வறிய விருந்தினன்
10 பங்குனி 2023 வெள்ளி 08:40 | பார்வைகள் : 9581
வறியவன் ஒருவன், பணம் படைத்த உறவினர்கள் வீட்டில் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டான். விருந்திற்கு அணிந்து செல்ல அழகிய உயர்ந்த ஆடையில்லாததால் பஞ்சில் நெய்ந்த மெல்லிய ஆடையொன்றை அணிந்து சென்றான்.
தன் ஆடையைக் கண்டு பிறர் எள்ளி நகைப்பர் என்றெண்ணிய விசிறியொன்றைக் கையிலெடுத்து விசிறிய வண்ணம் “இயல்பாகவே கோடை வெப்பம் என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு, எனவே வாட்டும் குளிர்காலத்தில் கூட விசிறியால் விசிறிக்கொள்வேன்” என்றான்.
வறியவனின் இந்தப் போலி நாடகத்தை வெளிப்படுத்த திட்டமிட்டான். விருந்து கொடுத்தவன். விருந்தின் முடிவில் எல்லோரும் உறங்கப் படுக்கைகள் பாதுகாப்பான உள் அறைகளில் அணியமாயின. இந்த வறியவனுக்கு மட்டும் வீட்டின் முகப்பிலுள்ள குளத்தின் அருகில் திறந்தவெளித் திண்ணையொன்றில் மெல்லிய படுக்கை விரிக்கப்பட்டு அதில் புல்லினால் செய்த தலையணை வைக்கப்பட்டது.
பின்னர் போர்த்திக் கொள்ளப் போர்வையேதுமின்றி வறியவனைப் படுக்கச் செய்தான். பக்கத்தில் நின்று நடக்கப் போகும் வேடிக்கையைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான் விருந்து கொடுத்தவன்.
குளிர்தாங்க மாட்டாமல் நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்தான் வறியவன். படுக்கை விரிப்பையெடுத்துப் போர்த்திக் கொண்டு தப்பிச் செல்ல முனைந்தான். பரபரப்பில் படுக்கை விரிப்புத் தட்டி அருகிலிருந்த குளத்தில் விழுந்து விட்டான்.
இந்த வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விருந்து கொடுத்தவன் “என்ன நடந்தது?” என்று ஒன்றுமறியாதவன் போல் கேட்டான்.
"வெப்பத்தின் மீது எனக்குள்ள வெறுப்புத்தான்; வேறொன்றுமில்லை. திறந்தவெளித் திண்ணையில் தான் எனக்கு நீங்கள் படுக்கைப் போட்டீர்கள் என்றாலும் உங்கள் குளத்தில் குளித்துவிட்டுத்தான் தூங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று பக்குவமாக விடையளித்தான் வறியவன்