Paristamil Navigation Paristamil advert login

வியாபார சவால்களும் தீர்வுகளும்

வியாபார சவால்களும் தீர்வுகளும்

13 பங்குனி 2023 திங்கள் 11:42 | பார்வைகள் : 8178


இலங்கை மற்றும் உலகத்தில் உள்ள உறவுகள் “இனி இலங்கையில் என்ன நடக்கப் போகின்றது? இலங்கையில் இனி வாழ முடியுமா? இத்துடன் இலங்கை முடிந்து விட்டதா? பழைய  நிலைமைக்கு திரும்பி வருமா?,” போன்ற பல கசப்பான கேள்விகளை கேட்டு வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

அவர்கள் இவ்வாறு சந்தேகமாக கேட்பதிலும் பல நியாயங்கள் காணப்படுகின்றன. இவற்றினை சாதாரண ஒரு விடயமாக அலட்சியப்படுத்தி சென்றுவிட முடியாத நிலையில் தற்போது உள்ளோம். 

இலங்கையில் வாழ்கின்ற மற்றும் இலங்கையில் ஏதோ வகையில் தொடர்பு வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் என்ன வகையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, நிகழப்போகின்றன மற்றும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயல்படுவோம் என்பதை அறிய ஆவலாக இருக்கின்றனர். 

அந்த வகையில் இலங்கையில் வியாபாரம் செய்கின்றவர்கள் அதாவது தொழில்தருநர் என்ன வகையான சவால்களை எதிர்நோக்க உள்ளார்கள் என்பது பற்றியும் அவ்வாறான சவால்களை எவ்வாறு கையாள முடியும் என்பது பற்றியும் பார்ப்போம்.

மூலதனம்

அமெரிக்க டொலருக்கு மற்றும் ஏனைய நாட்டினுடைய நாணயத்திற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி மற்றும் தொடர் தேர்ச்சியான இறுக்கமான இறக்குமதி கட்டுப்பாடு போன்ற பலகாரணங்களால் வியாபாரம் செய்வதற்கு தேவையான பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்காக முன்பு தேவைப்பட்ட மூலதனத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக தற்போது தேவைப்படுகின்றது. 

அதாவது தற்பொழுது ஒரு வியாபாரத்தை புதிதாக செய்வதற்கு அல்லது செய்து வருகின்ற வியாபாரத்தினை கொண்டு நடாத்த தேவையான மூலதனம் சுமார் 5 மடங்குகளுக்கு மேலதிகமாக அதிகரித்துள்ளது. ஆகவே வியாபாரத்திற்கு மூலதனம் பெற்றுக்கொள்வது பாரிய சவாலாக உருவாகியுள்ளது. 

உதாரணமாக நகை வியாபாரம் செய்பவர்களை எடுத்துக் கொண்டால் கடந்த 15 வருடத்திற்கு முன்பாக அண்ணளவாக 27,000 ரூபாவாக இருந்த ஒரு சவரின் தங்கத்தின் விலையானது தற்பொழுது 200,000 ரூபாவரையும் உயர்ந்துள்ளது.  ஆகவே சிறு மற்றும் நடுத்தர தங்க வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தமக்குத் தேவையான தங்கத்தின் இருப்பை தக்கவைத்து வியாபாரம் செய்வதற்கு மிகவும் சிரமப்படுவதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இடப்பற்றாக்குறை

“கொரோனா வைரஸ்” போன்ற கொடிய நோயின் காரணமாக நிறுவனங்கள் தொடர்தேர்ச்சியாக பல மாதங்களாக பூட்டி வைத்தமையால் பலர் வாடகையை செலுத்த முடியாமல் வியாபாரத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இடைநிறுத்தினர். 

தற்பொழுது நிலமை ஓரளவு சுமூகமாக இருந்தவண்ணம் இருந்தாலும், வியாபாரம் செய்வதற்கு தேவையான இடத்தினை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அவ்வாறு கிடைக்கின்ற இடங்களும் வியாபாரம் செய்வதற்கு உகந்த நிலையில் இல்லாமையும் மற்றும் அதியுச்ச வாடகை காரணமாக தகுந்த இடத்தினை பெற்றுக்கொள்ள முடியாத தன்மை நிலவுகின்றது. 

பொருள் தட்டுப்பாடு

உலகப் பொருளாதார மந்தநிலைமை, இறக்குமதி கட்டுப்பாடு (உதாரணமாக விவசாய உரம்), உள்ளூர் உற்பத்தி பாதிப்பு, உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காமை போன்ற பல காரணங்களினால், வியாபாரம் செய்வதற்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை உள்ளது. 

பொருட்களுக்கான  சிறந்த  கேள்வி இருப்பினும் பற்றாக்குறை காரணமாக இந்த அருமையான சந்தர்ப்பத்தினை வியாபாரிகள் பயன்படுத்தமுடியாமல் இருப்பது துர்பாக்கியமே.

வேலை ஆட்கள் பற்றாக்குறை

கொரோனா வைரஸ்” போன்ற கொடிய நோயின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு சுகாதார கெடுபிடிகள், அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவு, பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்ற நிலைமை மற்றும் கல்வி நடவடிக்கைகளில் பாரிய காலதாமதம் போன்ற காரணங்களினால் வியாபாரத்திற்குத் தேவையான வேலை ஆட்களை பெற்றுக்கொள்ள முடியாத தன்மை தற்போது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. 

அதுமட்டுமன்றி இப்பொழுது நகர்ப்புறத்திலிருந்து மக்கள் மீண்டும் கிராமப்புறத்தை நோக்கி இடம்பெயர்வதனை காணக்கூடியதாக இருக்கின்றது.  இதன் காரணமாக நகர்ப்புறத்தில் வியாபாரம் செய்கின்ற பல நிறுவனங்கள்  இந்த நிலைமையை சந்தித்த வண்ணம் உள்ளார்கள். அவ்வாறு வேலை ஆட்களை பெற்றாலும் அவர்களுக்குத் தகுந்த சம்பளத்தினை வழங்க முடியாது திணறுவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.  

கடனுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

வியாபாரம் செய்பவர்கள் போதிய நிதி இல்லாத சந்தர்ப்பத்தில் அதிகரித்து வரும் மூலதன செலவினை ஈடு செய்வதற்காக வங்கி மற்றும் பிற நிதிநிறுவனங்களிடம் கடனுக்கு பணத்தினை பெற்று வியாபாரத்தை செய்வது சாதாரண விடயம்.  ஆனால் கடந்த காலங்களில் எதிர்பாராத விதமாக வட்டி வீதம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 

இதன் காரணமாக பெற்ற கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத தன்மையும், அவ்வாறு சமாளித்து வட்டியை செலுத்தினாலும் பெற்றகடனை செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது.  மற்றும் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக  “வாடகை கொள்வனவு வாயிலாக பெற்றுக்கொண்ட வாகனங்கள் மற்றும் வியாபாரம் உபகரணங்களுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாத பாரிய நெருக்குதல் ஏற்பட்டது.

விற்பனை விலையை நிர்ணயிக்க முடியாத நிலை

நாளுக்கு நாள் இலங்கையின் ரூபாவின் பெறுமதியில் ஏற்படுகின்ற மாற்றம், மூலப்பொருளுக்கான தட்டுப்பாடு, நிரம்பல் குறைக்கப்பட்ட நிலையில் கேள்வியானது அதிகரித்தமை மற்றும் வியாபார போட்டி போன்றவற்றின் காரணமாக பண்டங்களின் அல்லது சேவைகளின் விற்பனை விலையினை சரியாக நிர்ணயிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறந்த இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

அரசியல்  ஸ்திரமற்ற தன்மை

முன்னொருபோதும் இல்லாதளவுக்கு அரசியல் ஸ்திரமற்ற தன்மை தற்போது இலங்கையில் காணப்படுகின்றது.  மிகக் குறுகிய காலத்தில் பல ஜனாதிபதிகள், பிரதமர்கள், நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர்கள் போன்றோர் மாற்றப்பட்டு வந்தமையினை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலைமை அரசியல் ஸ்திரமற்ற தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.  இதன் காரணமாக சீரான வியாபாரதிற்கேற்ற சந்தை நிலவரம் தற்பொழுது இல்லாமல் இருப்பது ஒரு துர்பாக்கிய நிலையாகும்

அரசின் ஸ்திரமற்ற கொள்கை

இலங்கையில் தேசியக் கொள்கை இல்லாத காரணத்தினால் காலத்திற்கு காலம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்கின்ற அரசாங்கம் தமக்கு ஏற்ற விதத்தில் பொருளாதார கொள்கைகளை மாற்றியவண்ணம் இருக்கின்றமையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இதன் காரணமாக ஸ்திரமற்ற தன்மை இலங்கையில் காணப்படுகின்றது.  உதாரணமாக அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள், இறக்குமதி சார்ந்த கட்டுப்பாடுகள், நாணய கட்டுப்பாடு மற்றும் பணம் அச்சிடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.  இதன் காரணமாக வியாபாரம் செய்யபவர்கள் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி பின்பற்றினாலும், அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு காரணமாக பல பின்னடைவுகளை சந்தித்து வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

சுற்றுலாத்துறை பாதிப்பு

நாட்டு மக்களின் 90சதவீதமான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தேவைகள் இறக்குமதி வாயிலாகவே நிறைவு செய்யப்படுகின்றது. பாரிய உற்பத்தி செயற்பாடுகளினை மேற்கொள்ள முடியாத தன்மை காணப்படுகின்றது. 

கடந்த பல தசாப்தங்களாக இலங்கை வருமானம் சுற்றுலாத்துறையினை பெருமளவு சார்ந்து இருக்கின்றது. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டு காலமாக சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் சுற்றுலாத்துறை வியாபாரத்தில் ஈடுபவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் நெருக்குதல்களையும் நட்டத்தினையும் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

இதன் காரணமாக வருமானத்தில் பெரும் வீழ்ச்சி, குறிப்பாக அந்நிய செலாவணி வருமானத்தில் பெரும் வீழ்ச்சி மற்றும் வேலையில்லா பிரச்சினை போன்றனவற்றினை  எதிர்நோக்குகின்றனர். 

கடன் கிடைப்பதில் தாமதமும் பொருளாதார நெருக்கடியும்

தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதாயின் சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு பத்து வருட சலுகைக் காலமொன்றை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் உடனடியாக அது சாத்தியம் இல்லை என்பதன் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை குறித்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.  எனினும் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப் பெறாதவிடத்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமை மேலும் சிக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

உலகப் பொருளாதார மந்த நிலைமை

சர்வதேச பாதக  நிகழ்வுகளும் இலங்கையை விட்டு வைக்கவில்லை.  உதாரணமாக “ரஷ்யா-உக்ரேன் யுத்தம்”, “சீனா-அமெரிக்க விரிசல்கள்” போன்றவை இவற்றில் சில. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய அளவில் பல சிக்கல்களை புதிது புதிதாக சந்தித்த வண்ணம் இருக்கின்றது. 

மசகு எண்ணெயின் விலையில் ஏற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை பல மடங்கு அதிகரித்து செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  அதேநேரம் இவற்றினை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலரின் இலங்கைக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து செல்வதனால்  இலங்கை அரசாங்கத்தினால் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.  இதன் காரணமாக உள்ளாட்டு உற்பத்தி, சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், ஏனைய வியாபார நடவடிக்கைகள் பாரிய சவால்களை முகம் கொடுத்தவண்ணம் இருக்கின்றது. 

இலங்கை மற்றும் ஏனைய நாடுகளின் காலநிலை மாற்றம் 

புவி வெப்பமடைதல் தொடக்கம் உலக மற்றும் இலங்கையின் காலநிலைமை பாரியளவு மாற்றமடைந்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. தொடர்தேர்ச்சியான வரட்சி, மண்சரிவுகள், பெருவெள்ளப்பெருக்கு, சுனாமி எச்சரிக்கை, நிலநடக்க அபாயங்கள் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வருவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதன் வாயிலாக பலர் தமது அன்றாட தொழில்த் துறையை கொண்டு செல்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பிரச்சினை இல்லாத வாழ்க்கையே இல்லை, அதே நேரம் கடின உழைப்பின்றி வெற்றி இலக்கினை அடையவும் முடியாது. ஆகவே எவ்வாறான சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் வந்தாலும் அதை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிகொள்வது மிகவும் முக்கியம். அந்த வகையில் சிறந்த செயற்றிட்டங்கள் வாயிலாக எட்ட வேண்டிய இலக்கினை இலகுவாக அடையமுடியும். 

அவற்றில் சில:

இலக்கினை தெளிவாக தீர்மானித்தல். 

தேவைக்கு ஏற்ப இலக்கினை மாற்றியமைத்தல்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பாதீட்டினை தயாரித்து செயல்படுதல்.

முறையான நிதி நிலைமைக் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று தயாரித்து செயல்படுத்தல். 

முடியுமானவரையில் கடனை மீள செலுத்துதல்.

வியாபாரத்திற்கு தேவையான மூலதனத்தினை வியாபாரத்தின் மூலமாகவே ஈட்டக்கூடிய திட்டங்களை செயல்படுத்துதல்.

மேலதிகமாக மூலதன தேவை ஏற்படும் போது சொந்த பணத்தை பயன்படுத்துதல், வட்டியில்லா கடன் போன்றவற்றின் வாயிலாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

காலத்திற்கு காலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சட்டங்களை முறைப்படி கடைப்பிடித்து தண்டப்பணம் மற்றும் தேவையற்ற சட்ட நடவடிக்கை போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். 

மீள்சுழற்சி முறையினை சிறந்த முறையில் பின்பற்றுதல். 

வினைத்திறன்  செயலாற்றுகையை அறிமுகப்படுத்துதல்.

நவீன வியாபார யுக்தி முறையினை அறிமுகப்படுத்தி செயல்படுத்துதல். முடியுமானவரையில் இறக்குமதி பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு மாற்று மூலப் பொருட்களை பயன்படுத்துதல். 

வேலை செய்யும் தளங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நேர்த்தியான மனோபாவத்தினை உருவாக்குதல். (Positive Attitude).

ஒரே தொழிலில் மட்டும் தங்கியிருக்காது ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரத்தில் ஈடுபடுதல். (Portfolio of Business).

வெளிநாட்டு அந்நிய செலாவணி பெறக்கூடிய வியாபாரத் துறையில் ஈடுபடுதல். உதாரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வியாபாரம், நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதி வியாபாரம். 

வரி விலக்களிப்பு செய்யப்பட்ட துறையில் வியாபாரத்தினை விரிவாக்குதல். உதாரணமாக மென்பொருள் ஏற்றுமதி 

“சிறந்த நடப்பு மூலதனம்” முறையினை கடைப்பிடித்தல்.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்