Paristamil Navigation Paristamil advert login

எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க...........

 எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க...........

18 புரட்டாசி 2013 புதன் 09:35 | பார்வைகள் : 10449


 ஒரு உணவகத்தில் மதிய உணவுநேரம்..!எனக்கு எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்த – போன வாரம் நாற்பதைத் தாண்டிய – ஆசாமியின் சட்டைப்பை அலறியது…!

 
இடது கையால் எடுத்தவர்…
”ஆமாம்.. நான்தான் பேசுறேன்.. ம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க.. நான் சாப்பிட்டுட்டு இருக்கேன்..”மறுபடியும் சட்டைப்பைக்குள் சிறையிலிட்டார்..
 
கேள்வியே கேட்காத என்னிடம்…
”நான் சொல்றது சரிதானுங்க.?. சாப்பிடும் போது பேச கூடாதுதானே..?”
 
நான் சாம்பார் வெண்டைக்காய் பாதியை கடித்தபடியே மையமாக தலையாட்டினேன்..
 
அவரே தொடர்ந்தார்..
”எதுக்கு சொல்றன்னா.. நாம இம்புட்டு ஓடியாடி சம்பாதிக்கறது எதுக்கு..? சாப்பிடறதுக்குதானே.. அங்கனயும் பேசிகிட்டே சாப்பிட்டா எப்படி ஒடம்புல ஒட்டும்ங்கறேன்..”
 
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் அலைபேசி அழைத்தது..
 
எடுத்து பழைய.. ”நான் சாப்பிட்டு இருக்கேன்.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க..” டயலாக்கை மறுபதிவிட்டு தொடர்ந்தார்..
 
”அதுல பாருங்க.. சாப்பிடும் போது பேசுறது உடம்புக்கே நல்லது இல்லன்னு டாக்டருகளே டிவியில சொல்றாங்க.. ஒழுக்கமா செரிக்காதாமாம்..”
 
நான் காரக்குழம்பிலிருந்து ரசத்திற்க்கு தாவினேன்… அவர் அங்கயேதான் சுற்றிக் கொண்டிருந்தார்..
 
”நான் என் சொந்தக்காரன்.. தெரிஞ்சவன்னு எவன் போனு பண்ணாலும் சாப்பிடும் போது மட்டும் பேசமாட்டேன்.… அவிங்க்கிட்டயே மூஞ்சி முன்னாடியே சொல்லிப்புடுவேன்…"
 
நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கீரைக்கூட்டு வாங்கிக் கொண்டேன்... அவரும் எக்ஸ்ட்ராவாக தொடர்ந்து கொண்டிருந்தார்...
 
”அப்படிதான் பாருங்க.. ஒரு தடவை எங்க பெரியப்பா பையன் ஒருத்தன் சாப்பிடும் போது பேசப்போயி… புரையேறி… திக்குமுக்காடிப் போயி…. மயக்கம் போட்டே விழுந்துட்டானுங்க…”
 
நான் ரசத்திலிருந்து மோருக்கு…..
 
”அவ்வளவு ஏன்ங்க..? என் பொண்டாட்டி கூட நான் சாப்பிடும் போது பேசமாட்டாளுங்கன்னா பார்த்துக்குங்க.. நீங்களும் இந்த மாதிரி சாப்பிடும் போது பேசுற பழக்கம் இருந்துச்சுன்னா மாத்திக்கீங்க.. என்ன நான் சொல்றது..?”
 
நான் இலையை மடித்துவிட்டு கைகழுவ எழுந்துச் செல்லும் வரை.. அவர் பேசிக்கொண்டிருந்தார்….!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்