சூடானில் தொடர்ந்து இடம்பெறும் மோதல்கள்
18 சித்திரை 2023 செவ்வாய் 11:43 | பார்வைகள் : 9632
சூடானில் மோதல் தொடர்ந்தும் நீடிக்கின்ற நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் மின்சாரம் நீர் வசதியின்றி சிக்குண்டுள்ளனர் என்ற தகவல் பிபிசிக்கு கிடைத்துள்ளது.
அதேவேளை நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து பாதுகாப்பான இடங்களிற்கு அகற்றப்படுகின்றனர்.
நாங்கள் வீதியில் மோதலின் நடுவில் சிக்கி உயிரிழக்கப்போகின்றோம் என நினைத்தேன் என மருத்துவமனையிலிருந்து தனது 14வயது மகளுடன் அகற்றப்பட்ட பாகீம் தெரிவித்துள்ளார்.எனது 14 வயது மகளிற்கு தலையில் கட்டி என்பதால் அவருக்கு மிகவும் முக்கியமான சத்திரசிகிச்சையை செய்யவேண்டிய நிலையேற்பட்டது,ஆனால் எறிகணை தாக்குதல்களால் நாங்கள் ஒவ்வொரு அறையாக செல்லவேண்டிய நிலை காணப்பட்டது நாங்கள் இறுதியாக மருத்துவமனையின் கீழ் தளத்திற்கு வந்தோம் ஆனால் எங்களை அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மோதல் வெடித்துள்ளது முதல் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சூடானை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு முயலும் இருவருக்கு இடையிலான கருத்துவேறுபாடுகளை தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது.ஜனாதிபதிக்கும் சூடானின் வலுவான துணை இராணுவகுழுவின் தலைவருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
எங்களை சுற்றியிருந்த கட்டிடங்கள் குண்டுவீச்சிற்கு இலக்கான நிலையில் நான் மகளை தூக்கிக்கொண்டு அலைந்தேன் மகள் மிக மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என பாஹீம் தெரிவித்தார்.
தந்தையும் மகளும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச்சென்றனர்.
மகள் தற்போது நல்ல நிலையில் காணப்படுகின்றார் சிலவாரங்களில் நாங்கள் மீண்டும் மருத்துவரை பார்ப்பதற்காக வரவுள்ளோம் என அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் இருந்து சிலர் வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளை பலர் உள்ளே சிக்குண்டுள்ளனர்.
உணவு நீருக்கு பெரும் தட்டுப்பாடு காரணமாக தாங்கள் பலத்த உளவியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பணியாளர்களும் தொண்டர்களும் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.
சுற்றியுள்ள பகுதிகளில் தொடரும் எறிகணை தாக்குதல்கள் குறித்த அச்சத்தையும் எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த உறவினர் ஒருவருடன் சூடான் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த அஸ்ரவ் நாங்கள் குண்டுசத்தங்களையும் துப்பாக்கி பிரயோக சத்தங்களையும் கேட்டோம் என தெரிவித்தார்.
மின்சாரம் தண்ணீர் இல்லாததால் மருத்துவமனை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது நோயாளிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் மூன்று நாட்களாக தங்கியுள்ள மருத்துவர் ஒருவர் நிலைமை மோசமடைவதை ஏற்றுக்கொண்டார்.
நன்றி வீரகேசரி