உலகில் அதிக காலம் வாழும் சுறாக்கள்
19 ஆவணி 2016 வெள்ளி 01:25 | பார்வைகள் : 10791
கிரீன்லாந்து சுறாக்கள் பூமியில் நீண்ட காலம் உயிர்வாழும் முதுகெலும்புள்ள விலங்கினமாக விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
ரேடியோகார்பன் காலக்கணிப்பு முறையை பயன்படுத்தி குறித்த 28 சுறாக்களிடம் ஆய்வு நடத்தியபோது அதில் பெண் சுறா ஒன்றின் வயது சுமார் 400 ஆண்டுகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுறாக்கள் ஆண்டுக்கு வெறும் ஒரு சென்டிமீற்றர் மாத்திரமே வளர்ச்சியடைகிறது என்பதையும் அவை சுமார் 150 வயதிலேயே இனப்பெருக்க முதிர்ச்சி அடைகிறது என்பதையும் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வு பற்றிய விபரம் ‘சையன்ஸ்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
முன்னதாக திமிங்கில இனம் ஒன்றே உலகில் நீண்ட காலம் உயிர்வாழும் முதுகெலும்புள்ள விலங்கினமாக இருந்தது. அந்த திமிங்கிலம் 211 வயது வரை உயிர்வாழ்வது கண்டறியப்பட்டது. எனினும் முதுகெலும்பற்ற உயிரினங்களில் அதிக காலம் உயிர்வாழும் சாதனையை சிப்பி இனம் ஒன்று வைத்துள்ளது. அது 507 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. ஐந்து மீற்றர் வரை வளரும் கிரீன்லாந்து சுறாக்கள் வட அட்லாண்டிக்கின் ஆழமான கடலில் மெதுவாக நீந்தக்கூடியதாகும்.