நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?
22 கார்த்திகை 2022 செவ்வாய் 16:42 | பார்வைகள் : 8122
சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்தியரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது. மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை, எனது சிறிய வயதில், பல்வேறு சந்தர்பங்களில் கேட்டிருக்கின்றேன். இது சரியானதொரு பார்வைதானா -என்னும் கேள்வி இருந்துகொண்டேயிருந்தது. 2002இல், யாழ்வீரசிங்கம் மண்டபத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மானுடத்தின் தமிழ் கூடல் இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் மு. திருநாவுக்கரசு (திருமாஸ்டர்) பேசுகின்றார்.
நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று சிங்களவர்கள் மோடர்கள் அல்லர். அவர்களின் ராஜதந்திர ஆற்றல் அபரிமிதமானது. மேற்குலகில் மாக்கியவல்லியையும் பிஸ்மார்க்கையும் படித்த ஜே.ஆர்ஜெவர்த்தன, கீழைத்தேயத்தின் கௌடில்யரையும் படித்தார். கௌடியல்யர் கூறுகின்றார்: உனக்கு இரண்டு எதிரிகள் இருந்தால், ஒரு எதிரியை நண்பணாகிக்கி, இன்னொரு எதிரியுடன் மோதவிடு, இறுதியில் உனது இரண்டு எதிரிகளும் இல்லாமல் போவார்கள். இதுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். ஒரு எதிரியான இந்தியாவை நண்பணாக்கி, இன்னொரு எதிரியான விடுதலைப் புலிகளுடன் மோதச் செய்தனர். சிங்களவர்களின் அபாரா ராஜதந்திர ஆற்றல் தொடர்பில் பார்வையாளார்களை, திரு திக்குமுக்காடச் செய்தார். அதே போன்று, வரலாற்றியலாளர் பேராசிரியர். இந்திரபாலா கூறிய ஒரு கருத்தையும் திருநாவுக்கரசு, நினைவுபடுத்தியிருந்தார். அதாவது, ஒரு குட்டித் தீவு, பிரமாண்டமான இந்தியாவிற்கு அருகில், இரண்டாயிரம் வருடங்கள் தனித்துவமாக தப்பிப்பிழைக்க முடிந்திருக்கின்றதென்றால், அது மூளையினால்தான் சாத்தியப்பட்டது. சிங்களவர்களின் அறிவாற்றல் தொடர்பில் விடுதலைப் புலிகளின் மேடையிலேயே திருநாவுக்கரசு புகழ்ந்து கொண்டிருந்தார். எனக்குள் எழுந்த கேள்வி, சரி, அவர்கள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் ஏன் இவற்றை தமிழர்களால் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியாமல் போனது? நாங்கள் புத்திசாலிகளல்லவா!
சீன போரியல் நிபுனர் சன் சூ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறியது. நீ ஒவ்வொரு போரில் தோற்கின்ற போதும், எதிரி உன்னைவிட பலமானவனாக இருந்தனால்தான் நீ தோற்றுப் போனாய் என்று கூறாதே, நீ பலவீனமாக இருந்ததால் தோற்றுப் போனாய் என்று கூறு. ஆனால் நமது சூழலில் ஒரு பார்வைக் குறைபாடுண்டு. நாம் தோல்வியடையும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் மற்றவர்கள் மீதே விரல் நீட்டுகின்றோம். இந்தியாவின் மீது விரல் நீட்டுகின்றோம். அமெரிக்காவின் மீது விரல் நீட்டுகின்றோம். இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உலகத்தின் மீதும் விரல் நீட்டுகின்றோம். இது எவ்வாறென்றால், பரிட்சையில் சித்தியடைந்தால், அது மாணவனின் கெட்டித்தனம், பரிட்சையில் தோல்விடைந்தால், அது ஆசிரியரின் பிரச்சினை. இந்த சிந்தனைப் போக்கே எங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது.
2009இற்கு முன்னர் நம் அனைவரது விருப்பமும் விடுதலைப் புலிகள் வெற்றியடை வேண்டும் என்பதாகவே இருந்தது. 95 வீதமான தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளின் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர். ஏதாவது அதிசயங்கள் நடந்தாவது அவர்கள் வென்றுவிடுவார்கள் என்பதே சாமானிய தமிழனின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இறுதியில் அனைத்தும் நிராசையானது. உண்மையில் அது வெறும் தோல்வியல்ல. நாம், நமது அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், சிந்திப்பதற்கும் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம். ஆனால் அவ்வாறானதொரு தேடலை செய்ய நம்மால் முடியவில்லை. நமது தவறான அரசியல் புரிதல்களும், இயலாமைகளும் நம்மை தடுத்தது. இன்று யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போதும் கூட, சுலோகங்களை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் முன்வைக்கும் சுலோகங்களில் எவற்றையுமே எங்களால் சாத்தியப்படுத்த முடியவில்லை. இப்போதும் சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றோம். சமஸ்டிதான் தேவையென்பதில் எவருக்கு முரண்பாடுண்டு? ஆனால் அதனை எவ்வாறு அடையப் போகின்றோம்? 1949இல், இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட போது, அதன் இலக்கு சமஸ்டியடிப்படையிலான அரசியல் ஏற்பாடொன்றை பெறுவதுதான். ஆனால் அதனை அடைவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை செல்வநாயகம் புரிந்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, ஆகக்குறைந்தளவிலாவது, சில அரசியல் எற்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில், பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். ஆனால் தென்னிலங்கையின் சிங்கள இனவாத அரசியல் சூழல், அதனை உள்வாங்கிக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே செல்வநாயகம் தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நகர்ந்தார். ஆனால் அதனை எவ்வாறு அடைவதென்னும் வழிமுறை அவருக்கு தெரியாது. அது என்ன வழிமுறை? இந்தக் கேள்விக்கு பதிலாக வந்ததுதான், தமிழ் ஆயுத இயக்க அரசியலாகும்.
தமிழர் அரசியல் எப்போது, ஆயுதவழிமுறையை தழுவிக் கொண்டதோ, அப்போதே அன்னிய தரப்புக்களின் தலையீடுகளும் தமிழ் அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. ஆயுத பயிற்சிக்காக பலதரப்பட்ட அன்னியர்களை அணுகும் போக்கும் உருவாகியது. தெரிந்தும், தெரியாமலும் பல்வேறு முகவர்கள் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்தனர். இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் அதிகாரியான விக்டர் ஒட்ரோவ்ஸ்கி எழுதிய நூல், அந்தக் காலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மொசாட் ஒரே நேரத்தில், சிறிலங்கா இராணுவத்திற்கும் பொதுவாக புலிகளென்று அறியப்படும் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பயற்சியளித்தமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தக் காலத்தில் புலிகளென்று அறியப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். அன்றைய உலக அரசியல் சூழலில், தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்குள், எவ்வாறெல்லாம் அன்னிய தரப்புக்கள் உள்நுழைந்தன என்பதற்கு, இதுவொரு சிறந்த உதாரணமாகும். எந்தவொரு அன்னிய தரப்பும் தங்களின் நலன்களை புறம்தள்ளி செயற்படாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்தியா, ஈழத் தமிழர் பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்தது. தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தது. இதன் தொடர்சியாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. தமிழர்களின் நண்பனாக வடக்கு கிழக்கில் கால்பதித்த இந்திய அமைதிப் படையினர், எதிரியாக நாட்டைவிட்டு வெளியேறும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. இதன் பின்னரான மூன்றுதசாப்த கால விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.
முள்ளிவாய்காலுக்கு பின்னரான அரசியல் முற்றிலும் சம்பந்தனின், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் காலத்தை சம்பந்தனால் சரியாக கையாள முடிந்ததா? மீண்டும் தோல்வி தொடர்பிலேயே விவாதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உருவாகியது. மகிந்த ராஜபக்ச காலத்தின் விடயங்கள் தொடர்பில் பேசுவதில் பயனில்லை. மகிந்த ராஜபக்ச முற்றிலும் வெற்றிப் பெருமிதத்தோடு மட்டும்தான் விடயங்களை அணுகியிருந்தார். எனவே மகிந்த ராஜபாக்சவின் காலத்தில் கூட்டமைப்பால் விடயங்களை நகர்த்த முடியவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.
ஆனால் 2015இல் தமிழர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் அப்படியல்ல. அது சில சாதகமான வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. இந்தியாவின் உதவியோடு சில விடயங்களை முன்னெடுப்பதற்கான வாய்புக்கள் ஏற்பட்டது. ஆனால் சம்பந்தன் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சாத்தியமற்ற புதிய அரசியல்யாப்பின் பெயரில் காலத்தை விரயம் செய்திருந்தார். அப்போது இந்தக் கட்டுரையாளர் உட்பட, பலரும் ஒரு விடயத்தை வலியுறுத்தியிருந்தனர். அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையை பலப்படுத்த முயற்சியுங்கள். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்கு இந்தியாவின் உதவியை கோராலாம். ஏனெனில், யுத்தம் முடிவுற்ற பின்னர், 2009இல், சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டி மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், 13வது திருத்தச்சட்டம் அதற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுற்ற உடனேயே ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் 13வது திருத்தச்சட்டம் வலியுறுத்தப்பட்டதிலிருந்து, விடயங்களை சம்பந்தன் தரப்பு புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனை கவனமாக பற்றிப்பிடித்திருக்க வேண்டும். இங்கு 13இல் என்ன இருக்கின்றது, என்ன இல்லை என்பதல்ல விடயம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, பற்றிப்பிடிப்பதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது மரக்கட்டையாக கூட இருக்கலாம். கரைசேர்வதே முதல் தேவையாகும். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதிய அரசியல் யாப்பென்னும் பெயரில், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சம்பந்தன் நாசமாக்கினார். நாங்கள், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் பயணித்துவிட்டோம். புதிய அரசியல்யாப்பை நெருங்கிவிட்டோம், என்றவாறு கதைகள் சொன்னார். இறுதியில் அனைத்தும் புஸ்வானமாகியது. மீண்டும் தமிழர் அரசியல் நகர்வுகள் தோல்விலேயே முடிந்தது.
இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் தோல்வி பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கப் போகின்றோம். தோல்வி பற்றியே விமர்சித்துக் கொண்டிருப்பது? தோல்வி பற்றியே அங்கலாய்த்துக் கொண்டிருப்பது? நமது இயலாமைகளுக்கான பழியை மற்றவர்கள் ஏன் நமது அரசியல் நகர்வுகள் தொடர்ந்தும் தோல்வியடைந்து கொண்N;டயிருக்கின்றது? ஒன்றில் நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையா அல்லது நல்ல தலைவர்களை தமிழ் சமூகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது தமிழர் அரசியல் ஏதோவொரு முள்ளில் சிக்கியிருக்கின்றதா, அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும், தமிழர்கள் அரயல்ரீதியில் மட்டுமல்ல, சமூக பொருளாதார நிலையில் மேலும் பின்நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளை ஒரு சொல்லில் மதிப்பிடுவதனால், தீர்வும் இல்லை முன்னேற்றமும் இல்லை. சமூகரீதியான முன்னேற்றம் தொடர்பிலேயே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. நாம் ஓய்வில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றோம். எழுதிக் கொண்டிருக்கின்றோம். விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஏன்? தமிழ் சமூகம் இதற்கான பதிலை கண்டடையாவிட்டால், தோல்விகள் மட்டுமே நமது கதையாக நீண்டுசெல்லும்.