பதவி உயர்வு !
18 வைகாசி 2023 வியாழன் 07:54 | பார்வைகள் : 12575
கூட்டம் அதிகமில்லாத பேருந்து நிறுத்தம் அது, அங்கே ஒரு புளிய மரம்.
அதனடியில் ஒரு பூக்கார அம்மா, அவரது பெயர்கூட 'கனகாம்பரம்'தான்.
அவருக்கு முன்னால் ஒரு சிறு மரப்பலகை, அதில் மல்லி, முல்லையில் ஒவ்வொரு பூ பந்து , இவற்றுடன் மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை பூ, சில வாசனை இலைகள் எல்லாம் வைத்துக் கட்டப்பட்ட கதம்பம் ஒரு பந்து, அப்போதைக்கப்போது பூக்கள் வாடாமல் இருக்க அதன்மேல் தெளிப்பதற்காக ஒரு கிண்ணத்தில் தண்ணீர், இவைதான் அந்த பூக்கடை.
வேறுவழி இல்லாமல்தான் கனகாம்பரம் அந்த பூக்கடையை நடத்துகிறார் என்பதை அக்கடைக்கு வந்து பூ வாங்குபவர்களின் எண்ணிக்கையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
குடும்பச்சுமை எப்படி சமாளிக்கப்படுகிறதோ !
மதிய சாப்பாட்டுக்கு மரத்தின்மேல் தொங்கிக்கொண்டிருக்கும் மஞ்சள் பையைத் திறந்து ஒருபுறமாகத் திரும்பி உட்கார்ந்து ஏதோ அள்ளிப்போட்டுக்கொண்டு மீண்டும் நேராக உட்கார்ந்துவிடுவார்.
காலையிலிருந்து இருட்டும்வரை கடை திறந்தே இருக்கும். வீட்டுக்குக் கிளம்பும்போது கடையை(!) எடுத்து மரத்தில் உள்ள ஆணியில் மாட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார்.
தினமும் மதியத்துக்குமேல் வாடிக்கையாக அந்தப் பகுதிக்கு மூவராக வருபவர்களில் இருவர் பிரிந்து ஒரு ஓரமாக நிற்க, ஒரு பையன் மட்டும் நேரே கனகாம்பரத்திடம் வந்து நின்று, உட்கார்ந்து, ஏதோ பேசி, அடம்பிடித்து, எதையோ வாங்க முற்படுவான்.
கனகாம்பரம் கண்டுகொள்ளாமலே இருந்து பார்ப்பார். வேறு வழியில்லாமல், சிறிது கண்டிப்புடன் தன் சுருக்குப் பையிலிருந்து கொஞ்சம் சில்லரைகளை எடுத்துக் கொடுப்பார்.
அவ்வளவுதான், ஒரே ஓட்டமாக ஓடி அந்த இருவருடன் சேர்ந்து காணாமலே போய்விடுவான். அவன் சென்று மறையும்வரை ஒரு ஏக்கப் பார்வையுடன் பார்ப்பார்.
ஏதோ ஒரு வேலை செய்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டிய வயதில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான் சுரேசு.
சில மாதங்களுக்குப் பிறகு மதிய நேரத்தில் தினமும் பூக்கடைக்கு ஒரு இளம்பெண் வருகிறாள்.
ஒருவேளை இப்பெண் கனகாம்பரத்தின் மருமகளாக இருப்பாளோ !
தன் மகனுக்கு ஒரு கால்கட்டு போட்டால் திருந்திவிட வாய்ப்புண்டு என்று யாராவது சொன்னதை நம்பி இப்பெண்ணை பலிகடா ஆக்கி இருப்பாரோ !
மருமகள் வந்ததும் அவளிடம் கடையை ஒப்படைத்துவிட்டு கனகாம்பரம் வீட்டுக்குபோய் மதிய சாப்பாடை முடித்துத் திரும்புகிறாள்.
திருமணம் ஆகியும் சுரேசு கடைக்கு வந்து தன் அம்மாவிடம் தண்டத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுவதில்லை.
அடுத்த சில மாதங்கள்வரை மருமகள் கடைப்பக்கம் தலைகாட்டாமல் இருந்து, ஒருநாள் சாப்பாட்டு பை, குழந்தையுடன் கடைக்கு வருகிறாள்.
கனகாம்பரம் திரும்பி உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, குழந்தையை சிறிது நேரம் கொஞ்சிவிட்டு, மருமகளை வீட்டுக்கு அனுப்புகிறார்.
இப்படியே சில மாதங்கள் தொடர்கிறது.
எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே போகும்! ஒருநாள் கடை திறக்கப்படவே இல்லை.
ஒருநாள், இரண்டு நாள், பத்து நாள் ? ............ ஏறக்குறைய ஒரு மாதம், கடைக்கு விடுமுறை.
மீண்டும் திறக்கப்படும்போது அங்கே கனகாம்பரம் இல்லை, மரப் பலகைக்குப் பின்னால் அவரது மருமகள்தான் அமர்கிறாள்.
கனகாம்பரம் நிரந்தரமாக ஓய்வு எடுத்திருப்பாரோ !
சும்மா சொல்லக்கூடாது, கனகாம்பரத்தின் மருமகள் தைரியம், உழைப்பு இரண்டையும் தன் மாமியாரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறாள்.
இல்லையென்றால் துறுதுறுவென இங்குமங்கும் ஓடும் தன் இரண்டு வயது மகனையும் பார்த்துக்கொண்டு, கடையையும் நடத்த முடியுமா ?
சுரேசு ? ....... இதே பூக்கடைக்கு முன்பு மகனாக வந்தவன் இப்போது கொஞ்சம் பதவி உயர்வு பெற்று கணவனாக வந்து போய்க்கொண்டிருக்கிறான்.