Paristamil Navigation Paristamil advert login

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

23 பங்குனி 2023 வியாழன் 09:23 | பார்வைகள் : 8242


இலங்கை கடந்த காலங்களில் அதன் சரித்திரத்தில் என்றுமில்லாத நெருக்கடியைச் சந்தித்து இருந்தது. ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முட்டாள்தனமான  தீர்மானங்கள் மற்றும் கொள்கைகள் காரணமாக நாடு வங்குரோத்து அடைந்தது.  ஒட்டுமொத்த மக்களும் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதேவேளை, பொருளாதார நெருக்கடி உக்கிரமடைய மக்கள் துன்பப்பட்ட அவலப்பட்ட  நாட்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

பகல் இரவு என்று பாராமல் ஒரு வாரக்காலத்துக்கு அதிகமான நாட்கள்  எரிபொருள், எரிவாயு நீண்ட வரிசைகள், அதிகரித்த பணவீக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பாரியளவு விலையேற்றம், மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு, தனியார் மருந்தகங்களில் பல ஆயிரம் கொடுத்து  கொள்வனவு செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை, அதிகரித்த மின் கட்டணம், பல நாட்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டமை,  தொழிற்சங்க போராட்டங்கள், பல மணித்தியால மின்வெட்டு, தொழில் துறை முடக்கம். பலர் தொழில் இழந்தமை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வீதிகளுக்கு இறங்கினார்கள். வீதிகள் எங்கும் மக்கள் வெள்ளம் திரண்டது. போராட்டம் வெடித்தது. ஆட்சியாளர்கள் பதவிகளை துறந்தார்கள். நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோடினார். இறுதியில் மக்கள் புரட்சி தலைதூக்கியது. ஜனநாயகம் வென்றது.

பல்வேறு குழப்பங்கள், போராட்டங்கள். எதிர்ப்புகள் என்பவற்றுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.  அரசியலமைப்பின் படி ஜனாதிபதியாக நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பினை தனியாளாக ஏற்றார். அதனை  தொடர்ந்து கடந்த காலங்களில் நிலவிய எரிபொருள், சமையல் எரிவாயு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருளுக்கான  தட்டுப்பாடு  அனைத்தையும் ஓரளவுக்கு நிவர்த்தி செய்து வரிசை யுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் துன்பப்படுவதை இல்லாமல் செய்தார். 

இதேவேளை, பல தரப்பு பேச்சுவார்த்தைகள், பல்வேறு முயற்சிகள்,பல்வேறு  இழுபறி நிலை, எனதொடர்ச்சியான போராட்டங்களை அடுத்து  இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி கைகளுக்கு எட்டியிருக்கிறது. வங்குரோத்து அடைந்து பொருளாதார நெருக்கடியால் முடிச்சு போடப்பட்டிருந்த நாடு இன்று ஓரளவு கட்டயெழுப்பப்பட்டிருக்கிறது. அதாவது மூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனையும் கோட்டை விட்டோம் எனில் நாட்டில் கடைசியில் ஒன்றும் மிஞ்சபோவதில்லை.

அரசியலில் ஐம்பது அறுபது வருடங்கள் ஒட்டிக்கொண்டு ஐ.எம்.எப். உட்பட உலக  நிதி நிறுவனங்களிடமிருந்து பல பில்லியன் டொலர்கள் கடன் எடுத்ததுமில்லாமல் எடுத்த கடனையும் முறையாய் நெறிப்படுத்தாமல் தான்றித்தோன்றித்தனமாய் செலவழித்து நாட்டை குட்டிச் சுவராக்கிய  அரசியல்வாதிகளிடமிருந்து  நாட்டை எதிர்காலத்திலாவது பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும் .

எந்தவொரு நிறுவனமும் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர் நட்டத்தில் ஓடினால் என்ன நடக்கும் இழுத்து மூடிவிட்டு  மறு வேலை  பார்ப்பார்கள். ஆனால் இங்கே ஒரு தேசமே கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கோலத்தில் ஓடுகிறது. ஆட்சி  செய்தவர்களில் இலட்சணத்தால் தான் மக்கள் நகைக் கடைகளிலும்,  வங்கி வாசலிலும் காவல் நிற்கிறார்கள்.

சம்பளக் கவரின் கணம் ஒரு அங்குலமும் அதிகாரிக்காத நாட்டின் பணவீக்கம், கடந்த ஜூனில் ஸிம்பாப்வேயுடன்  போட்டி போட்டு இரண்டாவது இடத்தில் இருந்தது. அன்று மூன்று மடங்கு அதிகரித்த பொருட்கள் சேவைகளின் விலைகள் இன்னும் குறையவில்லை. இந்த தேசத்தில் மக்கள் இன்னமும் வாழ்வதே சாதனை. ஐ.எம்.எப்.  இடமிருந்து கடன் கிடைத்ததை இவ்வளவு எதிர்மறையாகப் பார்க்கவும் தேவையில்லை. கொண்டாடவும் தேவையில்லை. 

நமது வரலாறு பற்றி எமக்கு தெரியும் . இந்த நிலைமை மாற வேண்டும். மக்களின் வாழ்க்கை தரம் மாற்றப்பட வேண்டும். பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியுதவி முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமும் கூட. எவ்வாறு  இருப்பினும் கடன் கிடைத்த திருப்தி மலர்ந்ததும் கருகிப் போய் விடாதிருப்பதை உறுதி செய்வது அவசியம். 

 

 நன்றி வீரகேசரி

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்