தீவிரமாக அதிகரிக்கப்பட வேண்டிய தரவு சரிபார்த்தல்
31 பங்குனி 2023 வெள்ளி 10:06 | பார்வைகள் : 8801
உலகின் இன்றைய சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தில் போலி செய்திகள் உருவாக்கப்பட்டு தவறான வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதுடன் தவறான தீர்மானங்களை எடுப்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
போலி தகவல்கள் மற்றும் செய்திகள் என்று பார்க்கும்போது அது பல வகைகளில் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. சில வேலைகளில் பிரதான ஊடகங்களில் கூட போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. முதலாவது போலி செய்திகளில் தவறாக மற்றும் தெரியாமல் பரப்பப்படுகின்ற செய்திகள் காணப்படுகின்றன. அவை உண்மையிலேயே எந்த விதமான நோக்கமும் இன்றி, உரிய சரிபாரத்தலை முன்னெடுக்காமல் பரப்பப்படுகின்ற தவறான செய்திகளாகும். அதாவது அறிக்கையிடலில் பின்பற்றப்படவேண்டிய முக்கிய விடயங்களை பின்பற்றாது செய்யப்படும் அறிக்கையிடலால்இவ்வாறான தவறான செய்திகள் தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால் போலி செய்திகளில் மற்றுமொரு வகை காணப்படுகிறது. அதனை ஆங்கிலத்தில் டிஸ்இன்போமேஷன் (Disinformation) என்று கூறுவார்கள். டிஸ்இன்போமேஷன் என்பது ஒருவர் தொடர்பான தவறான செய்தியை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக சமூக ஊடங்களில் பரப்பப்படுகின்ற செய்திகளை குறிக்கின்றது. அதாவது தவறான, போலியான, உண்மையற்ற செய்தியை, தகவலை உருவாக்கி அதனை சமூக ஊடகங்களிலும் சில நேரங்களில் பிரதான ஊடகங்களிலும் பரப்புவதை இந்த டிஸ்இன்போமேஷன் என்பது குறிப்பிடுகின்றது.
முக்கியமாக இது சமூக ஊடகங்களில் அதிகளவாக பரப்பப்படுகிறது. இவை இன்றைய உலகில் ஊடக கலாச்சாரத்துக்கும் ஊடகப் பண்புகளுக்கும் ஊடகவியல் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கு இதனை இதனை எதிர்கொள்வதற்கு பலர் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்தாலும் அவை போலி செய்திகள் திட்டமிடப்பட்டு மிகவும் அதிகளவில் பரப்பப்படுகின்றன. இவை தீவிரமான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கவலைக்குரிய விடயம் என்னவெனில் பலரது தீய நோக்கங்களுக்கும் எண்ணங்களுக்கும் இந்த டிஸ்இன்போமேஷன் உறுதுணையாக அமைகின்றது.
இந்த பின்னணியில் தவறான செய்திகள் மற்றும் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்ற டிஸ்இன்போமேஷன் என்பனவற்றை கட்டுப்படுத்துவதற்கும் அவற்றின் உண்மை தன்மையை கண்டுபிடிப்பதற்கும் தற்போது ஊடக துறையில் தரவு சரி பார்த்தல் (Fact Checking) எனப்படுகின்ற விடயம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
மிக முக்கியமாக இந்த தரவு சரிபார்த்தல் என்ற விடயத்தின் ஊடாகவே போலி செய்திகளை அடையாளம் காண்பதற்கும் அவை தொடர்பான உண்மை தன்மையை மக்களுக்கு வழங்குவதற்கும் முடியுமாக இருக்கின்றது. அதனை மிக தீவிரமாக, ஆழமாக முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள், சர்வதேச நிறுவனங்கள் கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் நோர்த் கரோலியா மாநிலத்தில் இந்த தரவு சரிபார்த்தல் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற மற்றும் பொலிடிபெக்ட் இணையதளத்தின் ஸ்தாபகரமாக இருக்கின்ற பேராசிரியர் பில் அடையர் என்பவர் இந்த விடயம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அதாவது ‘’தரவு சரி பார்த்தல் என்பது மக்கள் மத்தியில் மிக ஆழமாக செல்ல வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. காரணம் தவறான செய்திகள் மற்றும் போலி செய்துகள் மக்களை மிக வேகமாக சென்றடைகின்றன. ஆனால் அவற்றை பிழைநீக்கம் செய்து முன்னெடுக்கப்படுகின்ற திருத்த செயல்பாடு அந்தளவு தூரம் கவர்ச்சியாக மக்களிடம் செல்வதில்லை. இவை ஆழமாகவும் மக்களிடம் செல்ல வேண்டும். அதற்காக ஆழமான முறையில் செயற்பட வேண்டும் என்று பேராசிரியர் பில் கூறுகிறார்.
மாறவேண்டிய அறிக்கையிடல் முறை
முதலில் தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் ஊடக அறிக்கையிடல் செயல்பாட்டிலேயே பல குறைபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார் என்றால் அவரின் உரையில் உள்ள விடயங்களில் உள்ள தரவு சரி பார்த்தல் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அப்படியே அந்த செய்தியை பிரதான செய்தியாக பிரசுரிக்கின்ற ஒரு தன்மையை தெற்காசிய நாடுகளின் ஊடகங்கள் பெரும்பாலாக கொண்டிருக்கின்றன. தற்போது மேலைத்தேய நாடுகளில் அந்த நிலைமை மாறி வருகின்றது. எவர் ஒருவர் எந்த விடயம் பற்றி பேசினாலும் அவர் பேசிய விடயம் எந்த அளவு தூரம் உண்மையானது? என்பது குறித்த தரவு சரிபார்த்தல் தொடர்பாக ஆராய்ந்து அவை அறிக்கையிடப்படுகின்றன. அதில் ஒரு ஆய்வு காணப்படுகின்றது. அந்த நிலைமை தெற்காசிய நாடுகளிலும் உருவாக வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.
பொய்ன்டர் ஊடக கற்கை நிறுவனம்
எனவேதான் இங்கு தரவு சரி பார்த்தல் என்பது மிக முக்கியத்துவமாக இருக்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்த (Fact Checking) தரவு சரிபார்த்தல் என்பது பல நிறுவனங்களினால் மிக ஆழமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் பொய்ன்டர் என்ற ஒரு ஊடக கல்வி நிறுவனம் காணப்படுகிறது. அந்த நிறுவனம் உலக நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு இந்த தரவு சரி பார்த்தல் என்பது தொடர்பாக இலவசமாக கற்கை நெறிகளை வழங்குகிறது. பயிற்சி நெறிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
பல்வேறு வளவாளர்கள், நெறியாளர்களைக் கொண்டு இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் பொய்ன்டர் நிறுவனத்தின் கட்டமைப்பு பலருக்கும் நன்மை பயப்பதாக அமைந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் தரவு சரி பார்த்தல் செயன்முறைக்காக ஏழு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஊடகங்களில் டிஸ்இன்போமேஷன் எனப்படுகின்ற போலி தகவல் பரப்ப்பபட்டால் அதனை கண்டுபிடிப்பதற்கு இந்த ஏழு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதாவது பேச்சாளரைத் தொடர்பு கொள்ளல், ஏனைய தரவு சரிபார்த்தல் மூலங்களை பார்த்தல், உயர்ந்தமட்ட கூகள் ஆய்வு, ஆழமான இணைய ஆய்வு, பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட நிபுணர்களை நாடுதல், புத்தகங்களை ஆராய்தல், வேறு மூலங்களை பார்த்தல் ஆகிய இந்த ஏழு கருவிகளே தரவு சரிபார்த்தல் முறைக்காக பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் பொலிட்டிபெக்ட் என்று ஒரு நிறுவனம் இநடத தகவல் தரவு சரிபார்த்தல் செயற்பாட்டில் சிறப்பாக செயற்பட்டுவருகின்றது. அந்த நிறுவனமும் இந்த பொய்ன்ட்ர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. பொலிட்டிபெக்ட் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக பல நெருக்கடிகளை சந்தித்து தற்போது மிக சிறந்த இடத்துக்கு வந்திருக்கின்றது. அதாவது தரவு சரி பார்த்தல் விடயத்தில் சுயமாக அந்த நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த பொலிட்டிபெக்ட் அமைப்பு பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகின்றது. அதாவது பேஸ்புக் வலை சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படும் பட்சத்தில் அது தொடர்பான ஒரு தரவு சரிபார்த்தல் செயற்பாட்டை பொலிட்டிபெக்ட் நிறுவனம் செய்கின்றது. அவ்வாறு தரவு சரிபார்த்தல் முன்னெடுக்கப்பட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன் அந்த செய்தி மக்களை சென்றடையாத வகையில் பேஸ்புக் நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக பேஸ்புக் நிறுவனம் பொலிட்டிபெக்ட் அமைப்புக்கு கொடுப்பனவை செய்கிறது. மேலும் தரவு சரி பார்த்தல் தொடர்பில் பொலிட்டிபெக்ட் நிறுவனம் முன்னெடுக்கின்ற சிறந்த சேவைக்காக அந்த அமைப்புக்கு சர்வதேச விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொலிட்டிபெக்ட் நிறுவனம் அரசியல்வாதிகள் கூறுகின்ற விடயங்கள் தொடர்பாக தரவு சரிபார்த்தல் செய்வதில்லை. மாறாக அரசியல்வாதிகள் தவிர்ந்த நிறுவனங்கள், தனி நபர்கள் வெளியிடுகின்ற தகவல்கள் தொடர்பாக மட்டுமே பொலிட்டிபெக்ட் தரவு சரிபார்த்தலை முன்னெடுக்கின்றது.
அடுத்து என்ன?
தற்போது சகல நாடுகளும் இந்த தரவு சரி பார்த்தல் தொடர்பாக கவனத்தில் செலுத்த வேண்டிய அவசியம் காணப்படுகிறது. சகல ஊடக நிறுவனங்களும் தரவு சரி பார்த்தல் அலகுகளை உருவாக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற இந்த யுகத்தில் தவறான செய்திகள் போலி செய்திகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. இதனால் கடுமையான நெருக்கடிகள், பிரச்சினைகள் அமைதியின்மை, வன்முறை போன்றன நிகழ்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் இந்த டிஸ்இன்போமேஷன் எனப்படுகின்ற போலியாக உருவாக்கப்படுகின்ற செய்திகள் பரப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவை தொடர்பான தரவு சரி பார்த்தல் செய்யப்பட வேண்டியதும் அவசியமாகும். பெக்ட்செக்கிங் என்கின்ற தரவு சரிபார்த்தலே இதனை தடுப்பதற்கு காணப்படுகின்ற ஒரே வழியாகும். அதன் ஊடாகவே இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும்
தரவு சரி பார்த்தலின் சவால்கள்
எனினும் இதனை மேற்கொள்வதில் பல சவால்களும் நெருக்கடிகளும் காணப்படுகின்றன. காரணம் இந்த தரவு சரி பார்த்தலை மேற்கொள்கின்ற நிறுவனங்களுக்கு நிதியை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி காணப்படுகின்றது. அவற்றில் பணிபுரிகின்றவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் பெளதீக செலவுகள் காணப்படுகின்றன. எனவே அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் தரவு சரிபார்த்தல் செய்யும் நிறுவனங்களை சந்தேக கண்கொண்டு பார்க்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் தரவு சரிபார்த்தல் நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளன.
எப்படி இருப்பினும் ஊடக தர்மத்தை பொறுத்தவரையில் மக்களுக்கு சரியான உண்மையான செய்தியை வழங்க வேண்டும். தவறான மற்றும் போலியான செய்திகளை வழங்கக்கூடாது. அவை பரப்பப்படுவதற்கு துணை போகக்கூடாது. அவை திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் துணை போக கூடாது. சமூக ஊடக ஆதிக்கத்துக்கு மத்தியில் மற்றும் தவறான போலியான செய்திகளுக்கு மத்தியில் வாழுகின்ற தற்போதைய சூழலில் இந்த பேக்ட் செக்கிங் எனப்படுகின்ற தரவு சரி பார்த்தல் மிக முக்கியமானதாக உள்ளது.
அதனால் தற்போது ஊடகவியலில் தவிர்க்க முடியாது காணப்படுகின்ற மற்றும் ஊடக நிறுவனங்கள் கட்டாயம் கவனம் செதே்தவேண்டிய தரவு சரி பார்த்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் சமூக ஊடகவியலாளர்களும் சிவில் நிறுவனங்களும் மிக ஆழமாக மற்றும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மறுக்க முடியாது.
நன்றி வீரகேசரி