரப்பிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜாகப்ஸென் கூறியுள்ளார்.
இது பல புவியியலாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், நீர் புவியின் பிற பகுதிகளில் இருந்து ஊடுருவி இருக்குமா, அல்லது பனிக்கட்டி வால்மீன்கள் பூமியின் மீது மோதியதால் உருவாகியிருக்குமா? இவ்வாறு பல விதமான கேள்விகளை எழுப்புகின்றனர்.