மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
9 புரட்டாசி 2023 சனி 07:04 | பார்வைகள் : 5363
மணிப்பூரில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே 4 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறபோதிலும், அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாய் நீள்கிறது.
இந்த நிலையில் மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் உள்ள பல்லேல் நகரில் நேற்று காலை இரு கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொண்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.
கண்ணீர் புகை குண்டு வீச்சு
இதனிடையே துப்பாக்கி சண்டை குறித்த செய்தி பரவியதும் அண்டை மாவட்டங்களான தவுபால் மற்றும் காக்சிங்கில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பல்லேல் நகரை நோக்கி விரைந்தனர்.
ஆனால் அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுத்து நிறுத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அசாம் ரைபிள் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் சுமார் 50 பெண்கள் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் பல்லேல் நகரில் இரு தரப்பு கும்பல்களுக்கு இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 48 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.
மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 பேர் பலியானதை தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.