Paristamil Navigation Paristamil advert login

முறையற்ற பிளாஸ்டிக் அப்புறப்படுத்தலையும் சுற்றாடல் மாசுபாட்டினையும் தவிர்ப்போம்

முறையற்ற பிளாஸ்டிக் அப்புறப்படுத்தலையும் சுற்றாடல் மாசுபாட்டினையும் தவிர்ப்போம்

24 மாசி 2023 வெள்ளி 09:13 | பார்வைகள் : 4855


ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 2021 - 2030 தசாப்தம் சூழற்றொகுதி மீள்நிறுவுகை தசாப்தமாக (Decade on Ecosystem Restoration 2021- 2030) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

புவியன்னையால் தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்தில் இடம்பெற்றுள்ள சூழற்றொகுதி தரங்குன்றுதல் காரணமாகவே தீவிரமான சுற்றாடல் செயற்பாட்டுக்காக அவ்விதமாக தசாப்தமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. 

வனாந்தரங்கள், ஆறுகள், ஈர நிலங்கள், கடல்கள், கரையோரங்கள், முகத்துவாரங்கள், பவளப்பாறைகள், கண்டல்கள், புற்றரைகள், சதுப்பு நிலங்கள் என்பவை இயற்கை சூழற்றொகுதிகளாக எடுத்துக்காட்டப்படலாம்.  

குளங்கள், வயல்கள், விளைநிலங்கள், நகரங்கள் முதலியன மனிதனால் உருவாக்கப்படுகின்ற சூழற்றொகுதிகளென அழைக்கப்படலாம். 

மீள்நிறுவுகை என்பது புனரமைப்பதாகும். இன்றேல், இயல்புநிலை மீட்பாகும். இயற்கை நெறிமுறையின்படி, புவி உயிரினங்களின் சக்தி வலையமைப்பாக அமைவது மேற்சொன்ன சூழற்றொகுதிகளாகும். 

சூழற்றொகுதியொன்று பொதுவாக அதிலுள்ள அனைத்து உயிரினங்களும் அந்த உயிரினங்களின் இடைச்செயற்பாடுகள் மற்றும் அமைந்துள்ள இடத்தின் பரப்பு சார்ந்த சுற்றுச்சூழல் எனும் இயற்கையான முழு நிறைவுகளை உள்ளடக்குகின்றன.  

தாவர மற்றும் விலங்கின வழியுரிமையை போன்றே மனித வாழ்க்கையைப் பேணிவர அவசியமான அனைத்து விதமான சூழற்றொகுதிச் சேவைகளும் பொருளாதார மற்றும் சமூக விருத்திக்கு அவசியமான பெரும்பாலான வளங்களும் சூழற்றொகுதி மூலமாகவே வழங்கப்படுகின்றன. 

மாசடைந்தும் தரங்குன்றலுக்கு இலக்காகியுள்ள சூழற்றொகுதிகளை புனரமைத்து உயிர்ப் பல்வகைமையை பாதுகாப்பதற்காகவும் இயற்கைச் சூழலின் நல்வழியுரிமையை பேணி வருவதற்காகவும் நாம் அனைவரும் கூட்டாக செயலாற்ற வேண்டும்.  

இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை சூழற்றொகுதி செயற்பாங்குகள் அழிவடையாதவாறு செயலாற்றுவதற்காக நாம் அனைவரும் நிலைபெறுவதற்கு சுற்றாடல்  செயற்பாங்கின்பால் பழகிக்கொள்வதும்  சமகாலத் தேவையாக மாறியுள்ளது. 

சூழற்றொகுதி மாசுபாடும் பாதகமான பிரதிவிளைவுகளும்

விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகள் மூலமாகவும் கடந்த 5 தசாப்தங்களில் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ள பொருளாதார அபிவிருத்தி காரணமாக மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினச் சாகியங்களினதும் வழியுரிமைக்கு அவசியமான உலகளாவிய சூழற்றொகுதிகளின் ஆரோக்கிய நிலைமை துரிதமான சீரழிதலுக்கு இலக்காகியுள்ளது என வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

காடழிப்பு, நிலப்பகுதிகளிலும் கடற் பிரதேசங்களிலும் முறைசாரா நிலப்பயன்பாடு, நீடுறுதியற்ற மிகைநுகர்வுப்பாங்குகள், மானிட செயற்பாடுகள் காரணமாக தோன்றிய காலநிலை மாற்றங்கள் பாரதூரமான வகையில் முறையற்ற விதத்தில் இடம்பெறுகின்ற பொலித்தீன், ப்ளாஸ்டிக் அப்புறப்படுத்தல், பல்வேறு வழிகளால் ஏற்படுகின்ற சுற்றாடல் மாசுபாடு, ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த தாவரங்களின் துரித விரிவாக்கம் என்பன சூழற்றொகுதிகள் சீரழிய காரணமாக அமைந்துள்ளதாக மேற்சொன்ன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

இவ்விதமாக சுற்றாடல் அழிவினூடாக இடம்பெறுகின்ற உலகளாவிய அபிவிருத்தி துரிதமாக மாற்றப்படவில்லையாயின், 2030ஆம் ஆண்டளவில் உலக சமூகத்தினால் அடையவேண்டிய நிலைபெறுதகு அபிவிருத்திக் குறிக்கோள்களில் ஏறக்குறைய 80%ஐ ஈடேற்றிக்கொள்வது சிரமமானதாக அமையும் என்பது துறை சார்ந்த தலைசிறந்த புத்திஜீவிகளின் அபிப்பிராயமாகும். 

உலகில் எந்தவோர் இடத்திலும் இடம்பெறுகின்ற ஒருதலைப்பட்சமான விவசாய செய்கை மற்றும் கால்நடை வள மேம்பாட்டின்போது இயற்கைக் காடுகள் அழிக்கப்படுகின்றன. அவ்விதமாக இடம்பெறுகின்ற முறைசாரா காடழிப்பு காரணமாக விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல்களை போன்றே மனிதனை, மானிடக் குடியிருப்புகளை விலங்குகள் நெருங்குவதால் விலங்குகளில் வளர்கின்ற நோய்களை ஏற்படுத்துகின்ற வைரஸ் மற்றும் பிற நுண்ணங்கிகள் எளிதில் மனிதனுக்கு மாறுகின்றன. 

இது மானிட ஆரோக்கியத்துக்கு பாதகமானது.  அண்மைக் காலமாக உலகில் பல்வேறு  பிரதேசங்களினூடாக பரவிய Ebola, sika, Nipah encephalitis, HIV/Aids, SARS, MERS மற்றும் Covid 19 போன்ற வைரஸ் நோய்கள் இடைக்கிடையே தலைதூக்க உலகளாவிய காடழிப்பும் உயிர்ப் பல்வகைமை தேய்வடைதலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

இவ்விதமாக உலகளாவிய சுற்றாடல் அழிவில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதான காரணமாக அமைவது சந்தை உற்பத்திகளும் நுகர்வு மாதிரியுமாகும். 

இந்த மாதிரியில் தெளிவான மாற்றமொன்றை ஏற்படுத்துவது சூழற்றொகுதி பேணுகை பணியை வெற்றியீட்டச் செய்விப்பது அவசியமாகும். அதில் மாற்றம் ஏற்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில் 9.7 பில்லியன் உலக சனத்தொகைக்கு உணவு வழங்குவதை மேலும் 60 வீதத்தால் அதிகரிக்க வேண்டும். இது பெருநிலத்துக்கு, சூழற்றொகுதிகளுக்கு தாங்கக்கூடிய நிலைமையல்ல. 

கடந்த 5 வருடங்களில் மாத்திரம் உலக காடழிப்பு 13.4 மில்லியன் ஏக்கர்களாகும். 

1948ஆம் ஆண்டில் இலங்கையில் 60 வீதமாக விளங்கிய வனப்போர்வை இன்றளவில் 18 - 22 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்விதமாக வனப்போர்வை வீழ்ச்சியடைதலானது மனிதனுக்கு வரையறையற்ற சேவையை வழங்கிவருகின்ற  செழிப்பான உயிர்ப் பல்வகைமையை அற்றுப்போகச் செய்விப்பதில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமாத்திரமன்றி, பல விதமான சுற்றாடல் மற்றும் சமூக சிக்கல்கள் தோன்றவும் காரணமாக அமைந்துள்ளது. 

இந்த சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காக சுற்றாடல் மாசுபாட்டினை தடுத்து, இழந்த சூழற்றொகுதிகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதையே நாங்கள் செய்ய வேண்டும். 

சூழற்றொகுதிகளை மீள்நிறுவுகையில் ஆற்றக்கூடிய பணிகள்  

சூழற்றொகுதிகளை மீள்நிறுவும் பணியின்போது காடுகளை மீள்நிறுவுவதற்காக நடவடிக்கை எடுப்பது விவேகமுள்ள பணியாக இனங்காணப்பட்டுள்ளது. 

Bon challenge 2011 மற்றும் New York Statement - 2014 ஊடாக எதிர்வரும் தசாப்தத்தில் உலகளாவிய ரீதியாக ஏறக்குறைய 350 மில்லியன் நிலப்பரப்பில் காடுகளின் மீள்நிறுவுகைக்கான உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. 

2030ஆம் ஆண்டளவில் உலகத்தால் அடையப்பெற வேண்டிய நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் ஐக்கிய நாடுகளால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க காடுகள் மீள்நிறுவுகை பணிகளும் 2030ஆம் ஆண்டளவில் நிறைவு செய்யப்படல் வேண்டும். சர்வதேச உயிர்ப் பல்வகைமை உடன்பாடு, காலநிலை மாற்றங்கள் பற்றிய பரிஸ் சமவாயம் போன்ற சர்வதேச உடன்படிக்கைகளுடன் இலங்கை கடப்பாடு கொண்டுள்ளதால் காடுகளின் மீள்நிறுவுகை தொடர்பில் செயலாற்றுவதில் இலங்கைக்கும் பொறுப்புண்டு. 

வனப்போர்வையை 32% வரை அதிகரிப்பதே இலங்கையின் செயற்பொறுப்பாகும். அப்பணி சம்பந்தப்பட்ட நிறுவனங்களாலும் தரப்பினர்களாலும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறைவிருத்தியடைந்த மலைநாட்டில் கலப்பு வன வளர்ப்பினை உருவாக்குவதும் காணிப் பயன்பாட்டுப் பாங்குகளை சுற்றாடல் நேயமுள்ளதாக மாற்றுவதும், உலர் வலயத்தில் இனங்காணப்பட்டுள்ள தொடர்படு அருவி  முறைமையை மீளவும் புனரமைத்தலும், விவசாய இரசாயனங்களற்ற சுற்றாடல் விவசாயத்தை ஊக்குவிப்பதும் மிகவும் முக்கியமான சூழற்றொகுதி மீள்நிறுவுகைப் பணிகளாகும். 

அத்துடன் வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டுக்காகவும் அசுத்தமான நீரை வடிகட்டுவதற்காக ஈரநிலங்களையும் சேற்று நிலங்களையும் விவேகமான முறையில் ஈடுபடுத்துவதும் காடுகள், ஈரநிலங்கள் போன்ற சூழற்றொகுதிகளை பாதுகாக்க சட்டத்தை அமுலாக்குவதும் மிகவும் அவசியமாகும். 

புதர்க்காடுகளிலும் வனத்தொகுதியிலும் காணக்கூடியதாக உள்ள சுற்றாடல் பெறுமானத்தை பார்க்கிலும், அவை பல்வேறு சுற்றாடல் சேவைகளை வழங்குகின்ற உயிரியல் பெறுமதியும் கொண்ட சூழற்றொகுதிகளாகும்.  அதனால் பயிர் வளர்ப்புக்காக இந்த காணிகளை ஈடுபடுத்துகையில், இது சம்பந்தமாக முறையான மதிப்பீட்டுடன் செயலாற்ற வேண்டியது அவசியமாகும். 

சூழற்றொகுதி மீள்நிறுவுகையின்போது தரங்குன்றுதலுக்கு மாசடைதலுக்கு இலக்காகிய ஆற்று வடிநிலங்களை மீள்நிறுவுதலும் மிகவும் முக்கியமானதாகும். 

நீர் வளத்தை பாதுகாத்து எதிர்காலத்தில் தோன்றக்கூடிய நீர் நெருக்கடிக்கான தீர்வினையும், அதிலிருந்து பெற்றுக்கொள்ள இயலும். அதுமாத்திரமன்றி, பல்வேறு சுற்றாடல் சார்ந்த பொருளாதார மற்றும் சமூக நன்மைகளையும் அதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். 

சுற்றாடல் அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் கூட்டாக 'சுரகிமு கங்கா' எனப்படுகின்ற ஆறுகளை புனரமைப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை அமுலாக்க நடவடிக்கை எடுத்தபோதிலும், Covid 19 பெருந்தொற்று போன்றே நாட்டில் உருவான எதிர்பாராத பொருளாதார அரசியல் குழப்பநிலை காரணமாக மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தில்  பின்னடைவு நிலவியபோதிலும், துரிதமாக அந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு புத்துயிர் அளிப்பது எமது நோக்கமாகும். 

ஆறுகள், குளங்கள், வயல்கள், நீர் வழிகள், உள்ளக நீர்நிலைகள், கடல் நீரேரிகள், முகத்துவாரங்கள், டெல்டாக்கள், கண்டல்கள், சவர்நீர் அல்லது உவர்நீரினால் தற்காலிகமாக  அல்லது நிரந்தரமாக மூழ்கியுள்ள செயற்கையான  அல்லது இயற்கையான சதுப்பு நிலங்கள், சேற்றுக் காணிகள், கரையோரத்தை அண்டிய சதுப்புநிலங்களும் வற்றுப்பெருக்கு மட்டத்தில் இருந்து 60 மீற்றர் வரையான ஆழமற்ற கடலும்  'ஈர நிலம்' என எளிமையாக எடுத்துக்காட்டப்படலாம். 

இயற்கையின் வழியுரிமைக்கும் எமது சமூக, பொருளாதார அபிவிருத்திக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி பெறுமதிமிக்க செயற்பொறுப்பினை சேற்று நிலங்கள் ஆற்றி வருகின்றன. 

தனித்துவமான ஈரநிலச் சேவையொன்றாக நீரை களஞ்சியப்படுத்தி தூய்மையாக்கும் பணியை செய்துவருகிறது. இயற்கையான மாசுகளின் வடிகட்டியாக செயலாற்றி எம்மால் பாதுகாப்பாக பாவனைக்கு எடுக்கக்கூடிய நன்னீரை வழங்கி வருகிறது. 

நீர்வாழ் உயிரினங்களின் விருத்திக்கும் எமது உணவு உற்பத்தியின் ஒரு பிரிவாகவும் அமைகின்ற நன்னீர் மீன்பிடித் தொழிற்றுறையின் நிலைபெறுதகு வழியுரிமைக்கும் அதன் முன்னேற்றத்துக்கும் காரணமாக அமைவது ஈரநிலமாகும். பிரதான உணவாக சோறு உண்கின்ற ஏறக்குறைய 3.5 பில்லியன் உலக சனத்தொகையின் போஷாக்குக்கான சோற்றினை வழங்குகின்ற நெல் உற்பத்திக்கான அத்திவாரத்தை அமைத்துக் கொடுப்பது ஈரநில சூழற்றொகுதியான 'வயல்' என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும். 

மேற்சொன்ன ஈரநிலங்களின் வழியுரிமையும் நிகழ்காலத்தில் கடுமையான அபாயநேர்வுக்கு இலக்காகியுள்ளது. இன்றளவில் உலக ஈரநிலங்களின் 90%ஐ நாங்கள் இழந்துள்ளோம் என்பதும், காடுகளை பார்க்கிலும் மும்மடங்கு வேகத்தில் எஞ்சிய ஈரநிலங்களையும் இழந்து வருகிறோம் என்பதும் ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இயற்கைச் சூழற்றொகுதி என்ற வகையில் 'ஈரநிலங்களின் மீள்நிறுவுகை' எனும் தொனிப்பொருளில் 2023 உலக ஈரநிலக் கொண்டாட்டம் நடைபெற்றதும் அதிலுள்ள சமகால முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்தியம்புவதற்கே ஆகும். 

பூந்தல தேசிய பூங்கா, ஆனவிழுந்தாவ குளத் தொகுதி சரணாலயம், மாது கங்கை ஈரநில சரணாலயம், வங்காலை ஈரநில தொகுதி மற்றும் வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட 6 சூழற்றொகுதிகள் ரம்சார் உடன்பாட்டின்கீழ் பேணப்பட்ட பிரதேசங்களாக வன சீவராசிகள் பேணல் திணைக்களத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசங்களாக  கூருணர்வுமிக்க 10 சூழற்றொகுதிகள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றுள் 6 ஈரநில சூழற்றொகுதிகளாகும். 

அவையாவன: நுவரெலியா கிறெகரி வாவி, கம்பஹா முத்துராஜவெல, கொழும்பு தலங்கம வாவி, புளத்சிங்கள வளவ்வத்த, வத்துரான, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களை ஊடறுத்துச் செல்கின்ற பொல்கொட வாவி மற்றும் வராதென்ன ஹக்கிந்த ஆகிய ஈரநிலத் தொகுதிகளாகும். 

ஏனைய நான்கு சூழற்றொகுதிகளாக அமைவன நக்கிள்ஸ், ஹந்தானை, மரங்கல கந்த மற்றும் பன்சலாதென்ன ஆகிய சூழற்றொகுதிகளாகும். 

மேற்படி சூழற்றொகுதிகளையும் பேணுவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் பேணுகையை ஊக்குவிப்பதற்காக தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதன் மூலமாக ஈரநிலங்களை உள்ளிட்ட சுற்றாடல் பேணுகையுடன் தொடர்புடைய புதிய ஏற்பாடுகளை வழங்குதலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைக் கொண்டதாக முகாமை செய்யப்பட வேண்டிய ஈரநிலங்கள் மற்றும் பேணப்பட வேண்டிய ஈரநிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

அத்தோடு முகாமை மற்றும் பேணுகையுடன் தொடர்புடைய வழிகாட்டல்களும் அளவுகோல்களும் தயாரிக்கப்பட்டு ஒழுங்குறுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். 

ஒருசில குழுமங்களால் பேணப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறிய சட்ட ரீதியற்ற செயல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ப்ளாஸ்டிக் கழிவுப்பொருட்களும் கடல், தரை சூழற்றொகுதி மாசுபாடும்

உலகில் கடல்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ள  கழிவுப்பொருட்களில் 80% ப்ளாஸ்டிக் கழிவுப் பொருட்களாகும். அத்லாந்திக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம், பசுபிக் சமுத்திரம் மற்றும் இந்து சமுத்திரத்தை எடுத்துக்கொண்டால், இந்து சமுத்திரத்திலும் பசுபிக் சமுத்திரத்திலும் ப்ளாஸ்டிக் மேடுகள் குவிந்துள்ளமை பதிவாகியுள்ளது. ஏறக்குறைய 51 ரில்லியன் நுண்ணிய ப்ளாஸ்டிக் துணிக்கைகள் காணப்படுவதோடு, இவை உவர்நீர் உயிரினங்களுக்கு (Marine Wildlife) பாரதூரமான அச்சுறுத்தலாக விளங்குகின்றன. மீன்பிடிக் கருவிகள் (Fishing Gear) காரணமாகவும் ஏறக்குறைய 10%ஆன கடல் கழிவுப்பொருட்கள் பிறப்பிக்கப்படுகின்றன. 

ப்ளாஸ்டிக் உள்ளிட்ட கடற்கழிவுப் பொருட்கள் காரணமாக கடல்களில் ஏறக்குறைய 800  உயிரினங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 40% கடல்சார் முலையூட்டிகளும் 44% கடற்பறவை இனங்களும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளன. 

ஒருசில மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, ஒரு தடவை பாவித்து வீசி எறியப்படுகின்ற  ப்ளாஸ்டிக் போத்தல்கள், பைகள், பலவிதமான பொதியிடல் சாதனங்கள் போன்ற உருப்படிகளின் எண்ணிக்கை கடல்களில் வசிக்கின்ற மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை ஆகும். 2050ஆம் ஆண்டளவில் கடல்வாழ் உயிரினங்கள் ப்ளாஸ்டிக் பொருட்களை பரவலாக உட்கொள்வதோடு அது உயிரின ஒழிப்புக்கும் காரணமாக அமையக்கூடும். ஏற்கெனவே பெருந்தொகையான கடல்வாழ் முலையூட்டிகள்  ப்ளாஸ்டிக் உட்கொண்டதால்  அழிவடைந்துள்ளன. 

ஏறக்குறைய ஒரு மில்லியன் கடற்பறவைகள் அழிவடைந்துள்ளதோடு கடல்வாழ் முலையூட்டிகள், கடலாமைகள் மற்றும் பல்வேறு மீனினங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கும் ஆபத்துக்கும் இலக்காகி உள்ளன. அது மாத்திரமன்றி காடுகள், ஆறுகள், ஓடைகள், வயல்நிலங்கள் போன்ற ஈரநில சூழற்றொகுதிகள் மாசடைதலுக்கு முறைசாராவண்ணம் அப்புறப்படுத்தப்படுகின்ற பொலித்தீன், ப்ளாஸ்டிக் பெருமளவில் காரணமாக அமைந்துள்ளன என்பதையும் குறிப்பிடல் வேண்டும். 

ப்ளாஸ்டிக் மாசுபாட்டினை தடுத்தலும் கட்டுப்பாடும் 

ப்ளாஸ்டிக் பாவனை மற்றும் முறைசாரா அப்புறப்படுத்தல் காரணமாக தோன்றியுள்ள சுற்றாடல் சார்ந்த, சுகாதார மற்றும் சமூக சிக்கல்களை தடுப்பதற்காக இலங்கையையும் உள்ளிட்ட ஏறக்குறைய 130 நாடுகளில் ப்ளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகளின் கட்டுப்பாட்டினை போன்றே பல வகையான வரித் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன. 

அதேவேளை ப்ளாஸ்டிக் பாவனையை கட்டுப்பாட்டுக்காக பொதுமக்களின் ஒத்தழைப்பினை பெற்றுக்கொள்ள, எலக்ட்ரோனிக் மற்றும் அச்சு ஊடக கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை போன்றே முறை சார்ந்த மற்றும் முறைசாராத கல்வித் திட்டங்களை பாவித்து கல்வி நிகழ்ச்சித்திட்டங்களும் அமுலாக்கப்படுகின்றன. 

தேசிய சுற்றாடல் சட்டத்துக்கிணங்க இன்றளவில் பல்வேறு தனிப்பாவனை பொலித்தீன் உற்பத்திகளின் இறக்குமதி, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக்கை பாவித்து சிலிசிலி பேக், க்ரொசரி பேக், லன்ச் ஷீட், உணவுப் பொதியிடல் பெட்டிகள், பீங்கான்கள், கோப்பைகள் என்பவற்றின் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக விவசாய இரசாயன பொருட்களை பொதியிடுவதற்காக பொலி எத்திலீன் டெரெப்தலேற் (PET) அல்லது பொலிவைனயில்  க்ளோரைட் (PVC) பொருட்களின் பாவனையும் மில்லிமீற்றர் 20 அல்லது நிகர எடை 20 கிராமுக்கு இணையான செஷே பொதியிடல்களும், காற்று நிரப்பக்கூடிய பல்வேறு விளையாட்டுப் பொருட்களும், ப்ளாஸ்டிக் கூறுகளைக் கொண்ட காது துடைப்பான் பாவனையும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அத்தியாவசிய பாவனைகளுக்காக ஒருவகையிலான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தடைசெய்யப்பட்டுள்ள உற்பத்திகளின் வர்த்தகம் மற்றும் பாவனையை தடுப்பதற்காக சுற்றிவளைப்புகளை போன்றே தவறாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

பாடசாலை பிள்ளைகளை உள்ளிட்ட பொதுச் சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டுதலும் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ப்ளாஸ்டிக் பாவனை மற்றும் முறையற்ற அப்புறப்படுத்தல் காரணமாக எற்படுகின்ற பாதகமான நிலைமைகளை விளங்கிக்கொண்டு அந்த பாதகமான நிலைமைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பொது மக்களின் பொறுப்பாக அமையும். 

அறிவுபூர்வமான பொலித்தீன் பாவனைக்கும் அப்புறப்படுத்தலுக்கும் நடவடிக்கை எடுப்பதாகும். இயலுமான வரை ப்ளாஸ்டிக் பாவனையை தவிர்த்துக்கொள்வதும் பாவிப்பதாயின், பாவனையின் பின்னர் அப்புறப்படுத்துகையில் மீள்சுழற்சிக்காக உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது குறித்துரைத்த நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதும் பொதுமக்களால் புரியப்படவேண்டிய கருமங்களாகும். 

ப்ளாஸ்டிக் உற்பத்திகளை பாவனையின் பின்னர் சுற்றுச் சூழலிலும் ஆறுகள், ஓடைகள், குளத் தொகுதியை உள்ளிட்ட ஈரநில சூழற்றொகுதிகளிலும் வனாந்தர தொகுதிகளிலும் கரையோர மற்றும் கடற்சூழல் தொகுதிகளிலும் முறைசாராத வகையில் விடுவிப்பதன் மூலமாக நாமனைவரும் தவிர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். 

சூழற்றொகுதி பேணுகையும் சமூகப் பொறுப்பும்

ஈரநில சூழற்றொகுதிகளை சார்ந்த, திட்டமின்றி மேற்கொள்ளப்படுகின்ற பலவிதமான நிர்மாணிப்புகள், காணி நிரப்பல்கள் போன்றே கழிவுப்பொருட்கள், கழிவுநீர், பொலித்தீன் ப்ளாஸ்டிக், எலக்ட்ரோனிக் கழிவுப்பொருட்கள், கட்டடங்களை உடைத்து அகற்றப்பட்ட இடிபாடுகளை அப்புறப்படுத்துதல், அத்துமீறிய தீவைப்புகள், கண்டல் தாவரங்களை அழித்தல்,  மிகையாக மணல் கரைசேர்த்தல், நச்சு இரசாயனங்களை சேகரித்தல் என்பவை மண் மற்றும் நீர் மாசுபாட்டுக்கும் ஈரநில அழிப்புக்கும்  காரணமாக அமைந்துள்ளன. 

இவ்விதமாக ஈரநிலங்களுக்கு சேதம் ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை நாங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

சூழற்றொகுதிகளை மீள்நிறுவுகையில் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள உயிரினங்களை பாதுகாப்பதற்காகவும் சூழற்றொகுதிகள் மீது படர்ந்துள்ள ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த  தாவரங்களை அகற்றுவதும் முறை சாராத வகையில் அப்புறப்படுத்தியுள்ள எலக்ட்ரோனிக் கழிவுப்பொருட்கள், பொலித்தீன், ப்ளாஸ்டிக், உலோகப் பொருட்கள் போன்ற திண்மக் கழிவுப்பொருட்களை அகற்றுவதும், கரையோர சூழற்றொகுதிகளில் கழிவுப்பொருட்களை அகற்றி சுத்தம் செய்வதும் பயனுறுதிமிக்கதாக அமைவதோடு, இவ்வாறான சுற்றாடல் பேணல் பணிகளை பொதுமக்கள், இளைஞர் கழகங்கள், பாடசாலை பிள்ளைகள், சமுதாய அமைப்புகள் ஒழுங்கமைத்து தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும். 

அண்மையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை, களணி பல்கலைக்கழகத்தின் லியோ கழகம் மற்றும் க்ளீன் ரெக் நிறுவனம் கூட்டாக வெள்ளவத்த கரையோரப் பட்டியல் சுத்திகரிப்பு வேலைத்திட்டமொன்றை கரையோர மற்றும் கடற்றொகுதியை பாதுகாக்கும் செயற்பாங்குக்கு ஏதேனும் விதத்தில் பங்களிப்பு செய்யும் வகையிலேயே மேற்கொண்டன. 

இதன்போது சேகரித்துக்கொண்ட பாரியளவிலான பொலித்தீன் ப்ளாஸ்டிக்  அளவினை சுற்றாடல் நேயமுள்ள வகையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

பொலித்தீன் ப்ளாஸ்டிக் பாவனையை தவிர்த்துக்கொள்ள அல்லது குறைந்தபட்ச பாவனைக்கு பழகிக்கொள்வதும்,  தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்திகளை தவிர்த்துக்கொள்வதும், பாவிக்கப்பட்ட பொலித்தீன் உற்பத்திகளை பாவனைக்குப் பின்னர் முறைப்படி அப்புறப்படுத்துவதும் இன்றைய தினத்தின் அத்தியாவசியமான செயற்பொறுப்பாகும். அது மறைமுகமாக சூழற்றொகுதி பேணலுக்கும் ஏதுவானதாக அமைகின்றது. 

எம் அனைவருக்கும் போன்றே அனைத்து உயிரினப் பிரிவுகளினதும் நல்வழியுரிமைக்காக சூழற்றொகுதிகளை பாதுகாப்பதற்காக  எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டியது பொதுவான சமூகப் பொறுப்பாகும் என்பதை இறுதியாக குறிப்பிடவேண்டும். 

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்