Paristamil Navigation Paristamil advert login

சீனாவின் தயக்கத்தால் தவிக்கும் இலங்கை!

 சீனாவின் தயக்கத்தால் தவிக்கும் இலங்கை!

22 மாசி 2023 புதன் 09:35 | பார்வைகள் : 5447


பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இப்போதைக்கு இருப்பது ஒரே தெரிவு சர்வதேச நாயண நிதியம் தான்.
 
அனை நம்பித்தான் இலங்கை பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
 
சர்வதேச நாணயநிதியம் முதற்கட்டமாக 2.9 பில்லியன் டொலர்களை விடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
 
இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை மெல்லமெல்ல செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது.
 
அதனடிப்படையில், இலங்கையில் வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
அதில் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் இருந்து வரி அறவிட தீர்மானிக்கப்பட்டது.
 
அந்த வரி அறவீட்டுக்கு எதிராக மருத்துவர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுகின்றவர்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
 
இதனால், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த போது, 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி விதிக்க வேண்டும் என்ற நிபந்தனை பற்றி வாய்திறக்கவில்லை.
 
பணவீக்கம் ஜனவரி மாதத்தில், 54 சதவீதமாக காணப்படும் நிலையில், 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வருமான வரியை அறவிடும் கோரிக்கையை சர்வதேச நாணயநிதியம் இறுக்கிக் பிடிக்கலாம்.
 
இந்நிலையில், மின்சாரக் கட்டணங்களை 66 சதவீதத்தினால் இலங்கை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
 
அதனை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காஞ்சன விஜயசேரக, மின்சாரக் கட்டணத்தினை உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்றை நிறைவேற்றி விட்டதாக அறிவித்துள்ளார்.
 
இவ்வாறு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் மிகப்பிரதானமாக இருப்பது, கடன் மறுசீரமைப்புக்கான உத்தரவாதங்களை இலங்கை கடன் பெற்ற நாடுகள் சர்வதேச நாணயநிதியத்துக்கு அளிப்பது தான்.
 
தற்போதைய நிலையில், ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் அதற்கு பகிரங்கமாக முன்வருவதாக அறிவித்துள்ளன. இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்தும் விட்டது.
 
ஆனால், சீனா இந்த விடயத்தில் இரட்டைத்தன்மையை தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றது.
 
அண்மையில் இலங்கைக்கு வழங்கிய கடன்களுக்கு இரண்டு வருடகாலம் கால எல்லையை நீடிப்பதாக அறிவித்தது சீனா.
 
ஆனால், அந்த அறிவிப்பு குறித்து ஆழமாக பார்க்கையில், சீனாவின் எக்ஸிம் வங்கி மட்டும் தான் வழங்கிய கடனுக்கு இருவருட கால எல்லையை நீடித்து அறிவித்துள்ளது.
 
அப்படியானால் சீனாவின் மக்கள் வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் தொடர்பில் எவ்விதமான உறுதிப்பாடுகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
 
சீனாவைப் பொறுத்தவரையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உறுதியான வெளிப்பாடுகளை செய்வதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் சீனா கடன்பொறி இராஜதந்திரத்தினையே கையாண்டு வருகின்றது.
 
இதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது பாகிஸ்தான்.  இலங்கையைப் போலவே, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
 
அடுத்தகட்ட தவணையான 1.1 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் சமர்ப்பித்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நிராகரித்து விட்ட சர்வதேச நாணய நிதியம், மின்சாரக் கட்டணத்தையும், வரிகளையும் அதிகரிக்குமாறு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
 
ஆனால் உள்ளுர் நிலைமைகளின் படி அவ்விதமான அதிகரிப்பினை மேற்கொண்டால் அது ஆட்சியாளர்களுக்கு சிக்கலாக அமைந்துவிடும். ஆகவே பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இரண்டாம் கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்கடிகளால், வெறுத்துப் போயிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்.
 
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், சீனாவிடமிருந்து 77 பில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது.
 
இலங்கையானது, சீனாவிடம் பெற்றிருக்கும் கடன் வெறும் 8 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 8 மடங்கு கடனை சீனாவிடம் பெற்றிருக்கிறது பாகிஸ்தான்.
 
இதனால் தான் அந்நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க முடியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
 
அதுபோலத் தான் இலங்கையும் தற்போது சிக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை ஏனைய நிபந்தனைகளை நிறைவேற்ற முடினைந்தாலும், சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இலங்கையால் ஏதுவும் செய்ய முடியாதுள்ளது.
 
சீனாவிடம் கடன்வாங்கிக் கொண்டதால், தற்போது சர்வதேச உதவிகளை பெறமுடியாது சிக்கிக் கொண்டிருக்கின்றது இலங்கை.
 
இந்த நிலையில் இலங்கையின் எதிர்காலம் சீனாவின் கைகளில் தான் தங்கியுள்ளது. ஆனால் சீனா இன்னமும் மௌனம் கலைக்கத் தயாராக இல்லை.
 
நன்றி ஆதவன் NEWS

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்