Paristamil Navigation Paristamil advert login

அதிகரித்த மின்கட்டணமும் அவதியுறும் மக்களும்

 அதிகரித்த மின்கட்டணமும் அவதியுறும் மக்களும்

16 மாசி 2023 வியாழன் 14:29 | பார்வைகள் : 5472


நாட்டில் வாழும்  ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அங்கலாய்ப்புகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். 
 
அந்த வகையில் இன்று  எல்லோரும் அங்கலாய்க்கும்  ஒரு  விடயமாக நாட்டில்  அதிகரித்துள்ள  மின்கட்டணத்தை குறிப்பிடலாம்.
 
வாழ்க்கைச் சுமையை  சுமக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் மக்களின் மீது மேலும் சுமையை சுமத்துவதுபோல  அமைந்துள்ளது இந்த மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு பெரும் இடிவிழுந்ததைப்போன்று உள்ளது.
 
அன்றாட வாழ்க்கைச் செலவையே கொண்டு செல்ல முடியாமல் எத்தனையோ  குடும்பங்கள் செய்வதறியாது விழிபிதுங்கியுள்ள நிலையில், மின்கட்டண அதிகரிப்பு என்பது அவர்களின் சுமைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.
 
மின்கட்டணம்  அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு  செய்தியாக இருக்கிறது.  
 
ஆனால்  அதைத் தொடர்ந்து  ஏற்படவிருக்கும் ஏனைய கட்டணங்களின் அதிகரிப்பை எண்ணிப்பார்க்கும் போது  சிலருக்கு வாழ்க்கையே சூனியமாக தெரிகின்றது. 
 
நாளாந்தம்  வருமானத்தை தேடுகின்ற  கூலித்தொழிலாளர்களை  எடுத்துக்கொண்டால் அவர்களில் பெரும்பாலானவர்கள்  மதிய உணவாக ஒரிரு சிறிய சிற்றூண்டிகளையே  எடுத்துக்கொள்கின்றார்கள். 
 
அவற்றையே  அவர்களின் வருமானத்துக்கு  கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும்.   
 
அந்த  சிற்றூண்டிகளின் விலையிலும்  இந்த மின்கட்டண அதிகரிப்பானது  தாக்கத்தை செலுத்தியுள்ளது.  இது ஒரு உதாரணம் மாத்திரம் என்றே கூறவேண்டியுள்ளது. 
 
இந்த மின்கட்டண அதிகரிப்பானது ஒரு சங்கிலித்தொடரைப் போன்று  எல்லா விதமான சேவைகள்,  கட்டணங்களிலும்  பாரிய  தாக்கத்தை செலுத்துகின்றது. 
 
நாடு தான் பெற்ற  கடன்சுமையிலிருந்து மீள்வதற்காக  மக்கள் மீது சுமையை   சுமத்துகின்றது.  அந்த சுமையை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். 
 
வருமானத்தில்  எவ்விதமான அதிகரிப்பும் இல்லாத வேளையில்  இவ்வாறு பொருட்கள், சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கும் போது அதற்கான தீர்வை  எவ்வாறு  பெற்றுக்கொள்வது என்ற வினா அனைவரிடத்திலும் காணப்படுகின்றது. 
 
இந்த  மின்கட்டண அதிகரிப்பை நோக்கும் போது ஒவ்வொருக்கும் செலுத்தப்பட்ட  மெல்லக்கொல்லும்  நஞ்சாகவே  நினைக்கத் தோன்றுகின்றது. 
 
இந்த நிலைமையிலிருந்து  மக்கள்  விடுதலை பெற  பொறுப்புக்கூறவேண்டிய  இடத்தில் உள்ள  அனைவரும்  உரிய  வேலைத்திட்டங்களை  விரைவில் முன்னெடுக்கவேண்டும்.
 
இல்லையேல்  அதிகமான மக்கள்  பட்டினிச் சாவை எதிர்நோக்கவேண்டிய அபாயம்   ஏற்படும்  என்பதை  யாராலும் மறுப்பதற்கில்லை.  இந்த கஷ்ட நிலைமை மாறி மக்கள்  தமக்கான இயல்பு வாழ்க்கையை வாழ  வழிசெய்யவேண்டியது அரசினதும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினதும் கடப்பாடாகும். 
 
நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்