வானத்தில் நீச்சல் ஆழ்கடலில் ஓட்டம்!
7 தை 2023 சனி 13:10 | பார்வைகள் : 8109
நாம் இங்கு கொடுத்திருக்கின்ற தலைப்பு ஒரு கனவு அல்லது கற்பனை!. அவை பொதுவாக நடைமுறைச் சாத்தியம் இல்லாத விடயங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனிதன் விமானத்தை தயாரித்து ஆகாயத்தில் பயணிப்பதில் வெற்றி கண்டிருக்கின்றான்.
அதேபோன்று மனிதன் பலவிதமான படைப்புகளை கண்டுபிடித்து கடலில் அங்கும் இங்கும் சர்வசாதாரணமாக போய் வருகின்றான். ஆனால், மனிதனால் வானத்தில் நீந்தவோ கடலில் நடந்து போகவோ இதுவரை முடியாமல் இருக்கின்றது.இதுதான் இன்று வரையிலான வானத்தில் நீந்துவதும் கடலில் நடப்பதும் பற்றிய மனிதனது நிலையாக இருக்கின்றது.
ஆனால், நாம் இங்கு பேசப்போகும் வானத்தில் நீந்துவதும் ஆழ்கடலில் நடப்பதும் கதை வேறு.நாம் எமது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் பற்றியும் அவர்களது அடாவடித்தனம் பற்றியும் நிறையவே பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம்.ஆனால் அவர்கள் தமது பாதையை மாற்றிக் கொண்டதாகவோ அல்லது மக்கள் தங்களை மாற்றிக் கொண்டதாகவோ அதற்குப் பதிலடி கொடுத்ததாகவோ இதுவரை தெரியவில்லை.எனவேதான் தம்மை ஏமாற்றியவர்களையே மாறி மாறி அவர்கள் அதிகார ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்து வருகின்றார்கள்.இது ஏறக்குறைய கடந்த ஒரு தலைமுறைக்கும் மேலாக நடந்து வருகின்றது.
அதன் விளைவுகள் இன்று எவ்வளவு தூரம் மோசமாக மாறி இருக்கின்றது என்பது அனைவருக்கும் புரிகின்றது.தனது தலைமுறை தனது பிள்ளைகள், பேரன், பேத்திகள், அவர்களது வாரிசுகள் என்று கண்ணுக்கு எட்டாத தூரம் வரை அவர்களது வாழ்வு கடனிலும் துன்பங்களிலும்தான் என்று தெளிவாகத் தெரிகின்றது-உறுதியாகி இருக்கின்றது.கடனை பெற்றவர்களும் அவர்களை அதிகாரக் கதிரையில் அமர்த்தியவர்களும் காலத்தால் இயற்கை எய்தி விடுவார்கள். ஆனால், கடனும் துன்பங்களும் நமக்கு நிலையானது நிரந்தரமானது என்றாகிவிட்டது.எனவே வருங்காலச் சந்ததியினர் தமக்கு இந்த அநியாயத்தைச் செய்தவர்களை அவர்களது வாழ்நாள் முழுதும் சபிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
எனவே நமக்கும் நமது சந்ததியினருக்கும் துன்பமும் துயரமும்தான் நிரந்தர வாழ்க்கை என்ற நிலையில் நாடு போய்க் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இப்போது நமக்கு எவரும் கடன் தரவும் தயாராக இல்லை.கடந்த வாரம் நமது வெளிவிவகார அமைச்சர், ஐ.எம்.எப் கடன் விவகாரத்தில் நாம் பொறுமை இழந்து நிற்கின்றோம்.எமக்கு அவசரமாக உலகம் குறிப்பாக ஐ.எம்.எப் கடன் தந்தாக வேண்டும் என்று சர்வதேச ஊடகமொன்றிடம் பேசி இருந்ததை நாம் பார்த்தோம்.
எனவே இப்போது கடன் கேட்டால் இல்லை என்று எல்லோரும் சொல்லிவிடும் நிலையில் சண்டித்தனம் அல்லது பலாத்காரமாக வழிப்பறிக் கொள்ளையர்கள் போல பணத்தை உலகத்தாரிடம் பறிக்கின்ற நிலையில் நாடு இருக்கின்றது. அமைச்சரின் இந்தப் பேச்சு நகரங்களில் கப்பம் வாங்குகின்ற காடையர்களின் நிலைபோல் அல்லவா இருக்கின்றது.! இப்படி எவ்வளவு காலத்துக்குத்தான் சர்வதேசத்திடமிருந்து பணத்தை நம்பி நாட்டை ஓட்ட முடியும்.
இப்போது பறித்து கடனை எடுக்கின்ற நிலையில் அரசு சர்வதேசத்துடன் வம்பு பண்ணிக் கொண்டிருப்பதைத்தான் இது காட்டுகின்றது. நமது தற்போதைய ஜனாதிபதி தனக்கு அதிகாரத்தை தந்தால் எல்லாம் சரியாகி விடும் என்றவர், இன்று ஒரு சராசரி நாடாளுமன்ற உறுப்பினர் போல அடிக்கடி சபையில் வந்து பட்டினி வரப்போகின்றது-பட்டினி வரப் போகின்றது என்று பொதுமக்களை எச்சரித்துக் கொண்டிருப்பதை அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து இன்று வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.நமது நாட்டில் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் அதிகூடிய நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கு கொண்ட ஜனாதிபதியாக தற்போதைய ரணில்தான் சாதனை படைத்திருப்பார் என்று நாம் நம்புகின்றோம்.
ஏதோ அடிப்படையில் ஐ.எம்.எப். சொன்னபடி 2.9 பில்லியன் காசை நமக்குத் தருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அதுவும் தவணை அடிப்படையில் என்பதும் நமக்குத் தெரியும்.இந்தப் பணம் ஒரே தவணையில் நமது ஆட்சியாளர்கள் கைகளுக்கு கிடைக்கின்றது என்றால் முதலில் அதிலிருந்து எந்தளவு பணத்தை கையாட முடியும், எப்படி முடியும் என்பதுதான் அவர்களது சிந்தனையாக இருக்கும்.அடுத்தது இப்படி சொல்லப்படுகின்ற பணம் கிடைத்தாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொரிதான் என்பதும் இப்போது அனைவருக்கும் தெரியும்.
நாடாளுமன்றத்தில் உள்ள கணிசமான தொகையினருக்கு கல்வி அறிவு கிடையாது என்ற ஒரு வலுவான கருத்தும் நாட்டில் இருக்கின்றது.ஆனாலும் அங்கு இருக்கின்ற படித்தவர்களின் கதைகள் செயல்பாடுகளுக்கும் எந்தப் பெரிய வித்தியாசங்களும் கிடையாது என்பது நாம் பார்த்து வருகின்ற விடயங்களே.! செல்வாக்கான ஒரு அமைச்சர் ஜப்பான் நிறுவனமொன்றிடம் பெரும் தொகை பணத்தை இலஞ்சமாகக் கோரினார் என்ற காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டா அவரை பதவியில் இருந்து தூக்கினார். ஆனால், ரணில் அவருக்கு செல்வாக்கான அமைச்சுக் கொடுத்து இன்று அழகு பார்க்கின்றார்.அந்த அமைச்சரும் ஒரு செல்வாக்கான சட்டத்தரணி மூத்த அரசியல்வாதியும் கூட என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதும் தெரிந்ததே.அவரும் ஒரு சட்டத்தரணி படித்தவர்.!
பேராசிரியர் சன்ன விஜேசுமன கடந்த காலங்களில் டாக்டர் சாபிக்கு எதிரான இனவாத நோக்குடன் அபாண்டங்களை கட்டவிழ்த்து விட்டதில் முன்னோடியாக இருந்திருக்கின்றார். இதுபோன்று படித்தவர்கள் பார்த்த அட்டகாசங்களை நாம் இங்கு பட்டியலிடப் போனால் இந்தக் கட்டுரை வேறு பக்கம் போய்விடும்.எனவே அந்தப் பெரும் குப்பைகளை நாம் இங்கு கிளற விரும்பவில்லை.நமது அரசியல்வாதிகள் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லோருமே நம்மை ஏற்றி விட்டார்கள். தொடர்ந்தும் அதனைத்தான் செய்ய முயற்சிக்கின்றார்கள் என்பது நாம் ஒவ்வொருவருக்கும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது.எனவே அவர்கள் கதைகளை நம்பி ஆகாயத்தில் நீந்தியும் ஆழ்கடலில் நடந்தும் வித்தை காட்ட முடியும் என்று இன்னும் நம்புகின்றீர்களா என்று நாம் குடிமக்களைக் கேட்கத் தேன்றுகின்றது.
ஆகாயத்தில் மனிதனால் நீந்தவும் முடியாது,ஆழ்கடலில் அவனால் நடக்கவும் முடியாது என்று இப்போதாவது உங்களுக்குப் புரிகின்றதா? தேர்தல் என்று ஒன்று வருமாக இருந்தால் அதில் எப்படி வெற்றி பெறுவது என்பது எமக்குத் தெரியும் என்று ஆளும் மொட்டுக் கட்சியினர் தற்போது பகிரங்கமாக பேசி வருகின்றார்கள்.இது எப்படிச் சாத்தியம்! அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிகின்றது இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை ஏமாற்றி தமக்கு பிழைத்துக் கொள்ள முடியும் என்பதில் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றது.
இந்த நம்பிக்கை ஆளும் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தமிழ்-முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.எனவே தான் அவர்கள் ஆகாயத்தில் நீந்துவதற்கும் ஆழ்கடலிலல் நடக்கவும் எமக்கு அவர்களும் தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களுக்கும் தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றி அரசியல் வியாபாரத்தை வெற்றிகரமாக நடாத்த முடியும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கின்றது.
இந்த நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை சமூகங்களும் மிகப் பெரிய ஏமாற்றுப் பொறி வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.இதிலிருந்து அவர்களே தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். அவர்களை யாரும் விடுவிக்க மாட்டார்கள் என்பதை நாம் தினம்தோறும் நடக்கின்ற சம்பவங்களில் பார்த்து வருகின்றோம்.நமது அரசியல்வாதிகள் கடவுள் கூட நம்மை காப்பாற்ற முடியாத இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள்.இதுதான் இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனின் நிலையுமாக இருக்கின்றது.தமக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த ஆபத்தை இன்னும் நாட்டு மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல்தான் நடந்து கொள்கின்றார்கள் என்று நமக்கு யோசிக்க வேண்டி இருக்கின்றது.
எமது இந்த விளக்கங்களில் இருந்து நாம் யாரையும் ஆதரிக்கும்படியோ எதிர்க்கும்படியோ சொல்ல வரவில்லை. நாடு மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழிகளிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றது.அந்த வலையிலிருந்து நம்மையும் நமது சந்ததியினரையும் மீட்டெடுத்துக் கொள்ள நாம் முனைய வேண்டும் அவ்வளவுதான்.
இந்த வருடத் துவக்கத்தில் ஐ.எம்.எப் உதவி தமக்குக் கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.ஆனால் பிந்திய தகவல்களின்படி அந்த உதவி எதிர்பார்த்தபடி உடனடியாக நம்மை வந்து சேர வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு.என்று ஆளும் தரப்பு அரசியல்வாதிகளே தற்போது பகிரங்கமாகப் பேசி வருகின்றார்கள்.இந்த நிலையில் இன்று நாட்டு மக்கள் அனைவரும் பிச்சைக்காரன் என்ற நிலையில்தான் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பிச்சைக்காரர்களிடம் இருக்கின்ற சில்லறைக் காசை பறித்துத்தான் இனிவரும் நாட்களில் அரசு பணத்தை தேட முனைகின்றது.
வைத்தியசாலைகளில் மருந்துகள் கிடையாது.எனவே மருந்துப் பொருட்களைக் கூட கடனுக்கு வாங்கத்தான் அரசு முயன்று கொண்டிருக்கின்றது.இந்தியா ஒரு தொகை மருந்து வகையை உடனடியாக கொடுக்க முன்வந்திருக்கின்றது. இந்தியாவும் இப்படி எத்தனை முறை உதவி என்ற பேரில் உதவிகளைச் செய்ய முடியும்.சீனாவுடன் நெருக்கமாக இலங்கை சென்று விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்த உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.கடந்த வியாழக்கிழமை கடனுக்கு 500 ஜீப் வண்டிகளை கையளிக்கின்ற வைபவமொன்றில் இந்தியத் தூதுவர் கலந்து கொண்டிருந்தார்.அரசு பொலிஸ் படையை பலப்படுத்துவது தெரிகின்றது.இது ஜனாதிபதியின் ஹிடலர் கதைக்கும் உறவு இருக்கலாம் என்றும் யோசிக்க இடமிருக்கின்றது.
அடுத்து ஏற்கெனவே மின்சாரக் கட்டணம் ஆகாயத்துக்கு உயர்ந்திருக்கின்ற நிலையில் அதனை மீண்டும் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.நிச்சயமாக அது வருகின்ற 2023 ஜனவரியில் நடக்கும் என்று துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பகிரங்கமாகக் கூறிக் கொண்டிருக்கின்றார்.எனவே மின்சாரக் கட்டணங்கள் விண்ணையும் தாண்டி செல்ல இருக்கின்றது.
ஆனால் இதுவரை அதிகாரப் பதவியில் இருக்கின்ற அறுபதுக்கும் மேட்பட்ட அரசியல்வாதிகள் 5000 ம் கோடி ரூபாய்களுக்கும் மேலாக மின்சார சபைக்கு கட்டணங்களைச் செலுத்த வேண்டி இருப்பது, பதவி மற்றும் தனிப்பட்ட பெயர் வாரியாகவும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கைகளுமில்லை. அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படவுமில்லை.ஆனால் ஒரு பாமரன் தனது கட்டணத்தை ஓரிரு மாதங்கள் செலுத்தாது விட்டால் அவனது மின் வசதி உடனடியாகத் துண்டிக்கப்பட்டு விடுகின்றது.அதேபோன்று அரசுக்கு நெருக்கமானவர்கள் வங்கிகளில் பெற்றிருக்கும் பில்லியன் கணக்கான பணம் மீள் செலுத்தப்படாமல் இருக்கின்றது.அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.இதே வேலையை ஒரு சாதாரண பிரஜை செய்திருந்தால் அவருக்கு இந்த சலுகை இருக்குமா?
அண்மையில் இலங்கைக்கு சில துறைகளில் உதவுவது தொடர்பான ஒரு சந்திப்பு கொழும்பில் நடந்தது.அந்த வைபவத்துக்கு தென் கொரியப் பிரமுகர் குறித்த நேரத்துக்கே அங்கு வந்து அமர்ந்திருந்தார்.
ஆனால் கூட்டத்துக்கு வர வேண்டிய நமது அமைச்சர் குறிப்பிட்ட நேரத்தை விட முப்பது நிமிடங்கள் தாமதமாக அங்கு வந்திருக்கின்றார். இதனைப் பார்த்த கொரியப் பிரமுகர் தான் பேசுகின்ற போது தனது நாட்டில் ஒரு அமைச்சர் இப்படி நடந்து கொண்டால் அவருக்கு என்ன நடந்திருக்கும் என்பதனை அவர் பேசுகின்ற போது அமைச்சர் முகத்திற்கே சுட்டிக்காட்டி இருக்கின்றார். இப்படி அவமானப்பட்ட பின்னராவது நம்மவர்கள் திருந்தி விடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.என்றாலும் கொரிய அரசியல்வாதியின் துணிவை நாம் பாராட்ட இந்தக் குறிப்பை இங்கு பதிகின்றோம்.
நமது அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்காக தேர்தல்களில் நிற்பது மக்கள் சேவைக்காக அல்ல. அவர்களதும் அவர்களைச் சார்ந்தவர்களதும் தனிப்பட்ட நலன்கள் சார்ந்த விடயங்களைக் கவனிப்பதற்காக மட்டுமே என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.இன்னும் பலர் அரசியலை தமது தொழில் என்று அங்கு வருகின்றார்கள். இது பிழைப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரம்.எனவே குடிமக்கள் இந்த அநியாயங்களில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கான மாற்றங்களைக் கண்டறிய வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
நன்றி - தினக்குரல்