2.9 பில்லியன் எப்போது இலங்கைக்கு கிடைக்கும்?
18 மாசி 2023 சனி 11:21 | பார்வைகள் : 5872
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது இலங்கையை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கிறது.
அதனை தவிர்த்து இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு எடுப்பது என்பது நெருக்கடி மிக்கதாகவே உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தொடர்ந்து தாமதமடைந்து கொண்டு சென்ற நிலையில் தற்போது பல்வேறு சாதக சமிக்ஞைகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
இந்த கடனை பெற்றுக்கொள்வதில் தாமதம் நிலவுகின்றமைக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.
அதில் மிக முக்கியமாக சீனாவின் தீர்மானம் இருக்கின்றது. அதாவது இந்த விடயத்தில் நிதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்த விடயம் மிக முக்கியமாகும். அது கவனம் செலுத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.
அதாவது சீனா தற்போது சீனா இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாக அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக சீனாவின் எக்சிம் வங்கி அதாவது சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அந்த கடிதம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்னும் பதிலளிக்கவில்லை.
அதுமட்டுமன்றி சீனாவின் இந்த உத்தரவாதம் போதுமானதா ன்பது தொடர்பான விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
சீனா தொடர்ந்து என்ன செய்யப்போகிறது? சீனா இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு முழு ஆதரவு வழங்குமா? என்பது தொடர்பான விடயங்கள் பேசுபொருளாக இருக்கின்றன.
முக்கியமாக ஆரம்பத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்புகளில் அறிவிப்புக்கள் வெளியாகின.
குறிப்பாக ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு இணக்கம் தெரிவித்தன.
ஆனால் தொடர்ச்சியாக சீனா இதில் தயக்கம் காட்டி வந்தது.
அதாவது கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதில் சீனா காட்டிய தயக்கமே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவியை பெற்றுக் கொள்வதில் தொடர் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றது.
சீனா இது தொடர்பில் உத்தியோகபூர்வமான பதிலை தொடர்ச்சியாக வழங் காமலேயே இருந்து வந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சீனாவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
சீனாவின் பல்வேறு பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்த நேரத்தில் இது தொடர்பில் அரசாங்கம் வலியுறுத்திவந்தது.
இறுதியில் தற்போது இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்குவதாக சீனா அறிவித்திருக்கின்றது.
அதாவது இலங்கை சீனாவிடம் பெற்றுள்ள கடன்களை மீள் செலுத்துவதில் இரண்டுவருட கால அவகாசத்தை வழங்குவதாக சீனா அறிவித்திருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அதாவது கடன் மறுசீரமைப்பு எனப்படுவது இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சு நடத்தி பெறப்பட்ட கடன்களை எவ்வாறு மீள் செலுத்துவது என்பது தொடர்பான ஒரு திட்டத்தின் உருவாக்குவதை குறிக்கின்றது.
அதாவது வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது என்று வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்த ஒரு நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் புதிய கடனை பெறவேண்டுமாயின் இவ்வாறு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடன் மறுசீரமைப்பு செய்துகொள்ளவேண்டும்.
அதற்காக கடன் மறுசீரமைப்பு அனுகுமுறை பின்பற்றப்படவேண்டும். இந்த கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் மூன்று கருவிகள் பிரயோகிக்கப்படலாம்.
அதில் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கலாம். அல்லது அந்த கடன்களுக்கான தவணை பணத்தை மீள்செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். அதாவது கடன் செலுத்துவதற்கு நீண்ட நிவாரண காலப்பகுதியை பெற்றுக் கொள்ளலாம்.
மூன்றாவதாக இலங்கை இந்த நாடுகளிடம் பெற்றிருக்கின்ற கடன்களில் ஒரு தொகையை கழித்து விடலாம். அல்லது ரத்து செய்துவிடலாம்.
அதனை Haircut என்று கூறுவார்கள். இந்த மூன்று முறைகளில் இலங்கை சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள முடியும்.
அவ்வாறு செய்து அந்த உடன்படிக்கையை நாணய நிதியத்துக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் மட்டுமே தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கி இருக்கின்ற 2.9 பில்லியன் டொலர் கடனை பகுதி பகுதியாக நான்கு வருட காலத்தில் இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி தற்போது சீனா இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதில் ஒரே ஒரு கருவியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது.
அதாவது இலங்கை கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கி இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவிடம் 8 பில்லியன் டொலர் கடன் அளவில் பெற்றுள்ளது. அந்த கடன்கள் மீள் செலுத்தப்பட வேண்டும்.
அதற்கே தற்போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கடன்கள் சீனாவின் எக்சிம் வங்கி ஊடாகவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே சீனா வழங்கியுள்ள இலங்கை தொடர்பான நிதி உத்தரவாதம் போதுமானதல்ல என்ற ஒரு கருத்து தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் நூலான்ட் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
அதாவது சீனாவின் உதவி இலங்கைக்கு போதுமானதல்ல என்ற கருத்தை அவர் மிக தெளிவாக திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் சீனாவின் உத்தரவாதம் போதுமானதல்ல என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
மேலும் சீனாவின் இரண்டு வருட உத்தரவாதம் குறித்து நேரடியாக பதிலளிக்காத சர்வதேச நாணய நிதியம் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டு இருக்கிறது.
அதாவது இவ்வாறான செயற்பாடுகளில் சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டினா தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் சீனா என்ன செய்யப்போகிறது என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.
தற்போது இந்த கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் பந்து சீனாவின் கைகளிலேயே இருக்கிறது.
ஏனைய சகல தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தியா உத்தரவாதம் வழங்கிவிட்டது.
ஜப்பான் உள்ளிட்ட பரிஸ்கிளப் நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. அதாவது இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கு முழுமையான நிதியியல் உத்தரவாதத்தை வழங்குவதாக பரிஸ்கிளப் நாடுகள் கூட்டாக அறிவித்திருந்தன.
பரிஸ் கிளப் என்பது கடன் வழங்குநர்களின் ஒரு உத்தியோகபற்றற்ற குழு ஆகும்.
இது 1956 இல் உருவாக்கப்பட்டது. கடன் பெறும் நாடுகள் எதிர்கொள்ளும் பணம் செலுத்தும் சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
பரிஸ் கிளப் உறுப்பு நாடுகளாக ஜப்பான், பிரான்ஸ், கொரியா,ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து, ரஷ்யா, சுவீடன், ஆஸ்திரியா, கனடா, பிரிட்டன், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
இதேவேளை இலங்கைக்கு கடன் வழங்கிய அதேநேரம் பாரிஸ் கிளப் அமைப்பில் அங்கத்துவம் வகிக்காத உறுப்பினர்களாக சீனா, இந்தியா, சவுதி அரேபியா, குவைத், ஹங்கேரி, ஈரான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. மேலும் பரிஸ் கிளப்பில் அங்கத்துவம் வகிக்காத நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்த பின்னணியிர் சீனா எடுக்கும் தீர்மானத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பெற்றுக் கொள்ளுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
சீனாவின் இரண்டுவருடகால அவகாசம் போதுமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் கருதும் பட்சத்தில் சீனா மேலும் ஏதாவது ஒரு கடன் மறுசீரமைப்பு கருவியை இலங்கைக்காக பயன்படுத்த வேண்டிவரும்.
எனவே சீனா என்ன செய்யும் என்பதை இங்கே மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் சீனாவின் இந்த இரண்டு வருட கால அவகாசம் நிதியியல் உத்திரவாதம் தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
எந்த திலையும் தெரிவிக்கவில்லை. எனவே சர்வதேச நாணய நிதியம் என்ன பதிலை தெரிவிக்க போகிறது? அதற்கு சீன அடுத்ததாக என்ன கூறுகிறது? என்பது தீர்க்கமாகவுள்ளது. இந்தியா இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
ஜப்பானும் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் சீனாவின் தீர்மானமே கட்டாயமாகும். சீனா ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளே இலங்கைக்கு அதிகளவில் கடன்களை வழங்கி இருக்கின்றன.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதியுடன் விரைவில் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயமும் மிக முக்கியமானதாக இருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.
அதற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து வருகின்றார்.
அதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் எடுக்கப்போகு அனுகுமுறைகளும் மிக முக்கியமாக இருக்கின்றன.
அடுத்த கட்டமாக சீனாவும் இலங்கையும் பேசவுள்ள விடயங்கள் எடுக்கப்போகும் முடிவுகள் எப்படியிருக்கப்போகின்றன என்பதே இலங்கையின் மீட்சியை தீர்மானிப்பதாக அமையும்.
நன்றி வீரகேசரி