Paristamil Navigation Paristamil advert login

உலகம் போற்றிடும் பெண்மை

உலகம் போற்றிடும் பெண்மை

8 பங்குனி 2023 புதன் 09:48 | பார்வைகள் : 6784


“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது அதனினும் மங்கையராய் பிறத்தல் மிக மிக அரிது” எனவே பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும். பெண் என்பவள் யார்? இவ் உலகம் தோன்றியது முதல் குழந்தை, சகோதரி, தோழி, காதலி, உயிரை உருவாக்க கூடிய விசேட திறனை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் தாய், பல கதைகளையும் கருத்துக்களையும் கூறி வழிநடத்தும் பாட்டி என வளம் வருபவளே பெண். பாரதியின் புரட்சியில் புதுமை பெண்ணில் தொடங்கி இன்று வரை கவிஞர்கள், பாடலாசிரியர்களின் கவி வரிகளுக்கு அழகு சேர்ப்பதும் பெண்னே  என்பதில் கர்வம் கொள்ளலாம். 

“ அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்ற நிலை மாறி, நாடு விட்டு நாடு வந்து நயம்பட தூது உரைத்த ஒளவையாய், துணையின்றி வாதமிட்டு வரலாறு போற்றும் படி வாழும் கண்ணகியாய், விண்வெளி சென்று தன் இன்னுயிர் நீத்த சாவ்லாவாய், அன்பில் அன்னை தெரசாவாய், ஆட்சியில் இந்திராவாய், வீரத்தில் ஜான்சியாய், வெற்றியில் அனிதாவாய், என அனைத்து துறைகளிலும் சாதனைப் படைத்து உலகமே போற்றி புகழும் மங்கையர் கூட்டமாய் மாறிவிட்டனர்.

தற்காலத்தில் பாடசாலை, பல்கலைகழகம், தொழில் நிலையங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் தன் திறமையை காட்டி வருகின்றனர். இவ்வாறு பெண்கள் கல்வி கற்பதின் அவசியம் என்ன என்பதை சற்று சிந்தித்து பார்த்தால் ஆண் ஒருவர் கல்வி கற்பது போல பெண் ஒருவர் கல்வி கற்றால் அக் குடும்பம் முழுவதும் கல்வி அறிவும் பெறும். எப்படி என்றால் தாயின் மடியிலேயே குழந்தை முதல் முதலாக கல்வி கற்க ஆரம்பிக்கின்றது. 

எனவே அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெறும் போது குடும்பம் முழுவதும் கல்வி அறிவு பெறுவது நடைமுறை கருத்தாக உள்ளது. இவ்வாறு கல்வி அறிவு, விளையாட்டு துறை, அரசியல், நவீனத்துறை என்பவற்றில் அதிகளவு வளர்ச்சி அடைந்தே இருக்கின்றனர். 

இதனை நிருத்தவோ, தடுக்கவோ முடியாது. இவ்வாறு கல்வி அறிவில் மாத்திரமன்றி தொழில் புரியும் பல பெண்களும் ஓர் புதுமைப்பெண்கள் தான் தொழிற்சாலை, வயல் அல்லது பெருந்தோட்டம் மற்றும் நாட்கூலி வேலையில் ஈடுப்படும் பெண்கள் தொழிலை மட்டும் பார்க்காமல் தன் குடும்பத்தின் அனைத்து வேலைகளையும் செய்து அனைவரையும் கவனிக்கின்றனர். இச் செயலின் அர்ப்பணிப்பை நாம் கருத்தில் கொள்வது கணிசமாகவே இருக்கின்றது.

இவ் மங்கையர் கூட்டத்தினை உலகில் அனைவரும் கொண்டாடவே மார்ச் 08ஆம் திகதி வருடம் தோறும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளீர் தினமாகும். 

அதாவது 1908ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதி வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த வருடம் தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

பெண்களை போற்றும் தினங்களும் உரிமைகளும் துறை சார் வளர்ச்சியும் அதிகமாக  இருந்தாலும்  பெண்களுக்கு சமூக, பொருளாதார, சுகாதாரப் பிரச்சினைகள் அதிகளவில் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. இதில் சமூகப் பிரச்சினைகளாக பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள், துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. பெண்களை கடத்துதல், பாலியல் துஸ்பிரயோகங்கள், பெண்களின் புகைப்படங்கள், காணொளிக்களை வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்தல், அடித்து துன்புறுத்தல், சிறுவயதிலே வேலைக்கு அமர்த்துதல், இது மட்டும் அல்லாது பகலிலோ அல்லது இரவிலோ தனியாகவோ கூட்டமாகவோ செல்லும் பெண்கள் ஆண்களின் தேவையற்ற சீண்டலுக்கு முகங்கெடுக்க நேரிடும் நிலையில் பெண்களுடைய போக்குவரத்து நடவடிக்கைகளும் பெரிதும் நெருடலுக்குள்ளாகுமாறே காணப்படுவதுடன் வாய்வழி அல்லது உடலியல் துன்புறுத்தல்களையும் எதிர்க்கொள்கின்றனர். 

அதுமட்டுமா? சமூக வலைத்தளங்களில் தன் திறமையை காட்டும் தளமாக பயன்படுத்தும் பெண்களை தவறாகவும், தகாத வார்த்தைகளால் Comments, Trolls Videos, Memes களைப் போட்டு அவர்களின் திறமையை முடக்கி விடுகின்றனர். ஏவ்வளவுத் தான் அறிவியல், தொழினுட்பம் வளர்ந்து காணப்பட்டாலும் பெண்கள் குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே செய்ய வேண்டும் ஏனையவற்றை செய்ய கூடாது என்ற கருத்தும் மன நிலையும் சற்றும் மாறவில்லை. பெண்ணானவள் இந்தச் சமூக வரம்புகளைத் தாண்டிப் பயணிக்க முயன்றால் பயணம் பாதி வழியிலேயே முடித்து வைக்கப்படும். இவ்வாறே அழுகிப் போன சிந்தனையின் குறியீடுகளே இச் செயல்கள்.

இதுப் போல பெண்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை பார்த்தால் தான் செய்யும் தொழிலுக்கான போதிய ஊதியம் சில இடங்களில் சரியாக கிடைப்பது இல்லை. இதனால் இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது. தற்கால சூழ்நிலையில் பொருட்களின் விலை ஏற்றமும் ஒரு பிரச்சினையாக உள்ளது. 

திருமணம் ஆகிய பெண்ணின் கணவன் மதுபானம் குடிக்கும் போது குடும்பத்தின் பொருளாதார பிரச்சினை மேலும் அதிகரிக்கின்றது. உழைப்பதன் ஒரு பாதியினை மதுபானத்திற்கு தினமும் ஆண்கள் செலவிடுவதால் போசாக்கான உணவு, பிள்ளைகளின் ஆரோக்கியம், கல்வி என்பன பாதிக்கப்படுவதனால் பெண்களுக்கு அதிக சுமை நேரிடுகின்றது. கடனில் வாழ்க்கை வாழக் கூடிய சூழ்நிலையும் ஏற்படுகின்றது.

பெண்களுக்கு அதிகளவான சுகாதார பிரச்சினைகள் தற்காலத்தில் ஏற்படுகின்றன. வறுமை காரணமாக பிறக்கின்ற பிள்ளைகள் சரியான வளர்ச்சி இன்றி பிறப்பதுடன் பெண் பிள்ளைகளுக்கு ஏற்ற போசாக்கின்மையால் போசனை குறைப்பாடு மந்த புத்தி என்பன ஏற்படுவதுடன் தொற்றும், தொற்றா நோய்களுக்கு ஆளாகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் வேளையில் மதுசாரம் குடிக்கும் கணவனால் பெண்ணிற்கு எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி மதுசாரம் அருந்துவதால் வருடத்திற்கு 3 மில்லியன் பேர் இறக்கின்றதுடன் மொத்த இறப்பு வீதத்தில் 5.3மூமாக கணிப்பிடப்பட்டுள்ளது.

 20-39 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் இறப்பதனால் இளம் வயதிலே பெண்கள் கணவனை இழக்க நேரிடுகின்றது. மதுசார பாவனையினால் 200ற்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகின்றது. அதில் கல்லீரல் பிரச்சினை, புற்று நோய், காச நோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும் என்று இவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. வீதி விபத்துக்கள், வன்முறைகள், தற்கொலைகள் என்வனவும் அதிகம் ஏற்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் பெண்களையும் குடும்பத்தினையுமே பாதிக்க செய்கின்றன.   

இளம் பெண்களிடையே இருப்பது அவளை வர்ணிக்கவும் ஆசை வார்த்தைகள் பேசி அல்லி அணைக்கும் கரங்களும், எதிர்பார்க்காத பரிசுகளை தரும் ஓர் அழகான காதலன் அமைய வேண்டும் என்று தான் அவன் மதுசாரம்(பியர்) குடித்து வயிறு தொந்தி விழுந்து புளி மூட்டையினை சுமப்பவன் போல் ஆகி முகம் பலரிடம் அடி வாங்கியது போல் வீங்கி, தன் வயதை விட முதிர்ந்த தோற்றத்தினை உடையவனாக மாறும் போது இளம்பெண்ணின் மனம் இறந்த பிணம் போல ஆகி இவனை ஏன் காதலித்தோம் என்ற கேள்விக்கு ஆளாகின்றாள்.

ஆண்கள் எப்போதும் பெண்கள் அழகாக இருந்தால் இரசிக்கவும் விரும்பவும் முடியும் என்று கூறுவது போல் தான் பெண்களின் மன நிலையும் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான். அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு ஆண்களுக்கும் இருக்கின்றது இருந்தும் மதுசாரம் குடிக்கின்றனர் இது அறியாமையா? அல்லது முட்டாள் தனமா?  மதுசாரம் குடித்தால் தான் வாழ்வில் மகிழ்ச்சி என்று ஏமாறும் ஒருவர் மற்றைய எல்லா விடயங்களுக்கும் இலகுவில் ஏமாறக் கூடியவராக மாறி விடுகின்றனர். காதலனை முத்தம் செய்யும் போது மதுசார நாற்றத்தினால் பெண்ணானவள் விலகி செல்ல நேரிடும். இதனால் காதல் தோல்வி அடைந்து பெண்ணின் மனம் உடைகின்றது. 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் மறைந்திருக்கின்றாள் என்பது அனைத்துலகமும் ஏற்றுக்கொள்ளும் உண்மை வாக்கு. இவ்வாறு இருக்கும் பெண்ணின் சிறிய ஆசைகளை நிறைவேற்றும் சக்தியாக ஆண்கள் இருப்பது தவரோன்றும் இல்லை.

மதுசாரம் குடிக்கும் ஆண்களை குறைக்க வைக்கவும் நிறுத்தவும் குழந்தை, சகோதரி, தோழி, காதலி, மனைவி, தாய் என்ற சிறிய முயற்சிகளை எம் வாழ்வை மேன்மைபடுத்த செய்ய முடியும்.   “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்” பாரதியார் அன்றே பாடியுள்ளார். அது போலத்தான் பெண்ணின் வளர்ச்சியும் உள்ளது. நாள் முழுவதும் சக்கரம் போல ஓயாமல் சுழன்று வேலை செய்து வரும் பெண்கள் அனைவருமே போற்றப்பட வேண்டிய நம்முடைய கண்களே!  

 

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்