ராஜாவும் முட்டாள் குரங்கும்
29 சித்திரை 2023 சனி 12:27 | பார்வைகள் : 14146
வேதபுரி என்ற நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் தனக்கு பரிசாக கிடைத்த குரங்கு ஒன்றை ஆசையா வளர்த்து வந்தார். அந்த குரங்கும் அந்த அரசரின் மீது மிகவும் பாசமாக இருந்தது.
ஒரு நாள் ராஜா வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவப் போகும் பொழுது குரங்கையும் கூடவே அழைத்துச் சென்றார்.
செல்லும் வழியில் ஒரு முட்புதர்க்கு நடுவில் பாம்பு ஒன்று இருப்பதை குரங்கு கவனித்தது. உடனே அந்த குரங்கு தாவி குதிச்சு பாம்பு இருப்பதை ராஜாவிடம் காண்பித்தது. அந்த பாம்பு ராஜாவை கடிக்கும் முன்பு குரங்கு பாம்பிடம் சண்டையிட்டு பாம்பைக் கொன்றது.
சரியான சமயத்துல ராஜா, பாம்புக் கடியிலிருந்து தப்பித்தார். குரங்கின் எச்சரிக்கை உணர்வையும், விசுவாசத்தையும் பார்த்து ராஜா மிகவும் நெகிழ்ந்தார்.
உடனே, அந்தக் குரங்கையே தன்னோட பாதுகாவலரா நியமிக்க முடிவு செய்தார். அவரோட இந்த முடிவைக் கேட்ட மந்திரிகள் அனைவரும் திகைத்து நின்றனர்.
அவர்கள் ராஜாவிடம், ‘ராஜா என்னதான் இருந்தாலும் அது ஒரு விலங்குதானே! அதுக்கு மனிதர்கள் மாதிரி பகுத்தறிவோ, முடிவெடுக்கும் திறமையோ இருக்காதே! உங்களோட இந்த விபரீத எண்ணத்தை மாத்திக்கங்க'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.
ராஜா கேட்கறதா இல்லை.
‘என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு அந்தரங்கப் பாதுகாவலனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி பாசமும், விசவாசமும்தான்! அது என் குரங்குகிட்ட நிறையவே இருக்கு! அதனால என் பாதுகாவலுக்கு மனிதர்கள் வேண்டாம். குரங்கே போதும்'னு தீர்மானமா சொல்லிட்டாரு.
அன்று முதல் குரங்கு, ராஜாவை விட்டு ஒரு நிமிஷம்கூட விலகாம அவர் எங்கு போனாலும் கூடவே போறதும் வர்றதுமா இருந்தது.
ஒரு நாள் ராஜா குரங்கிடம் ‘எனக்கு தூக்கம் வருகின்றது. நான் கொஞ்ச நேரம் நல்லா தூங்கப் போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்க’ன்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பித்தார்.
குரங்கும் ரொம்ப அக்கறையா, படுக்கைக்குப் பக்கத்துலேயே இருந்து காவல் காத்தது. அந்த சமயம் பார்த்து அங்க ஒரு ஈ வந்தது. அது ராஜா காது கிட்ட வந்து ‘ஸொய் ஸொய்'ன்னு கத்தி ராஜாவை தொந்தரவு செய்தது. குரங்கு ‘சூசூ'ன்னு துரத்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சி, அந்த ஈ திரும்பவும் அங்கேயே சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருந்தது. குரங்குக்கு கோபம் தாங்கல. ஈக்குத் தகுந்த பாடம் புகட்டணும்னு தீர்மானிச்சிடுச்சு. அது ராஜாவோட வாளை கையில் எடுத்தது. இந்த முறை ஈ வந்தா அதை ஒரே போடு போட்டு ரெண்டு துண்டாக்கிட வேண்டியதுதான்னு முடிவு செய்தது.
நடப்பது எதுவும் தெரியாத ராஜாவோ பாவம் நிம்மதியா தூங்கிக்கிட்டிருந்தாரு. ஈ திரும்பவும் வந்தது. இந்தத் தடவை அது ராஜாவோட கழுத்துக்கு மேல பறந்தது.
தயாராக இருந்த அந்த குரங்கும் ஈயை ஒரே வெட்டா வெட்டிடுச்சி. ஐயோ! என்ன பரிதாபம்! ஈ பறந்து தப்பிச்சிடிச்சு. ராஜா தலை துண்டாகிப் போச்சு. இப்படியாக, ராஜா தன்னோட சொந்த பாதுகாவலனாலயே கொல்லப்பட்டுட்டாரு.
ராஜா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த நாட்டு மக்களும் மந்திரிகளும் சோகத்துல மூழ்கிட்டாங்க. அவங்க 'புத்திசாலியான எதிரியைவிட முட்டாளான தோழன்தான் ரொம்ப ஆபத்தானவன்'னு ராஜாவுக்குத் தெரியாமல் போய் விட்டதே என்று புலம்பினார்கள்.