தேர்தலுக்கு பணம் இல்லை..?
4 பங்குனி 2023 சனி 11:07 | பார்வைகள் : 5785
மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், பல மாதங்கள் வரை நடைபெறாது இருக்கவும் கூடும் என்றுதான் இப்போது தெரிகிறது. ஏனெனில், சட்டத்தின்படி தேர்தல் ஆணைக்குழுவே தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று இருந்தாலும், ஜனாதிபதியின் விருப்பப்படியே எல்லாம் நடைபெறப்போகிறது போலும்!
தேர்தலுக்காக செலவழிக்க திறைசேரியில் பணம் இல்லை என்பதே, இப்போது அரசாங்கத்தின் பிரதான வாதமாக இருக்கிறது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி இருப்பதால், அதை எடுத்த எடுப்பில் நிராகரிக்கவும் முடியாது. ஆனால், அரசாங்கம் தேர்தல் விடயத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், அது உண்மையாக இருக்கலாமா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திப்போடுவதை தடுக்குமாறும், அதை நடத்துவதைத் தடுக்குமாறும் நான்கு வழக்குகள், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலை ஒத்திப்போடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றிய வழக்கொன்றின் போது, தேர்தல் திகதியை அறிவித்துவிட்டோம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. அதை ஏற்ற நீதிமன்றம், அதற்கு அப்பால் அந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை.
ஆனால், தேர்தலை நடத்துவதை அனுமதிக்க வேண்டாம் என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ள வழக்கு சந்பந்தமாக, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நீதிமன்றத்தில் ஒரு சத்தியக் கடுதாசியை சமர்ப்பித்தார். தேர்தலுக்காக நிதி ஒதுக்குவது பெரும் சவாலாக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், சேவைகளை கடனுக்கு செய்ய வேண்டாம் என்ற ஜனாதிபதியின் சுற்றறிக்கையை அடுத்து, பணம் இல்லாமல் வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என்று, அரச அச்சகத்தின் தலைவர் கங்கானி கல்பனா லியனகே தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார். இதனால், தபால் மூல வாக்குப் பதிவை பெப்ரவரி 23ஆம் திகதி ஆரம்பிக்க முடியாமல் போகவே, தேர்தலை ஒத்திவைக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து பெப்ரவரி 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இராணுவ அதிகாரியின் வழக்கு, மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் மாதம் ஒன்பதாம் திகதிக்கு தேர்தலை நடத்துவதா ஒத்திப்போடுவதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்க இருந்தது. ஆனால், அது மே 11ஆம் திகதியே ஆராயப்படப் போகிறது. நீதிமன்றத்தின் அலுவல் குறிப்பேட்டில் இதற்காக ஒதுக்குவதற்கு, அதற்கு முன்னர் ஒரு நாள் இல்லை என நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, தேர்தலுக்கான நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு, நிதி அமைச்சின் செயலாளரை பணிக்குமாறு கோரி, ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கேட்டுக்கோண்டார்.
பாராளுமன்றத்தால் கடந்த டிசெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம், இந்தத் தேர்தலுக்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனவேதான், புஞ்சிஹேவா சபாநாயகரிடம் இக்கோரிக்கையை விடுத்தார்.
இந்த விடயம் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை (26) ஊடகவியலாளர்கள் சபாநாயகரிடம் கேட்டனர். பாராளுமன்றத்தால் பல்வேறு விடயங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்தாலும், திறைசேரி அவ்வனைத்துக்குமான நிதியை வருட ஆரம்பத்திலேயே கையிருப்பில் வைத்துக் கொள்வதில்லை என்றும், வரிகள் போன்ற வருமானம் கிடைக்கும் போதே அவற்றுக்கான நிதி திறைசேரியால் விடுவிக்கப்படுகிறது என்றும் சபாநாயகர் கூறினார்.
எனினும், இந்தத் தேர்தல் சட்டப்படி, மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என்பதை, இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போதே நிதி அமைச்சரான ஜனாதிபதிக்கு தெரியும். ஆனால், இப்போது நடப்பவற்றைப் பார்த்தால், அவர் நடைமுறையில் தேர்தலுக்காக நிதியை விடுவிப்பது எவ்வாறு என்று சிந்திக்காமல், வெறும் பெயருக்கே நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
கடந்த வாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்த சில கருத்துகளைக் கவனிக்கும் போது, நிதிப் பிரச்சினையை பார்க்கிலும் தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்பாதமையே, தேர்தலுக்கான பிரதான தடையாக இருப்பதாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணைக்குழு முடிவுகளை எடுக்கும் போது, அதன் கோரம் மூன்றாக இருக்க வேண்டும். ஆனால், இந்தத் தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் போது, இரண்டு பேர் மட்டும் கூடி, மற்றவரின் ஒப்புதலை ‘சூம்’ மூலம் பெற்றுள்ளனர் என்பதால், அந்த முடிவு செல்லுபடியாகாது என்று ஜனாதிபதி வாதிட்டார். தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்தியில், தேர்தல் தினத்தைப் பற்றி கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறினார்.
இதன் அடிப்படையில், தேர்தல் திகதி செல்லுபடியாகாததால் தற்போது தேர்தல் இல்லை என்றும் தேர்தலுக்காக நிதி வழங்கும் அவசியமோ தேர்தலை பிற்போடும் அவசியமோ இல்லை என்றும் அவர் கூறினார். தேர்தல் திகதி செல்லுபடியாகாததால், நிதி அமைச்சின் செயலாளர் தேர்தலுக்கு நிதி வழங்கினால் அவரைப் பதவி நீக்கம் செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
விந்தை என்னவென்றால், ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த பின்னரே, அவர் தேர்தல் செல்லுபடியாகாது என்கிறார். அது மட்டுமன்றி, ஜனாதிபதியின் கீழுள்ள திறைசேரி, இதுவரை தேர்தலுக்காக 10 கோடி ரூபாய் நிதி வழங்கியும் இருக்கிறது. முறைப்படி அறிவிக்கப்படாத தேர்தலுக்காக பணம் ஏன் விடுவிக்கப்பட வேண்டும்?
தேர்தல் திகதி செல்லுபடியாகாது என்ற கருத்தை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் “அபத்தத்தின் உச்சம்” என்று கூறியிருந்தார்.
தேர்தல் முறைப்படி அறிவிக்கப்பட்டதா இல்லையா என்பதை, நீதிமன்றமேயன்றி ஜனாதிபதியால் தீர்மானிக்க முடியாது. திறைசேரி செயலாளர், நீதிமன்றத்துக்கு வழங்கிய சத்தியக் கடுதாசியில், சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட தேர்தலொன்றுக்கு நிதி வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, தேர்தலுக்கு நிதி வழங்குவது ‘சவாலாக இருக்கும்’ என்றே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கே, முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறவில்லை.
அதேபோல், வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கும் இராணுவ அதிகாரியின் சட்டத்தரணியும், தேர்தல் முறையாக அறிவிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் கூறவில்லை. “தேர்தலை நடத்தத்தான் போகிறோம்; அதற்கு திகதியையும் அறிவித்துவிட்டோம்” என்று தேர்தல் ஆணைக்குழு கூறியதை நீதிமன்றம் ஏற்றதாக மேலே குறிப்பிட்டோம். அதாவது, தேர்தல் சட்டப்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தாம், சட்ட மாஅதிபர் முன்னிலையிலேயே அவர்களிடம் தெரிவித்ததாக, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில், அவ்வாறு கருத்து வேறுபாடுகள் இல்லை என, 23ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழு சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறிய போது, எவரும் அதனை ஆட்சேபிக்கவில்லை.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின்படி, இன்னமும் புதிய ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படாததால், தேர்தல் ஆணைக்குழு தற்காலிக அடிப்படையிலேயே இயங்குகிறது என்றும், எனவே தேர்தலைப் பற்றி முடிவு எடுக்கும் போது, தற்போதைய ஆணைக்குழு அதைப் பாராளுமன்றத்துக்கு அறிவித்து இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வாதிட்டார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் சம்பந்தப்பட்ட விடயம், இவ்வாறு தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இச்சட்டம் அமலுக்கு வரும் நாளுக்கு முன்னர், ஆணைக்குழுக்களின் தவிசாளர்களும் உறுப்பினர்களுமாக இருப்பவர்கள், இச்சட்டம் அமலுக்கு வரும் நாளில், தத்தமது பதவிகளை இழப்பர். எனினும், அவ்வாணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் நாள் வரை, அவர்கள் தத்தமது பதவிகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் தொடர்ந்து நிறைவேற்ற முடியும்’.
எனவே, தற்போதிருக்கும் தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்றத்திடம் கேட்டுத் தான் தேர்தலை நடத்து முடியும் என்ற ஜனாதிபதியின் வாதம் சரியானதாகத் தெரியவில்லை.
அத்தோடு, இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் நடைபெறாது என்றும் தற்போதைய தேர்தலை ஒத்திப்போடுமாறு எதிர்க்கட்சியினர் தம்மிடம் கோரியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆனால், சட்டத்தின்படி தேர்தலை நடத்தவோ, ஒத்திப் போடவோ ஜனாதிபதியால் முடியாது.
பாராளுமன்றம் தேர்தலுக்காக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கும் நிலையில், தேர்தலுக்கு பணம் வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூற முடியாது. ஆனால், உண்மையிலேயே பணம் இல்லாவிட்டால், பணம் வழங்கவும் முடியாது.
அவ்வாறாயின், சபாநாயகரின் தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளும் கலந்துரையாடி, ஒரு முடிவை எடுக்கலாம். அதைவிடுத்து, வேறு தந்திரங்களில் ஈடுபடுவது தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில், ஆளும் கட்சிகள் மேற்கொள்ளும் மோசடி என்றே மக்கள் நினைப்பர்.
நன்றி தமிழ்mirror