இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடி
5 சித்திரை 2023 புதன் 11:16 | பார்வைகள் : 9593
கடந்தவாரம், இலத்தின் அமெரிக்காவில் அதிவலது தோற்றம் பெற்ற வரலாற்றைப் பார்த்தோம். கொலம்பஸ்ஸின் வருகையுடன் இலத்தின் அமெரிக்காவின் முகம் மாறத் தொடங்கியது. பிரேஸிலும் இன்னும் சில சிறிய தீவுகளும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஸ்பெயினின் கொலனிகளாகின.
அங்கு குடியேறிய ஸ்பானியர்கள் புதிய அதிகாரம் மிக்க இனக்குழுவாக உருவெடுத்தார்கள். அவர்கள் தங்களை 16/17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்திய ஐபீரிய ஏகாதிபத்தியத்தின் வழித்தோன்றல்களாகக் கருதினார்கள். கிறிஸ்தவத்தையும், நிறவெறியையும் தமது ஆயுதமாக்கினர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐபீரிய ஏகாதிபத்திய மகிமையின் தொன்மங்கள் மிகப்பாரிய நெருக்கடியை எதிர்நோக்கின. 1898இல் ஸ்பெயின் அதன் எஞ்சியிருந்த கரீபியன் பகுதிகளையும் பிலிப்பீனியக் கொலனிகளையும் இழந்தது. இவ்விழப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதுவே ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்த உலகப் பேரரசின் கடைசித் துண்டுகளாகும்.
ஐபீரிய ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய எழுச்சியுடன் இடைவெட்டியது. இது தீபகற்ப ஸ்பானியர்களிடையே ஓர் ஆழமான நெருக்கடியை உருவாக்கியது. அவர்கள் தங்கள் பண்பாட்டுத் தேசியவாதத்தை அமெரிக்காவால் ஏற்பட்ட தோல்வியின் அவமானத்துடன் சமரசம் செய்யப் போராடினர்.
தெளிவாகச் சொல்வதானால், இந்த உடைவிலிருந்து இரண்டு அறிவுசார் நிலைகள் வெளிப்பட்டன. ஒன்று, இலத்தீன் அமெரிக்காவின் பின்கொலனித்துவ தாராளவாதச் சிந்தனைகளுக்கு வழிவகுத்தது. பின்கொலனித்துவ தாராளவாதிகள், ஸ்பெயின் தப்பிப்பிழைக்க வேண்டுமானால், முடியாட்சி, மதகுருமார்கள் மற்றும் பிரபுத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கி எறிந்து நவீனமயமாக வேண்டும் என்று வாதிட்டனர்.
மற்றொன்று, இலத்தீன் அமெரிக்காவின் பின்கொலனித்துவ பழைமைவாதச் சிந்தனைகளாக வெளிப்பட்டது. இப்பழைமைவாதிகள், ஸ்பெயின் அதன் முக்கிய இலட்சியங்களிலிருந்து விலகியதால் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், நம்பிக்கை, அதிகாரப் படிநிலை, பேரரசு, பாரம்பரியம் ஆகியவற்றில் கூடிய கவனம் செலுத்தி, அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இவ்விரு கருத்துகளுக்கும் இடையில் ஓர் ஒருமைப்பாடு ஏற்படவில்லை. மாறாக, இருதரப்பினரும் தமது கருத்துகளை மேலும் உறுதியாக்கியதோடு மற்றையதைக் பகைமையோடு நோக்கினர். இதனால், இரண்டு கருத்துகளுக்கும் இடையிலான இடைவெளி சில தசாப்தங்களுக்குப் பிறகு ஸ்பானிய உள்நாட்டுப் போராகப் பேரழிவு தரும் வடிவத்தை எடுத்தது.
1936இல் ஸ்பெயினை ஆளும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணியின் கூட்டணியானது, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் தன்னலக் குழுக்களையும் மத கட்டமைப்புகளை அகற்றுவதற்கான அதன் முயற்சிகளுக்காக வலதுசாரிகளின் கோபத்தையும் பெற்றது.
கத்தோலிக்க திருச்சபையை முடக்குவதற்கும் நிலப்பிரபுத்துவத்தை உடைப்பதற்கும், விவசாய சீர்திருத்தங்களை நிறுவுவதற்கும் மேற்கொண்ட நகர்வுகள் துருவமுனைப்பை ஏற்படுத்தியது. முற்போக்கான தன்மையை பெறமுயன்ற அரசுக்கு எதிராக, பிற்போக்குச் சக்திகள் ஓரணியில் திரண்டன. இதனால் மக்கள் ஆதரவு பெற்றிருந்த அரசு நெருக்கடிக்காளானது.
அதேவேளை, அரசால் மக்கள் விரோத வன்முறையைத் தடுக்க இயலாமல் போனது. முற்போக்கு நிலைப்பாடுகள் பழைமைவாதப் பிரிவுகளின் ஒன்றிணைவைச் சாத்தியமாக்கியது. இவை அனைத்தும் சேர்ந்து அரசாங்கத்தைத் தூக்கியெறியச் செய்தது.
இலத்தீன் அமெரிக்கர்கள் ஸ்பெயினின் மூன்று வருட இரத்தக்களரியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஏனெனில், அங்கு போராட்டத்துக்கு உரியதான பிரச்சினைகள், தங்கள் சொந்த சமூகங்களைப் பிளவுபடுத்தும் பிரச்சினைகளுக்கு இணையாக இருந்தன. குறிப்பாக, தீவிர சமத்துவமின்மை, தேவாலயத்துக்கும் அரசுக்குமான உறவு, அதிகரித்து வரும் தொழிலாளர் போர்க்குணம், பாலினஞ்சார் சிந்தனைகளில் மாற்றம் என்பன ஸ்பெயினில் இருப்பது போலவே இலத்தீன் அமெரிக்காவெங்கும் இருந்தது. ஸ்பானிய வலது இறுதியாக 1939இல் வெற்றி பெற்றது.
கிளர்ச்சிக்கான தேசியவாதப் படைகளின் தலைவரும், மேற்கத்திய கிறிஸ்தவத்தின் மீட்பராகத் திகழ்ந்தவரும் நாஜி ஆதரவு பெற்றவருமான ஜெனரல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோ, நவீன ஐரோப்பாவின் மிக நீண்ட கால சர்வாதிகாரத்தை நிறுவினார். ‘வெள்ளைப் பயங்கரம்’ என அறியப்பட்ட இவரது சர்வாதிகாரம் இரண்டு இலட்சம் மக்களைக் காவுகொண்டது. 1975இல் இவர் இறக்கும்வரையும் இது தொடர்ந்தது. இவரது ஆட்சி அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்றதாக இருந்தது.
ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் போது தேசியவாதிகளை எதிர்த்த பாஸ்க் நகரமாக குவேர்னிகா மீது 1937இல் மோசமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு, அந்நகர் தரைமட்டமாக்கப்பட்டது. இதைக் குறிக்கும் வகையிலேயே ‘பப்லோ பிக்காசோ’ புகழ்பெற்ற குவேர்னிகா ஓவியத்தை வரைந்தார். இன்றும் போருக்கெதிரான முக்கிய குறியீடாக இவ்வோவியம் அறியப்படுகிறது. இன்றும் இவ்வோவியத்தின் பிரதி ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினைப் போல உள்நாட்டுப் போர் ஒன்று ஏற்படாமல் இருக்க போர்த்துக்கல் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால், அன்டோனியோ டி ஒலிவேரா சலாசர் தலைமையில் அமைந்த கத்தோலிக்க, கம்யூனிச எதிர்ப்பு சர்வாதிகார ஆட்சி, பிராங்கோவை ஆதரித்ததோடு பிராங்கோவின் ஆட்சியின் பல நடைமுறைகளைப் பின்பற்றியது.
சலாசரால் தொடக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி 1974 வரை போத்துக்கலில் நிலைத்தது. சர்வாதிகாரி சலாசர் உலகின் மிகப்பழைய பல்கலைக்கழகங்களில் ஒன்றான கொயம்பரா பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலத்தீன் அமெரிக்க பழைமைவாதத்தின் பரிணாம வளர்ச்சியில் ஸ்பானிய உள்நாட்டுப் போர் முக்கியமானது. ஏனெனில், இது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் ஆபத்தான மற்றும் நீடித்த அரசியல் ஆயுதங்களில் ஒன்றாக இருந்தது. அதிகாரபூர்வ கிறிஸ்தவம் மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான பின்னல் ஆகிய இரண்டும் முக்கியமானதாய் கருதப்பட்டன. இவ்விரண்டினதும் இணைப்பு முக்கியமான அரசியல் இயங்கியலாக அடையாளம் காணப்பட்டது. இது கெடுபிடிப்போருக்கு வெகுகாலம் முன்பே, அமெரிக்காவின் சி.ஜ.ஏ அமைப்பு உருவாக்கப்பட்டிருக்காத காலப்பகுதியில் நடந்தது என்பதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும்.
ஃபிராங்கோவின் படைகள் சிலுவைப்போர் மற்றும் மீள்வெற்றிகாணல் போன்ற வரலாற்று ஒப்புமைகளை தாராளமாக பயன்படுத்தின. இருப்பினும், அவர்களின் புதுப்பிக்கப்பட்ட கதையாடலில், தேசத்தின் உயிர்வாழ்வுக்காகத் தூய்மைப்படுத்த வேண்டிய வெளிநாட்டு ‘படையெடுப்பாளர்கள்’ முஸ்லிம்கள் அல்ல; களையெடுக்கப்பட வேண்டியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று அறிவித்தார்கள். தேசியவாதிகள் கம்யூனிசத்தை இனமயமாக்கினர். ஹிஸ்பானிக்கின் சீரழிவுக்கு அச்சுறுத்தலாக பாலியல் சுதந்திரத்துடன் ‘சிவப்பு மரபணு’ என்று அழைக்கப்படுவதைக் குற்றம் சாட்டினர்.
வத்திக்கான், அதன் பங்குக்கு, இந்த விடயத்தில் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது. 1937 மார்ச்சில் வெளியிடப்பட்ட போப்பாண்டவரின் கலைக்களஞ்சியமான ‘டிவினி ரிடெம்ப்டோரிஸ்’, போர் மூளும் போது, கம்யூனிசத்தை சாத்தானிய தர்க்கத்திற்கு கீழ்ப்படிந்த ‘ஆன்மீக ஒழுங்கின் தீமை’ என்று விவரித்தது. சமூகத்தையும் அதன் அஸ்திவாரங்களையும் அசைக்கும் கடவுள்-எதிர்ப்பு பிரசாரத்தின் அழிவுகளை தங்கள் எல்லைக்குள் தடுக்க அனைத்து விடாமுயற்சியும் நாடுகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.
திருத்தந்தை 11ஆவது பயஸின் இந்தக் கருத்தின் எதிரொலியாக, ஸ்பானிய ஆயர்களின் குழு ஜூலை 1937 இல் ஒரு கடிதத்தை எழுதியது. இது இலத்தீன் அமெரிக்க மதகுருமார்களிடையே பரவலாக விநியோகிக்கப்பட்டது. இது ஸ்பெயினில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை அகற்றுவதற்கான கிளர்ச்சியாளர்களின் செயல்களை வரவேற்று அவர்கட்கு தமது ஆதரவை நல்கியது.
தேசத்தின் வாழ்க்கையைக் காலங்காலமாக உருவாக்கி வந்த மதக் கொள்கைகளையும் கிறிஸ்தவ நீதியையும் பாதுகாக்க, உள்நாட்டுப் போரை ஒரு நியாயமான போராக அறிவித்தது. அக்காலகட்டம் முதல் எதிரி ‘கம்யூனிசம்’ என்றால் அதற்கெதிரான கிளர்ச்சி வன்முறை நியாயமானது மட்டுமல்ல; அது புனிதமானது என்று பொருள்கொள்ளப்பட்டது. இதை இலத்தீன் அமெரிக்க வலதுசாரிகள் கவனித்தனர்.
அர்ஜென்டினா பாதிரியார் ஜூல்ஸ் மெய்ன்வில்லேயை உற்சாகப்படுத்தியபடி, ‘ஸ்பானிஷ் போருடன் துரோக உலகத்தின் மீதான கிறிஸ்தவ வெற்றி தொடங்குகிறது’ என்ற கருத்தைக் கட்டமைத்தனர். அனைத்து பகுதிகளின் பழைமைவாதிகளும் தங்கள் கருத்துகளில் மிகவும் கண்டிப்பானவர்களாக இல்லாவிட்டாலும் குரல்கொடுத்தோர், விடாமுயற்சியுடன் தங்கள் தேசிய அடையாளங்களை நம்பிக்கை, ஒழுக்கம், இனம், மொழி மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றின் பழைமைவாத ஸ்பானியக் கருத்துகளுடன் இணைக்க முயன்றனர். முக்கிய அரசியல் உரையாடலின் எல்லைகளை வலதுநோக்கி மாற்றினர்.
இது அதிவலதிற்கான ஆதரவுத்தளத்தை உருவாக்குவதற்குப் பயன்பட்டது. இலத்தீன் அமெரிக்காவில் ‘கம்யூனிச எதிரி’யைக் கருவறுப்பதற்கு அதிவலது முக்கிய கருவியானது.
அதிதீவிர வெறுப்புத் தேசியவாதம், கிறிஸ்தவ அடிப்படைவாதம், இவையிரண்டையும் உந்தித் தள்ளும் சர்வாதிகாரம் என்பன நல்ல கலவையாகின. இதனால் இலத்தின் அமெரிக்கா எங்கும் அதிவலது சர்வாதிகாரங்கள் அமெரிக்க ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்தன.
நன்றி தமிழ்Mirror