நான் அவனில்லை...!
6 மாசி 2014 வியாழன் 14:56 | பார்வைகள் : 10279
ஒருவன் மிக நன்றாக குடித்து விட்டு வந்தான். வீட்டில் பயங்கர ரகளைகள் செய்தான். வாந்தி எடுத்தான். மனைவி அவனை ஒருவாறு கட்டிலில் கொண்டு போய் கிடத்தினாள். அவனது உடுப்புக்களை கழற்றி மாற்று உடுப்பு மாற்றிக் கொடுத்தாள். இவனது குடியால் அவளுக்கு அன்று ஏகப்பட்ட துப்புரவு வேலைகள். படுக்கப் போகவே நள்ளிரவு ஆகி விட்டது.
மறுநாள் தாமதமாகவே நித்திரை முறிந்து எழுந்தான் கணவன். வெறியும் முறிந்து இருந்தது. வீட்டில் மனைவி சூர சங்காரம் நடத்துவாள் என்று எதிர்பார்த்து உள்ளூர பயந்து காணப்பட்டான். ஆனால் வீடு அமைதியாக இருந்தது. மனைவியை காணவில்லை. ஒரு வேளை கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாளோ? என்று எண்ணினான். ஏதோ ஒரு நப்பாசையில் குசினிக்குள் சென்றான்.
ஆச்சரியம்! மனைவி இவனது காலை உணவை தயாரித்து, மிக பக்குவமாக கோப்பை ஒன்றில் பரிமாறி வைத்து விட்டு சென்று இருந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தான். கோப்பை ஒன்றின் கீழ் தெரியும்படியாக கடதாசிக் குறிப்பு ஒன்று எழுதப்பட்டு இருந்தது. ஒருவேளை தற்கொலை செய்ய போகின்றாள் என்று எழுதி வைத்து விட்டு சென்று விட்டாளோ? என்று எண்ணி வியர்த்துப் போனான். குறிப்பை வாசித்தான்.
அன்பே நான் பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்கின்றேன், உங்கள் சாப்பாட்டை நேரத்துக்கே எழுந்து தயாரித்து வைத்து உள்ளேன், உடம்பை நன்றாக பாருங்கள், ஓய்வு எடுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. இவனால் நம்பவே முடியவில்லை.
இன்னொரு அறையில் படுக்கையில் கிடந்த 08 வயது பையனை எழுப்பினான். நேற்று இரவு என்ன நடந்தது? என்று கேட்டான்.
பையன் படுசுட்டி. நீங்கள் குடித்து விட்டு வந்திருந்தீர்கள், அம்மா உங்களை கட்டிலுக்கு கொண்டு போனார், உங்கள் உடுப்புக்களை கழற்றினார், அப்போது நீங்கள் பெண்ணே நான் திருமணம் ஆனவன், நீ நினைக்கின்ற மாதிரி ஆள் நான் இல்லை... என்று பிதற்றி விட்டு நீங்கள் தூங்கி விட்டீர்கள் என்றான் பையன்.