Paristamil Navigation Paristamil advert login

மத்திய ஆசியாவை குறி வைக்கும் மேற்குலகம்

மத்திய ஆசியாவை குறி வைக்கும் மேற்குலகம்

10 ஆடி 2023 திங்கள் 10:09 | பார்வைகள் : 4041


'சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி...' என்ற அம்புலிமாமா கதையை எம்மில் பெரும்பாலோனோர் சிறு வயதில் படித்திருப்போம்.

உக்ரேன் போருக்குப் பிந்திய உலக அரசியலில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளை அணி திரட்டுவதில் மேற்குலகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது விக்கிரமாதித்தன் கதையே ஞாபகத்துக்கு வருகிறது.

‘உலகம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மேற்குலகை மாத்திரம், மேற்குலகின் சிந்தனையை மாத்திரம் அடக்கிவிட எடுக்கப்படும் முயற்சிகள் ஒன்றும் இரகசியமானவை அல்ல. ஒற்றை மைய உலகப் போக்கு இன்று பலத்த சவாலுக்கு உட்படுத்தப்பட்டுவரும் காலகட்டத்தில் மேற்குலகின் பிடி படிப்படியாகத் தளர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

சுதந்திரமான சிந்தனை கொண்ட நாடுகள் தொடர்ந்தும் உலகில் அதிகரித்து வரும் நிலையில் அணி சேர்க்கை என்பது கடினமாகிக் கொண்டே வருகின்றதைக் காண்கிறோம்.

அது மாத்திரமன்றி நவீன காலனித்துவக் கொள்கைகளை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிட மேற்குலகம் எவ்வளவு தூரம் முயற்சி மேற்கொண்டாலும் அவை வெளிப்பட்டே ஆவதையும் பார்க்க முடிகின்றது.

உக்ரேன் போர் தொடர்பில் அடுத்தடுத்து பல சுற்றுப் பொருளாதாரத் தடைகளை ரஷ்யாவின் மீது விதித்த மேற்குலகம் குறிப்பாக அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அதுபோன்று பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ரஷ்யாவுடனான உறவுகளை முறித்துக் கொள்ளவும் முன்வர வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுப்பதுடன் தன் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத நாடுகளை அச்சுறுத்தியும் வருவது தெரிந்த விடயம். இராஜதந்திரம் என்ற சொல்லாடலுள் தமது வஞ்சக நோக்கத்தை மறைத்துக் கொள்ளும் மேற்குலகம் பொருளாதார உதவிகள் என்ற ஆசை வார்த்தைகளையும் அள்ளிவீசி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலுகின்றது.

எப்பாடுபட்டாவது ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி விடுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தற்போது சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுகளான கஸக்ஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்றவற்றின் மீது தமது பார்வையைத் திருப்பியுள்ளது.

உலக வரைபடத்தில் உள்ள இந்த நாடுகள் அன்றாடச் செய்திகளில் அதிகம் அடிபடாத நாடுகளாக இன்றுவரை இருந்து வருகின்றன. இந்தப் பெயரில் இவ்வாறு நாடுகள் இருக்கின்றனவா என்றுகூடச் சிலருக்கு ஐயம் எழக்கூடும். ஆனால், உக்ரேன் போர் ஆரம்பமானதன் பின்னான சூழலில் இந்த நாடுகளை இலக்கு வைத்து மேற்குலகம் களம் இறங்கியுள்ளது.

இந்த நாடுகளில் மேற்குலகு இரண்டு நோக்கங்களுடன் களமிறங்கி உள்ளது. முதலாவதாக, ரஷ்யாவின் நட்பு நாடுகள் என்ற வகையில் இருந்து அவைகளைப் பிரித்தெடுத்து உக்ரேன் போர் தொடர்பில் ரஷ்யாவைக் கண்டிக்கும் நாடுகளாக அவற்றை மாற்றுவது. இரண்டாவதாக, தன் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக தனது நட்பு நாடுகளுக்கு ஊடாக தனக்குத் தேவையான - தடை விதிக்கப்பட்ட - பொருட்களை ரஷ்யா இறுக்குமதி செய்து கொள்வதைத் தடுப்பது.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை போர் ஆரம்பமான நாள் முதலாக மேற்குலகம் விதித்த வண்ணமேயே உள்ளது. பல சுற்றுகளாக இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டாலும் கூட இன்றுவரை ரஷ்யாவின் ஆற்றல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதனை மேற்குலகமும் நிறுத்திக் கொண்டதாவும் தெரியவில்லை.

பல சுற்றுக்களாக பொருளாதாரத் தடைகளை விதித்த பின்னரும் ரஷ்யாவால் தாக்குப் பிடிக்க முடிகின்றது என்றால், பொருளாதார முற்றுகையில் எங்கோ ஒரு ஓட்டை இருக்கின்றது என்பதே அர்த்தம். இது இலகுவில் ஊகிக்கக்கூடிய ஒரு விடயமே.

பொருளாதாரத் தடை காரணமாக மேற்குலகிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அவற்றை வேறு நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் புதிய நடைமுறையை ரஷ்யா ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் குறித்த மத்திய ஆசிய நாடுகளிடம் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை ரஷ்யா பெற்றுக் கொள்கிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் இத்தகைய வர்த்தகத்தில் நூறு வீதம் வரையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து 20 மில்லியன் டொலர் பெறுமதியான 2.4 மில்லியன் தொன் பொருட்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உஸ்பெஸ்கிஸ்தான் தலைநகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மாநாடொன்றில் பேசிய ரஷ்ய கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டெனிஸ் மன்ருரவ், கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தில் 15 வீத அதிகரிப்பு ஏற்பட்டதாகத் தெரி வித்திருந்தார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒப்ப, கிர்கிஸ்தான் நாட்டுடனான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வர்த்தகத்தில் கடந்த வருடத்தில் சடுதியான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

பொதுவான வர்த்தகத்தில் 300 சதவீத அதிகரிப்பும், தொழில்நுட்ப உபகரண வர்த்தகத்தில் 700 சதவீத அதிகரிப்பும் உக்ரேன் போருக்குப் பின்னான ஒரு வருடத்தில் ஏற்பட்டமை ஐரோப்பிய ஒன்றியத்தை பதற்றமடைய வைத்துள்ளது. ஆனாலும், மத்திய ஆசிய நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைக்க முடியாத நிலையில் உள்ளதை மேற்குலகம் நன்கு உணர்ந்துள்ளது.

இந்நிலையில், ஆசை காட்டி, பொருளாதார உதவிகளை வாரி வழங்கி அவற்றை வழிக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மேற்குலகம் ஈடுபட்டுள்ளது.

செய்மதிகளுக்கான தொடர்பு நிலையங் களை இந்தப் பிராந்தியங்களில் அமைப்பதற்கு 22 மில்லியன் டொலரைச் செலவிடத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அறிவித்திருந்தது. பதிலுக்கு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொள்ளுமாறும், அதனால் ஏற்படக் கூடிய இழப்புகளுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் எனவும் மேற்குலகம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.

அதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின்  ராஜதந்திரிகளும் இந்த நாடுகளுக்கு அடிக்கடி வருகை தருவதையும் அவதானிக்க முடிகின்றது.

ஆனால், மேற்குலகின் இந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே நோக்கர்கள் கணிக்கின்றனர். "மத்திய ஆசிய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகளாக மாறுவதற்கு முன்னர் இருந்தே ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணி வந்திருக்கின்றன. அந்த நாடுகள் இன்று கண்டுள்ள அபிவிருத்திகள் பெரும்பாலும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருந்ததன் அறுவடைகளே.

அது மாத்திரமன்றி, ரஷ்யாவுடனான சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பின் பங்காளிகளாக குறித்த நாடுகள் பல அனுகூலங்களை அனுபவித்து வரும் நிலையில் மேற்குலகின் சதிவலையில் அவை சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு" என்கின்றனர் அவர்கள்.

உக்ரேன் போரை மையமாக வைத்து ரஷ்யாவைத் துண்டாட நினைக்கும் மேற்குலகின் கனவு போர்க் களத்திலும்,  ராஜதந்திரக் களத்திலும் ஆட்டம் கண்டு வருவதையே தொடர்ச்சியாகப் பார்க்க முடிகின்றது.

ஆனால், ‘தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத...’ மேற்குலகம் இலகுவில் தனது முயற்சிகளை கைவிட்டுவிடும் என்று  மட்டும் எதிர்பார்ப்பது மடமையிலும் மடமை.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்