கணவன் - மனைவி விவாகரத்து வழக்கு
8 ஆனி 2016 புதன் 12:16 | பார்வைகள் : 9810
நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"
அப்பாவி கணவர்: "அய்யா! நான்
ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்பரம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.
சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.
வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?
பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.
வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"
பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?
வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது.
பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்.
வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?
பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க.
வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?
பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.
வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க.
இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?"
பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன மாரடைப்பா வந்திரிச்சு? இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க.
கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி மாரடைப்பால் கீழே விழுந்தார்.